பெருநாள் அன்னிக்கு நிம்மதி இல்லாமப் போச்சு.

மூணு நாளா இடுப்பை ஒடிச்சுப்புட்டாங்க…!

பெருநாள் அன்னிக்கு கூட எங்களுக்கு நிம்மதி இல்லாமப் போச்சு. இந்தப் புள்ளைங்கள பெத்ததுக்கு சும்மா இருந்திருக்கலாம். தெனமும் எழும்புனா புள்ளைங்கள வேலைக்கு அனுப்புறது, துணி தொவைக்கிறது, அப்புறம் மத்தியான சாப்பாடு, நைட்டு சாப்பாடுன்னு எப்ப பார்த்தாலும் மிசின் மாதிரி அதையே திருப்பி திருப்பி செஞ்சுக்கிட்டு கிடக்கிறோம். ஏன்டா பொம்பளயா பொறந்தம்னு வெறுத்துப் போச்சு. ஒரு நாளு படுத்துகிட்டா கூட ஊடு நாறிப் போவுது. முன்னாலெல்லாம் துணிமணிங்க கொஞ்சமாத்தான் இருக்கும். இந்தக் காலத்துல 5 பேருக்கே தெனமும் 10-15 துணி சேருது. கை காலெல்லாம் வலிக்குது.

நான் இந்த கடிதத்த ஒங்களுக்கு ஏன் எழுதினேன்னா இந்த வருசம் ஹஜ் பெருநாள்ல எங்க ஊட்ல நடந்த கொடுமையை எல்லாத்துக்கும் சொல்லனும்னுதான் எழுதுறேன். நான் எழுதினத ஒங்க பத்திரிகையிலே அப்படியே போடுங்க!

எங்க வீட்டுல என்னுடைய மூத்த பையன் தவ்ஹீது ஜமாஅத்துல இருக்கான். இரண்டாவது பையனுக்கு PJ அண்ணன பிடிக்காது. அதனால “ஜாக்” அமைப்பில இருக்கான். எங்க வீட்டுக்காரரு ஜமாஅத்து நிர்வாகத்துக்கு பயந்துகிட்டு அவங்க சொல்லுறதுக்கு தலைய ஆட்டுவாரு. அப்படின்னா ஒரு நிமிசம் என் நிலமைய கொஞ்சம் நெனைச்சுப் பாருங்க!. இந்த ஹஜ்ஜுப் பெருநாள் வந்துச்சு பாருங்க. மூணு நாளா நான் படாதபாடு பட்டுட்டேன். என் கஷ்டத்தை நான் யாருகிட்ட போய் பொலம்புறதுன்னு தெரியல.

மொத நாலு செவ்வாக்கிழமை என்னோட ரெண்டாவது பையன் “ம்மா இன்னிக்கு தான் பெருநாள். வா தொழுகப் போவோம்னு” கூப்புட்டான். சரி, அவன் மனசு நோக கூடாதுன்னு போய் தொழுதுட்டு வந்து கறி வாங்கி ஆக்கி கொடுத்தேன். ரெண்டாவது நாளு புதன்கிழமை ஊரே பெருநாள் கொண்டாடினிச்சு. நானும் என் வீட்டுக்காரரும் எங்க வீட்டுல இன்னொரு ஆள் இருக்கு. ஒங்க கல்வி நிகழ்ச்சிய பார்த்து காலேஜ்ல சேர்த்துவுட்டு இப்ப காசு காசுன்னு என் உசுர வாங்கறா! என் பொம்பள புள்ளைதான். நாங்க மூணு பேருமா சேர்ந்து போய் தொழுதுட்டு வந்து அன்னிக்கும் கறி வாங்கி பிரியாணி வச்சு சமைச்சு முடிக்க 4 மணியாச்சு. நான் ஒருத்தி மட்டும் கெடந்து அவ்வளவு வேலையும் பார்த்து முடிக்க அம்புட்டு நேரமாச்சு.

நான் வேலையில்லாம பெத்தேனே ஒரு பொம்புள புள்ளைய… தெண்டம்! ஒரு வேல பார்க்க மாட்டேங்கிறா. எந்த நேரமும் டி.வி.தான் பார்க்கிறா. என்னத்த சொல்றது.

