கோவை ஜமாஅத்துகள் ஒற்றுமையை நோக்கி...,!


                        
கோவையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில்,காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேமுதிக, பாமக, பாஜக, கொங்கு வேளாளர் கட்சி போன்ற தேசிய, மாநில கட்சிகளை பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு முஸ்லிம் கூட்டமைப்பின் வேட்பாளர் ஹாஜி.அமீர் அல்தாப் அவர்கள் 36,471 வாக்குகள் பெற்று 3 வது இடத்தை பெற்றுள்ளார்.

                    கொள்கைப் பிரிவினைகள்; இயக்க வேறுபாடுகள்; கட்சிப் பாகுபாடுகள்; என பிரிவினைகளில் மூழ்கி மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம், கருத்து முரண்பாடுகளையும், வேற்றுமைகளையும் கடந்து, தேர்தலில் ஒன்றுபட காரணம், கோவையில் 150 பள்ளிவாசல்கள் ஒன்றிணைந்த ஜமாஅத்துக்கள், ஐக்கிய ஜமாஅத் என்றும், சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு என்றும், இரண்டு அமைப்பாக செயல்பட்டு வந்தது. 
                    வார்டுகள் மறு சீரமைப்பு, எல்லை விரிவாக்கம் என்ற அரசின் நடவடிக்கையால் இரு அமைப்புகளும் ஒன்று கூடி ஆலோசித்தது, அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் பங்கேற்றன. மேயர் தேர்தலில் சமுதாய ஒற்றுமைக்காக அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் வார்டு தேர்தலில் சமுதாய இயக்கங்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படாததால் 2 கவுன்சிலர்கள் மட்டுமே கிடைத்தது. 


   தற்போது கோவையில் 150 பள்ளிவாசல்கள் ஒன்றிணைந்த ஜமாஅத்துக்கள் இரண்டு அமைப்பாக செயல்படாமல் ஒரே ஜமாத்தாக செயல்படவேண்டும் என்ற சிந்தனை, ஜமாஅத்துக்கள்  மத்தியிலும், சமுதாய மக்கள் மத்தியிலும் மேலோங்கி உள்ளது. இதன் முதல் கட்டமாக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மன்பஉல் அரபிக்கல்லூரி முதல்வர் மௌலானா முஹம்மது அலி ஹஜ்ரத் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு பொதுசெயலாளர் ஹாஜி, M.A. இனாயத்துல்லா, ஐக்கிய ஜமாஅத் பொதுசெயலாளர் ஹாஜி, A.அப்துல் ஜப்பார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

               சிறப்புரை ஆற்றிய மஸ்ஜிதுல் ஜன்னா இமாம் மௌலானா ஹாபிஸ் அப்துல் மாலிக் அவர்கள் கூறுகையில்,
                             கல்வி, பொருளாதாரம், அரசியல் பங்களிப்பு ஆகியவற்றிற்கு வழிகாட்டுகிற தளத்தில் இருந்து கொண்டு ஒற்றுமையின்மையால் பின்தங்கி இருக்கிறோம்,  ஜமாஅத் நிர்வாகிகள் சிலர் என்னால்தான் எல்லாம் ஆக வேண்டும் என்ற மனநோயாளிகள் போல் சமூகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார்கள். 
                             எல்லா துறைகளிலும் பிரகாசிக்க வேண்டிய ஜமாஅத்துக்கள், நிக்காஹ், தலாக், மைய்யித் அடக்கம் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளே பின்தங்கியிருக்கிறது. ஜமாஅத்துக்கள் தொலைநோக்கோடு நெடுங்காலத் திட்டத்தின் கீழ் பணியாற்றாவிட்டால் இந்த தலைமுறையும், அடுத்த தலைமுறையும் நம்மைக் குற்றவாளியாகக் கருதும், ஜுமுஆ செய்திகளின் சக்தியை உணராத சமுதாயமாக வாழ்கிறோம்.  வாழ்வின் எல்லாத்துறைகளுக்கும் ஜுமுஆவைப் பயன்ப்படுத்தாமலிருக்கிறோம். ஜமாத்தின் பணிகள் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு வழிகாட்டாவிட்டால் நடப்புத்தலைமுறையும், அடுத்தத் தலைமுறையும் கேள்விக்குறியாக இருக்கும். 

