ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்திய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்திய ஆலோசனைக் குழுக் கூட்டம் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் 2011 டிசம்பர் 30 முதல் 2012 ஜனவரி 1 வரை நடைபெற்றது. அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் 19 பேரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

1. ஆதார் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்

ஆதார் திட்டத்தின் கீழ் நாட்டு மக்களுக்கு ஒருங்கிணைந்த அடையாள அட்டை, அடையாளக் குறியீட்டு எண் வழங்கும் திட்டத்தின் நோக்கம், அதற்காகப் பின்பற்றப்படும் நடைமுறை ஆகியன குறித்து தேசம் முழுவதிலும் ஏராளமான ஐயங்களும் நம்பிக்கையின்மையும் தோன்றியுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முன்பு ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற அமைச்சர்களின் கூட்டத்தில், அந்நியர்கள் சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் ஊடுருவுவதைத் தடுக்க, நாட்டு மக்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஆதார் அடையாள அட்டையும், குறியீட்டு எண்ணும் குடியுரிமைச் சான்றாகக் கருதப்படமாட்டாது என அரசு இப்போது கூறுகிறது.
ஆதார் அடையாள அட்டை வழங்கும் திட்டம், நாட்டு மக்களின் குடியுரிமையை மட்டுமன்று, அமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ள சட்டத்தின் ஆட்சி, அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றையே மீறுகிறது. பொருளாதார முறைகேடு நடைபெறக் காரணமாகிறது. ஏழைகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோர் ஒடுக்கப்படுவதை அதிகரிக்கச் செய்கிறது. தனிமனிதர்களின் அந்தரங்கத் தகவல்கள் வெளிவரக் காரணமாகிறது. தனிமனித வாழ்வைப் பாதுகாக்கும் உரிமை மீறப்படுகிறது. அரசிடமிருந்து மக்கள் பயன்பெறுவதையும் சேவை பெறுவதையும் குறைக்கிறது.
இந்தத் திட்டத்தினால் தேசிய, பன்னாட்டு முகமைகள், நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியனதாம் பயன்பெறப் போகின்றன. இந்தித் திட்டத்துக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிய வந்துள்ளது. ஏழை மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து இவ்வளவு பெரிய தொகை செலவழிக்கப்படுகிறது. இதுபோன்ற மிகப்பெரும் திட்டங்களை நிறைவேற்றும் முன் நாடாளுமன்றத்தில் விவாதித்து, மக்கள் பிரதிநிதிகளின் ஐயங்களைப் போக்கி, ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். அதற்கேற்ற தகுந்த சட்டங்களை இயற்றியிருக்க வேண்டும். ஆனால் இவை எதுவுமே நடைபெறவில்லை.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள்கூட இதற்கு ஆகும் அதிக செலவையும், தனிமனித உரிமை பாதிக்கப்படுவதையும் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் வேண்டாம் என முடிவெடுக்கின்றபோது, ஏழை நாடான இந்தியா இவ்வளவு பெரும் தொகையைச் செலவிட்டு இந்தத் திட்டத்தைத் தொடர்வது வியப்பைத் தருகிறது. எனவே மத்திய அரசு ஆதார் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்துகிறது.

2. லோக்பால்
இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க லோக்பால் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. உயர் நிலைகளில் நடைபெறும் ஊழலையும் முறைகேடுகளையும் தடுக்க ஓர் ஒழுங்குமுறை ஆணையம் கட்டாயம் தேவை. தொடக்கத்தில் இதுதான் லோக்பாலின் நோக்கமாக இருந்தது. ஆனால், இப்போது இது அரசியலாக்கப்பட்டுவிட்டது. கடந்த ஓராண்டாக அழுகையும் ஓலமுமாக இருந்த இப்பிரச்னையில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு தேசிய கட்சிகளுமே உருப்படியாக எதையும் செய்யவில்லை.
ஜமாஅத்தின் மத்திய ஆலோசனைக் குழு, மத்திய அரசையும், எல்லா அரசியல் கட்சிகளையும், அரசு சாரா அமைப்புகளையும் தேர்தல் அரசியல், குறுகிய ஆதாயங்கள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு பிரதமர், சி.பி.ஐ., பொறுப்பான எல்லா அரசு நிறுவனங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டமன்றங்கள், மேலவைகள், தனியார் நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள் உள்ளிட்ட அனைவரையும் விசாரிக்கும் அதிகாரம் படைத்த, வலிமையான லோக்பால் அமைப்பை அமைக்கத் தேவையான சூழலை உருவாக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது. ஒருவரது கல்வித் தகுதி, சட்டத் தகுதி, சமூகத்தில் அவர் அறியப்பட்டவரா என்று மட்டுமே பார்க்காமல், கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரரா, நம்பிக்கைக்கு உரியவரா என்பதைப் பார்த்து லோக்பால் அமைப்பின் தலைவராக நியமிக்க வேண்டும். லோக்பால் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்கும்போது பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவமும் அதில் கண்டிப்பாக இருக்கச் செய்ய வேண்டும்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அரசு, அரசியல்வாதிகள், பொதுமக்கள் ஆகியோரின் கவனத்தை ஓர் உண்மையின் பக்கம் ஈர்க்க விரும்புகிறது. ஊழல், பொதுப் பணத்தைக் கையாடல், முறைகேடாகப் பணம் சம்பாதித்தல் போன்ற தீமைகளை வெறுமனே சட்டங்களை இயற்றுவதால் மட்டுமே ஒழித்துவிட முடியாது. சட்டத்தை இயற்றுவதோடு நேர்மை, வாய்மை, கடமை உணர்வு ஆகியவையும் தேவை. மக்கள் மனங்களில் இறைவன் குறித்த அச்சத்தை விதைத்தால் மட்டுமே இந்தப் பண்புகள் மலர்வது சாத்தியம். நம்மைப் படைத்த இறைவன் எப்போதும் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நாம் என்னென்ன செயல்களைச் செய்தாலும் அதற்கு இறைவன் முன் பதில் சொல்லியாக வேண்டும் என மக்கள் நம்ப வேண்டும். இந்த நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே ஊழலை முழுவதுமாக ஒழிக்க முடியும்.

