பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் மமக உறுப்பினர் எம். எச். ஜவாஹிருல்லாஹ் ஆற்றிய உரை.

முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா:மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் இந்த மாமன்றத்திலே தாக்கல் செய்த 2012-2013 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையிலே இடம்பெற்றுள்ள, மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை முதலிலே நான் மனதார வரவேற்கிறேன்.



தமுமுகவின் பேரிடர் மீட்பு பணிகள்:
பேரிடர் நேரிடும்போது விரைவாகவும், திறமையாகவும் செயல்படக்கூடிய மாநிலப் பேரிடர் மீட்புப் படை ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பை, மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கின்றது. 2004 டிசம்பர் மாதத்திலே ஏற்பட்ட ‘சுனாமி’ என்ற ஆழிப்பேரலை தமிழகத்திலே மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்தியபோது, நான் சார்ந்திருக்கக்கூடிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டர்கள், சென்னையிலே பட்டினம்பாக்கம் தொடங்கி, குமரியிலே குளச்சல் வரை மீட்புப் பணிகளிலே ஈடுபட்டார்கள். அதேபோல, இராமநாதபுரத்திலே சில ஆண்டுகளுக்கு முன்பு சனவெளியிலே ஏற்பட்ட காட்டாற்றிலே, வெள்ளத்திலே பேருந்து ஒன்று அடித்துச் செல்லப்பட்ட போதும், எங்களுடைய தொண்டர்கள் அங்கு மீட்புப் பணியிலே ஈடுபட்டார்கள். எனவே, அதனுடைய முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்த காரணத்தினால், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ‘‘தேசிய பேரிடர் மீட்புப் படையைப் போல... தமிழகத்திலே தான் முதன்முதலாக ஒரு மாநிலம் தழுவிய மீட்புப் படை அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிற அறிவிப்பை நான் அனுபவப்பூர்வமாக வரவேற்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி)

