ஜூஸ் பாக்கெட்டுக்குள் பாம்பு குட்டி:


கர்நாடக மாநிலம் உத்தர்கன்னடா பகுதியைச் சேர்ந்தவர் செய்யது முகம்மது சப்வான். இவர் அருகில் உள்ள பேக்கரியில் இருந்து பிரபல கம்பெனி தயாரிப்பான மாம்பழ ஜூஸ் பாக்கெட்டுகளை வாங்கி வந்தார். அதில் ஒரு பாக்கெட்டை எடுத்து அவரது மகள் சாஹிபா (22), சிறிய துளை வழியாக ஸ்டிரா மூலம் உறிஞ்சி குடித்தாள்.
பாதியை குடித்து விட்டு, மீதியை தனது தாயார் உம்மே சல்மாவிடம் கொடுத்தார். அவர் ஸ்டிரா மூலம் உறிஞ்சியபோது ஜூஸ் வரவில்லை. குழப்பம் அடைந்த சல்மா உறிஞ்சுவதை நிறுத்தி விட்டு ஸ்டிராவை வெளியே எடுத்தார்.

அப்போது ஸ்டிராவின் துளையில் தலை மாட்டிய நிலையில் 3 அங்குல நீள பாம்பு குட்டி ஸ்டிராவுடன் சேர்ந்து வெளியே வந்தது. ஜூஸ் பாக்கெட்டுக்குள்ளேயே ஏற்கனவே அந்த பாம்புக் குட்டி செத்துப் போய் இருந்துள்ளது. அதிர்ச்சியில் அந்த பாக்கெட்டை தூக்கி வீசிய சல்மா, உடனடியாக மயங்கி விழுந்தார்.
தாயும், மகளும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜூஸ் பாக்கெட்டுக்குள் பாம்புக் குட்டி செத்துக் கிடந்த விவரத்தை பேக்கரி உரிமையாளரிடம் சப்வான் தெரிவித்தார். அவர் இதுபற்றி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.