3. உணவுப் பாதுகாப்புச் சட்டம்
நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு மத்திய அரசு, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் இது சட்ட வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா நாட்டு மக்களை இலக்குக்குரியவர் ((Targeted), பொதுப் பிரிவினர் (General) என இருவகையினராகப் பிரிக்கிறது. இலக்குக்குரியவர்களுக்கு மட்டுமே உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இதன் மூலம் ஏழைகள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில், பெரும்பான்மையான மக்கள் உணவுப் பாதுகாப்பைப் பெற முடியாமல் தடுக்கப்படுகின்றனர். இது ஏழை மக்களுக்குச் செய்யும் அநீதியாகும். இலக்குக்குரியவர் எனும் பிரிவினரை அடையாளங் காண நடத்தப்பட்ட சமூக ஆய்வு, தவறான தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. கிடைக்கப்பெறும் தகவலின்படி, ஒரு விதவைப் பெண்ணுக்கு 18 வயதில் ஒரு மகன் இருந்தால் அப்பெண் ஏழையாகக் கருதப்படமாட்டாள். அதேவேளையில், கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒருவர் வேலை பெறுவதற்குக் குறைந்தபட்ச வயது 18 ஆகும். இவ்வாறு, இந்த ஆய்வில் நிகழ்ந்துள்ள தவறுகளையும் முரண்பாடுகளையும் சமூக சேவை அமைப்புகள் சுட்டிக் காட்டியுள்ளன.
பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக, அரசு இந்த மசோதாவில் திருத்தங்களைக் கொண்டுவந்து, இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் குறைந்தவிலையில் 35 கிலோ உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைப்பதை இந்தச் சட்டத்தின் மூலம் உறுதி செய்ய வேண்டும் எனும் கோரிக்கையையும் ஜமாஅத் ஆதரிக்கிறது. வாழ்வாதார உரிமை என்பது உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவ சிகிச்சை ஆகியன கிடைப்பதை உள்ளடக்கியது. இவை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் கிடைக்கச் செய்வதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்துள்ளது.

4. வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றும் இயக்கம்
வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கத்தைச் சேர்ந்த மக்கள் எழுப்புகின்ற பிரச்னைகளை ஜமாஅத் கவனத்தில் கொள்கிறது. இவர்கள் முழு உலகத்தின் முக்கியமான பிரச்னைகளை எழுப்புகின்றனர். என்றும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள ஏழை- செல்வந்தர் இடைவெளி, வேலையின்மைக்குக் காரணமான தவறான கொள்கைகள், வறுமை ஆகியன இன்று முழு உலகின் பொதுவான பிரச்னைகளாக உள்ளன.
வட்டியை அடிப்படையாகக் கொண்ட இரக்கமற்ற முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகள், சுரண்டல், ஏமாற்றுதல், பேராசை ஆகியனதாம் கடந்த நான்கு ஆண்டுகளாக உலகில் நீடித்துக் கொண்டிருக்கின்ற பொருளாதார மந்த நிலைக்குக் காரணமாகும். ஆனால், சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் பதிலாக மீண்டும் தவறான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதே யதார்த்த உண்மையாகும். பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்ட வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இலட்சக்கணக்கான டாலர்கள் அளவுக்கு நிவாரணமாக வழங்கப்படுகின்றன. ஆனால், இதனால் பாதிக்கப்பட்டுள்ள வேலையில்லாத ஏழைகள் மீது கவனம் செலுத்தப்படுவதே இல்லை. அமெரிக்காவுக்குப் பிறகு, ஐரோப்பாவின் பொருளாதாரத்தையும் இது தகர்த்துவிட்டது. இந்தப் பேராபத்துக்கு எது உண்மையில் காரணமாக உள்ளதோ அது புறக்கணிக்கப்படுகிறது.
வால் ஸ்ட்ரீட் போராட்டக்காரர்களின் உணர்வுகளுக்கு ஜமாஅத் மதிப்பளிக்கிறது. ஆனால், கோபப்படுதல், வருத்தப்படுதல், ஆர்ப்பாட்டம் செய்தல் ஆகியவற்றின் மூலம் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியாது என்பதையும் அவர்களுக்குச் சுட்டிக் காட்டுகிறது. தற்போது உலகுக்கு ஒரு மாற்றுப் பொருளாதார முறை தேவை. இஸ்லாமியப் பொருளாதார முறையானது வட்டி, சூதாட்டம், ஊகம் ஆகியன இல்லாதது. விழுமங்களை அடிப்படையாகக் கொண்டது. நீதிமிக்கது. சமத்துவத்தைக் கொண்டது. தற்போதுள்ள பிரச்னைகளைத் தீர்க்கவல்லது. எனவே நேர்மையான முறையில் இஸ்லாத்தின் போதனைகளை ஆய்வு செய்யுமாறு உலக மக்களையும் வால் ஸ்ட்ரீட் போராட்டக்காரர்களையும் ஜமாஅத் வேண்டுகிறது. இதிலிருந்து படிப்பினை பெற இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் கவனத்தையும் ஜமாஅத் ஈர்க்கிறது.