மூனாவது நாளு காலயில மூத்த பையன் வந்து இன்னிக்குதாம்மா பெருநாளுன்னு சொன்னான். எனக்கு ஒன்னுமே புரியல. அப்ப நேத்து நாங்க தொழுவுனது என்னான்னு கேட்டேன். அது டூப்பிளிகேட்டுன்னு சொன்னான். எனக்கு கோவம் வந்துச்சு. ஏன்டா இப்படி பன்றீங்கன்னு கேட்டேன். நீ தொழுவ வர்ரீயா இல்லியான்னு கத்த ஆரம்பிச்சுட்டான். அவங்க கூப்புட்டவுடன் போய் தொழுவுன மாதிரி எங்கூடயும் வான்னு கையபுடிச்சு இழுத்தான். சரின்னு அவங்கூடயும் போய் மூணாவது நாளா தவ்ஹீத் ஜமாஅத் நடத்துன தொழுகையை தொழுதுட்டு வந்து அன்னிக்கும் கறி எடுத்து ஆக்கி கொடுத்து மூனு நாளா என் இடுப்பு எலும்பு முறிஞ்சு போச்சுங்க. இனி என்னால தாங்க முடியாது.

என்ன பெத்த ராசா மாருவளா…! நீங்க சமுதாயத்துக்கு தொண்டு செய்யறது எனக்கு நல்லா தெரியுது. அத ஒன்னும் நான் குத்தஞ்சொல்லல. ஆனா என்னைய மாதிரி பொம்பளைங்கள கொஞ்சம் நெனைச்சுப் பாருங்க! எங்க பயலுகளுக்கு நீங்க என்னாத்த சொல்லிக் கொடுக்கறீங்களோ… எங்க உசிரு போவுது.

சொர்க்கத்துக்கு வழிகாட்டுறோம்னு சொல்லி எல்லாருமா சேர்ந்து எங்களுக்கு இங்கயே நரக வேதனைய அனுபவிக்க வெச்சுட்டீங்களே! இது ஒங்களுக்கு நாயமா படுதா?.

எல்லா மக்களும் ஒரே நாள்ல பெருநாள் கொண்டாடினாக்கா நாங்க பொம்பளைங்க சேர்ந்து, நீங்க, ஜமாஅத்காரங்க, தலைவருங்க, அமைப்பை நடத்துறவுங்க எல்லாரும் சொர்க்கத்துக்கு போவனும்னு துவா செய்வம்ல. இன்னொரு முக்கியமான விசயமுங்க.

எங்க வீட்டுல தொல்லை தாங்க முடியலங்க. வாப்பாவும் மகனுங்களும் அடிச்சுக்கிறாங்க. வாப்பா ஒன்னு சொன்னா அதுக்கு மார்க்கத்துல ஆதாரம் எங்கன்னு என் பசங்க கேக்கறானுங்க. என் வீட்டுக்காரரு அந்த காலத்து மனுசன். ஏதோ அவருக்கு ஹஜரத்மாரு சொன்ன மார்க்கம்தான் தெரியும். அறுபது வயசாகற அவருகிட்ட போய் ஆதாரம் குடுன்னு கேட்டா அத எந்த கடையில வாங்குறதுன்னு கேக்குறாரு. அவருக்கு கோவம்தான் வருது. வீட்டுல எப்ப பார்த்தாலும் ஒரே பெரச்சனைதான். ஒங்க அமைப்புல பயான் செய்யும்போது எல்லாரும் ஒத்துமையா, பொறுமையா இருங்கன்னு சொல்லிக் கொடுங்க. பெரியவங்களயும் பெத்தவங்களயும் மதிக்கனும்னு சொல்லிக் கொடுங்க.

இததானே நபியும் சொல்லித் தந்தாங்க.

வேதனையுடன்
பாப்பம்பட்டி பாத்திமுத்து ஜொகரா
வண்ணாரப்பேட்டை.
சென்னை.

தகவல் : http://www.samooganeethi.org/