எகிப்து புரட்சிக்கு வயது ஒன்று...! ஓயாத அலையுடன் தஹ்ரீர் சதுக்கம்..!

ஜனவரி 25ஓராண்டுக்கு முன்னர் இது போன்றதொரு நாளில்  தஹ்ரீர் சதுக்கத்தில் சிறியோர் முதல் பெரியோர்கள் வரை ஒன்று கூடிய போது, இது ஒரு புரட்சிப்புயலாக உருவெடுக்கும் என உலகம் மட்டுமல்ல எகிப்து மக்கள் கூட நினைக்கவில்லை.


கடந்த 30 ஆண்டுகளாக அதிகாரத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு ஆணைகள் பல வெளியிட்டுக்கொண்டிருந்த ஹுஸ்னி முபாரக்கை வேருடன் சாய்க்க அந்த மாபெரும் மக்கள் கூட்டம் சக்தி படைத்தது என்றும் நினைக்கவில்லை.
               துனிஷியாவிலிருந்து ஆரம்பித்த முல்லைப்பூ புரட்சியின் ஆவேசத்தால் உந்தப்பட்டு தெருவில் இறங்கிய  எகிப்து மக்கள் 18-வது நாள் முபாரக்கை வீழ்த்தியபோது உலக மக்கள் அதிசயத்தில் ஆழ்ந்தனர். புரட்சியின் ஓராண்டு விழாவை கொண்டாட கடந்த புதனன்று தஹ்ரீர் சதுக்கத்தில் கூடிய பத்தாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு ஓராண்டு முன்பிருந்த அதே ஆவேசமும், உணர்ச்சிப்பெருக்கும் காணப்பட்டது. ராணுவ ஆட்சியின் நிழலில் இருக்கும் நாட்டில் ஜனநாயகக்கனவுகளுக்காக அவர்கள் இப்போதும் உரத்த குரலில் கோஷங்கள் எழுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வயது நிரம்பிய புரட்சி, முழு வெற்றி அடையவில்லை என அவர்கள் அங்கலாய்க்கின்றனர்.
                 புரட்சியின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி தொன்றுதொட்டு நாட்டில் அமுலில் இருந்த அவசர நிலை ராணுவ ஆட்சி வாபஸ் வாங்கி விட்டது. ஆனால் தஹ்ரீர் சதுக்கத்தில் புதனன்று கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் ராணுவத்தின் கோரப்பிடியிலிருந்து நாட்டை முழு சுதந்திரத்திற்கு அழைத்து கொண்டு செல்லவேண்டுமென்ற கோரிக்கையைத்தான் வலியுறுத்தினர். அவசர நிலைமை வாபஸ் பெற்றது புரட்சியாளர்களை அவ்வளவாக திருப்திபடுத்தவில்லை. தெருவில் மக்களிடம் திருடர்களிடம் நடந்துகொள்வதுபோல் நடப்பது இன்னும் மாற்றம் ஏற்படவில்லை. என்று அவர்கள் கூறுகிறார்கள்.
             ராணுவ ஆட்சி ஒழிக! வெற்றி வரை புரட்சி! போன்ற முழக்கங்கள் ஒலித்ததாக பத்திரிக்கை செய்தி கூறுகிறது. 
புரட்சியாளர்களை திருப்திப் படுத்த ராணுவ ஆட்சி ஒளியும் வரை தஹ்ரீர் சதுக்கத்தை விட்டு நகரப்போவதில்லை என மக்கள் உறுதி பூண்டுள்ளனர் 
            இதற்கிடையே, புரட்சிக்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் முஸ்லிம் பிரதர் ஹுட் எனும் கட்சி 43 சதவிகிதம் வாக்குகள் பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து திங்களன்று முதலாவது பார்லிமெண்டு கூட்டமும் நடைபெற்றது.

 P.A. சையத் முஹம்மது