5. அரபுலகின் தற்போதைய நிலை
அரபு நாடுகளில் பொதுமக்களிடையே தோன்றியுள்ள விழிப்பு உணர்வு பல கோணங்களில் மகிழ்ச்சி அளிக்கக்கூடியது. சர்வாதிகாரத்துக்கும் , கொடுங்கோன்மைக்கும் எதிராக அமைதி வழிப் போராட்டங்களை மேற்கொண்டனர். துனீஷியா, எகிப்து நாட்டு மக்கள் கொடுங்கோல் ஆட்சியாளர்களைத் தூக்கி விசியெறிந்துவிட்டு, ஜனநாயக அரசு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஏமனிலும் இதற்கான வாய்ப்புகள் மலர்ந்துள்ளன.
எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமூனின் அரசியல் கட்சியான ‘அல் அஹ்ரார் வல் அதாலா’ (ஃப்ரீடம் அன்ட் ஜஸ்டிஸ் பார்ட்டி), துனீஷியாவின் அந்நஹ்தா ஆகியவற்றின் வெற்றி, தூய்மையான இஸ்லாமிய விழுமங்களின் அடிப்படையில் அமைந்த ஆட்சி நிர்வாகத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதர முஸ்லிம் நாடுகளுக்கு இவ்விரு நாடுகளின் நிர்வாகம் ஒளிவிளக்காய் அமையட்டும். மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம் உம்மத்தின் மீதும் அடிப்படையற்ற, தவறான பரப்புரைகள் வாயிலாக உலக மக்கள் மனங்களில் விதைத்துள்ள தவறான கருத்துகளை நீக்க இது உதவும்.
முஸ்லிம் நாடுகளில் தோன்றியுள்ள இந்த நல்ல மாற்றத்தை ஜமாஅத் நம்பிக்கையுடனும் கண்ணியத்துடனும் நோக்குகிறது. லிபியாவிலும் சிரியாவிலும் இதே போன்ற அமைதி வழிப் போராட்ட இயக்கங்கள்தாம் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இவ்விரு நாடுகளிலும் மேற்கத்திய நாடுகளின் தலையீட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக ஆகிவிட்டன. மேற்கத்தியத் தலையீடு லிபியாவின் அமைதி வழிப் போராட்டத்தை வன்முறைப் போராட்டமாக மாற்றிவிட்டது. விரும்பத்தகாத விளைவுகள் அங்கு நிகழக் காரணமாகிவிட்டது. கர்னல் முஅம்மர் கத்தாஃபியின் மறைவுக்குப் பிறகு அங்கு இஸ்லாத்தை விரும்பும் மக்களுக்கும் மேற்கத்திய அனுதாபிகளுக்கும் இடையே பிரிவினையும் மோதல்களும் ஏற்பட்டுள்ளன. சிரியாவிலும் இதே நிலை தொடர்வதால் மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இவ்விரு நாடுகளிலும் நீடித்து வருகின்ற மேற்கத்தியத் தலையீட்டை ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது. அமைதியை விரும்பக்கூடிய, ஜனநாயகத்தை விரும்பக்கூடிய உலக மக்கள், மத்திய கிழக்கிலும் வட ஆப்ரிக்காவிலும் நீடித்துவருகின்ற மேற்கத்தியத் தலையீட்டுக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறது. இந்தியா தன்னுடைய தூதரக, இராஜீய தொடர்புகளைப் பயன்படுத்தி லிபியாவிலிருந்தும் சிரியாவிலிருந்தும் நேட்டோ படைகளைத் திரும்பப்பெற அமெரிக்காவை வலியுறுத்த வேண்டும் எனவும் ஜமாஅத் வேண்டுகிறது.

www.jih.org