கே.எம்.முஹம்மத்
கொடியது கொடியது மதுவின் கேடு - அதில்
நன்றி; சமரசம்
கொடியது கொடியது மதுவின் கேடு - அதில்
அழிவை நோக்கி தலைமுறைகள் பயணம்
இழிவை நோக்கி தேசத்தின் பயணம்
தற்கொலைக்குத் தூண்டுதல் சட்டப்படி குற்றம் - இங்கு
தவணைமுறைத் தற்கொலைக்குத் தூண்டுவதுதான்
அரசின் வருவாய்த் திட்டம்
அதனால் -
எந்தக் கட்சி ஆட்சியிலும் எப்போதுமிங்கே
டாஸ்மார்க் மசோதா நிறைவேற
பாஸ்மார்க் ஓட்டு விழும்
குவார்ட்டருக்கு பணம் கொடுத்தால்
'குடி' மக்கள் ஓட்டு விழும்
கொஞ்ச நேர போதைக்கு நஞ்சைக் குடிக்கும்
குடும்பததலைவன் - தன்
நெஞ்சில் கிடக்கும் தாலியை
கண்ணீரில் ஒற்றும் சுமங்கலிகள்
குடிகாரக் கணவன் குடல்வெந்து செத்தபோது
அமங்கலியான ஒருத்தியின் புலம்பல் கேளீர்!
"மதுக்க்டைக்குப்போகாதேன்னு ஒன்ன
மன்றாடித் தடுத்துவந்தேன்
"மார்வாடிக் கடைக்குப் போன தாலியை
போராடி மீட்டு வந்தேன்
"இப்போ எம் மார்மேல தாலி இருந்தும்
மச்சான் நீ போயிட்டீயே..,
"எப்பவுமே தாலியில்லாம இருக்கிற ஒரு நேரம்
வருமின்னு நினைச்சுதான்
அப்பப்போ அத அடமானம் வெச்சியோ!"
குழந்தைத்தொழிலை ஒழிப்போம்!
இது அரசின் முழக்கம்
குடிப்பதை நிறுத்தாமல் செத்துப்போகும்
அப்பனின் பிள்ளைகள் படிப்பதை நிறுத்தி
வேலைக்குப் போகும் இதுதான் இங்கே நடைமுறை வழக்கம்
'டாஸ்மார்க்' எனும் சாவுத்திட்டம் - அதன்
வருமானத்தில்தான் இங்கு வாழ்வுத்திட்டம்!
கஜனாவுக்கு சில நூறு கோடிகளை டாஸ்மாக் தருது
மதுவின் தீங்கால் பல நூறு கோடி நாசமாகுது.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு,
சாலை விபத்தில் உயிரிழப்பு
குற்றங்களின் அணிவகுப்பு இத்தனையும் மதுவென்னும்
சாத்தானின் அன்பளிப்பு
மது குடித்த நண்பா!
குடல்கறி உனக்கு சைடு டிஷ் :
நீ குடித்த மதுவுக்கோ உன் குடலே சைடு டிஷ் !
தலைக்ககவசம் விபத்தின்போது தலையையும் மூளையையும்
சிதறாமல் காக்கும் டாஸ்மாக் சகவாசம்
விபத்தின்றியே மூளையைச் சிதைக்கும்
மனிதனைச் சாகடிக்கும் மரணத்தைவிட
மனிதாபிமானத்தைச் சாகடிக்கும் மதுவே கொடியது
மனிதா உணர்ந்திடு!