அடுத்து பேசிய மேயர் வேட்பாளரும், 
ஐக்கிய ஜமாஅத் தலைவருமான ஜனாப்.அமீர் அல்தாப் தனது உரையில்:
                       நான் இங்கு ஒரு ஜடமாக தான் இருக்கிறேன். இங்கே நான் தோற்று போனேன் ஆனால் சமுதாய ஒற்றுமை ஜெயித்தது, இங்கே நான் தோற்று போனேன் ஆனால் ஜமாத்துகளின் முயற்சி ஜெயித்தது.  கோவையின் வளர்ச்சியில் முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பு இல்லை என்ற கருத்து பரவலாக மீடியாக்களின் மூலம் தவறாக சொல்லப்படுகிறது.
                       இந்த தேசத்தில் விடுதலை வேள்வியில் இன்னுயிர் நீத்தவர்களில் பலர், குறிப்பாக மாப்பிள்ளைமார்கள் கோவையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்களில் பெரும்பாலரும் வியாபாரிகளாக இருக்கின்ற காரணத்தால் அவர்கள் சமூக வளர்ச்சிக்கு பங்காற்றவில்லை என்கின்ற தவறான கருத்து நிலவுகின்றது. ஆனால் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வியாபாரம் எவ்வளவு முக்கியத்துவம் என்பது நாடறிந்த உண்மை.
          ஜமாத்துகளின் பணி பல்வேறு தளங்களில் பரிணாமம் பெற வேண்டும். அதற்கு அடிப்படை ஒற்றுமை என்கிற மூலதனமே ஆகும்.
            தேர்தல் பணிகள் போது என்னை சிந்திக்க வைத்த ஒரு நிகழ்வை நான் குறிப்பிட விரும்புகின்றேன். ஒரு பகுதியில் சுமார் இருபது முஸ்லிம் பிச்சைக்காரர்கள் பரஸ்பரம் பேசி கொண்டிருந்தார்கள். அருகில் சென்று நான் விசாரித்தபோது, பக்கத்து முஹல்லாவில் இருக்கும் பகுதியில் கூட்டாக சென்று பிச்சை எடுக்காமல் எங்களுக்குள் ஒற்றுமையாக இருந்து தொகுதி பிரித்து பிச்சை எடுப்போம்ஒவ்வொரு வாரமும் வெள்ளி தோறும் இவ்வாறு எங்களுக்குள் ஒற்றுமையாக இருந்து பிச்சை எடுப்பது வழக்கம். பிச்சை எடுக்கும் அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை முஸ்லிம் சமூகத்தில் இல்லையே என்று சொல்லாமல் சொல்லியது போல் இடியாய் நெஞ்சில் குத்தி உணர்த்தியது .
                    நமது ஜமாத்தார்கள் சமுதாய ஒற்றுமைக்காக ஹரம் ஷரீபிலிருந்து  நாளுக்கு நாள் என்ன நடந்தது..? உங்கள் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்றும்..? மினாவிலும், அரபாவிலும், எங்கெல்லாம் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுமோ அங்கெல்லாம் தேர்தலுக்காக, ஒற்றுமைக்காக வேண்டி,  என் உடல் நலத்திற்காக வேண்டி மனமுருகி பிரார்த்தித்தார்களே அதற்காக கிடைத்த வெற்றி இது என கண்ணீர் மல்க பேசியது அனைவரையும் மணமுருக செய்தது. 
                          இந்நிகழ்ச்சியை சம்சுல் இஸ்லாம் பள்ளிவாசல் செயலாளர் ஹாஜி.V.A.கபீர் தொகுத்து வழங்கினார். 
செய்தி:  P.S.அப்துல் சலாம் 
போட்டோ :  M.சஹீர்