சரிநிகர் வளர்ச்சி நிதி:
நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வளர்ச்சி தொடர்பான ஏற்றத் தாழ்வுகளைப் போக்குவதற்காக, 100 பின்தங்கிய வட்டாரங்களும், பின்தங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் கண்டறியப்பட்டு, குறைபாடுகளைக் களைவதற்காக மாநில சரிநிகர் வளர்ச்சி நிதி என்று ஒரு நிதி உருவாக்கப்படும் என்றும், தற்போது இதற்காக ரூபாய் 100 கோடி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பையும் நான் வரவேற்கின்றேன்.
‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வதாரத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் நகர்ப்புற ஏழைகளுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.
கல்லூரி விடுதிகளுக்கு கட்டில்:
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்கக்கூடிய அரசினர் விடுதிகளுக்கு, மாணவர்கள் வசதிக்காகக் கட்டில்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் (மேசையைத் தட்டும் ஒலி) ஒரு முன்னாள் கல்லூரி ஆசிரியர் என்ற முறையிலே மனமார வரவேற்கின்றேன்.
இலங்கை அகதிகள் வாழும் தற்காலிகக் குடியிருப்புகளில் 25 கோடி ரூபாய் செலவிலே 2,500 வீடுகள் கட்டப்படும் என்றும், தமிழக அரசின் அனைத்து சமூக நலத் திட்டங்களும் அவர்களுக்குக் கிடைக்க வழிவகுக்கப்படும் என்ற அறிவிப்பையும் நான் பாராட்டுகிறேன்.
இராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி:
இராமநாதபுரம் மாவட்டக் கூட்டுறவு நூற்பாலை 5.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புத்துயிரூட்டப்பட்டு, செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்புக்கு முகவை மாவட்டத்தின் மக்கள் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றியை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இதேபோல, பாரத இரத்னா எம்.ஜி.ஆர். அவர்களின் முயற்சியால், முழு மாவட்டத் தகுதியைப் பெற்ற இராமநாதபுரத்திலே, குறிப்பாக இராமநாதபுரம் தொகுதியிலே மருத்துவக் கல்லூரி இந்த ஆண்டு தொடங்கப்படுவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
இராமநாதபுரம் தொகுதியிலே கடல் தொழில் சார்ந்த தொழில் பூங்கா அமைவதற்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இராமநாதபுரத்தில் போக்குவரத்து மண்டலம்:
இராமநாதபுரத்திலிருந்து பிரிந்துசென்ற விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலே போக்குவரத்து மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, தேவையான அளவுக்குப் பேருந்துகள் விடப்பட்டுள்ளன. ஆனால், தாய் மாவட்டமான இராமநாதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இன்னும் போக்குவரத்து மண்டலம் உருவாக்கப்படவில்லை. இதன்காரணமாக, மாவட்டத்தில் இன்னும் பல ஊர்களுக்குப் போதிய பேருந்து வசதி இல்லை. வேறு மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய பேருந்துகளை இங்கே அனுப்பி வைக்கின்றார்கள். இந்தப் பேருந்துகளை நம்பி ஏறினால், பிரேக் டவுன் ஆகி பாதி வழியிலேயே நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. பல பேருந்துகளில் மழைக்காலங்களிலே குடை பிடித்துச் செல்ல வேண்டிய நிலையும் இருக்கின்றது. (போக்குவரத்து துறை அமைச்சர் குறுக்கீட்டு புதிய பேருந்து விடுவதற்கு ஆவணச் செய்யப்படும் என்றார்)
முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு அமைச்சர் அவர்களுடைய அறிவிப்புக்கு நன்றி. மிக முக்கியமாக, இராமநாதபுரம் உட்கோட்டம் அதிகமான வசூலைத் தரக்கூடிய உட்கோட்டம். இராமநாதபுரத்தைத் தலைமையகமாகக் கொண்டு ஒரு புதிய போக்குவரத்து மண்டலம் உருவாக்க வேண்டுமென்றும் இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன்.
தனியார் துறையில் இட ஒதுக்கீடு:
தனியார் துறையில் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தருவதற்காக 32 மாவட்டங்களிலும், 37 மாவட்ட அளவிலான உதவி மையங்கள் 193.2 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்றும், தனியார் துறையின் பங்களிப்புடன் தமிழக இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காகப் புதுமையான உத்திகளைக் கொண்ட பயிற்சித் திட்டங்கள் வடிவமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கின்றேன்.
Fortune 500 நிறுவனங்கள் உட்பட பல்வேறு தலைசிறந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்திடப்படவுள்ளன என்றும் இந்த வரவு செலவு அறிக்கையிலே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை வரவேற்கக்கூடிய அதேநேரத்தில், சமூக நீதியை நிலைநாட்டுவதில் பெரும் அக்கறையுடைய நமது முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன். நமது மாநில அரசின் பல்வேறு சலுகைகளை அறிவிக்கும் இந்தத் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளிலே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு ஐம்பது விழுக்காடு இடஒதுக்கீடு கட்டாயம் அளிக்க வேண்டும் என்பதை, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு அம்சமாக ஏற்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன். இத்தகைய நிலைப்பாட்டை செயல்படுத்துவது சமூக நீதி காக்க பல்வேறு சாதனைகளைப் புரிந்த நமது முதலமைச்சரின் சாதனைகளில் ஒரு மகுடமாக நிச்சயமாக அமையும்.
சிறுபான்மையினருக்கு ஏமாற்றம்:
சிறுபான்மையினர் நலனைப் பொறுத்தவரையில், உலமாக்களின் நல வாரியத்திற்கு உதவித் தொகையாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும், இந்த ஆண்டும் கிருத்தவர்கள் ஜெருசேலம் நகரத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு உதவும் வகையிலே ஒரு கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கின்றேன். ஆனால் சிறுபான்மையின மக்களின் பல எதிர்பார்ப்புகள் இந்த வரவு&செலவு திட்டத்தில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கின்றது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன, பாராட்டுகிறேன். இதேநேரத்தில் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரித்துத் தரப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்பட ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதேபோல் தேர்தலுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் பேசுகையில் அஇஅதிமுக ஆட்சிக்கு வரும்போது பட்டா உள்ள இடங்களிலே பள்ளிவாசல்கள் மற்றும் சர்ச்சுகள் கட்டுவதற்கு உள்ள முட்டுக்கட்டைகள் நீக்கப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். இருப்பினும் பல மாவட்டங்களிலே பட்டா உள்ள இடங்களிலே பள்ளிவாசல்கள் மற்றும் சர்ச்சுகள் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடைபோடும் நிலை தொடர்கின்றது. இந்த நிலையை நீக்க அரசு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து, சிறுபான்மையின மக்களின் வழிபாட்டு முறையை நிலைநாட்ட முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன். (நிதி அமைச்சர் குறுக்கிட்டு பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டுச் சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்)
பள்ளிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்:
பள்ளிக் கல்வித் துறைக்கு முன் எப்போதும் இல்லாத அளவிலே 14,552.82 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதை மனதார பாராட்டுகிறேன். காலணிகளிலிருந்து நோட்டுப் புத்தகங்கள் வரை, சீருடைகளிலிருந்து ஜியாமெட்ரி பெட்டிகள் வரை விலையில்லாமல் இந்த அரசு வழங்குவதை பாராட்டக்கூடிய அதேநேரத்தில், மாணவர்களைத் திறம்பட உருவாக்கக்கூடிய ஆசிரியர்களையும் சற்று இந்த அரசு கவனிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
குறிப்பாக 1991&க்குப் பிறகு சிறுபான்மையின கல்லூரிகள், சிறுபான்மையின பள்ளிக்கூடங்கள், தமிழ் வழி பள்ளிக்கூடங்களுக்கு மானியம் அளிப்பதில்லை என்ற ஒரு முடிவு தொடர்ந்து இருந்து வருகின்றது. 14,552.82 கோடி ரூபாய் பள்ளிக் கல்விக்கு ஒதுக்கி சாதனை புரிந்திருக்கின்றோம். அதேபோல தமிழ்வழி பள்ளிக்கூடங்கள், சிறுபான்மையின பள்ளிக்கூடங்கள் 1991&க்குப் பிறகு தொடங்கப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு, அதில் சில பிரிவுகளுக்கு மானியம் இருக்கின்றன, சில பிரிவுகளுக்கு மானியம் இல்லை. பி.எச்.டி. படித்தவர்களுக்குக் கூட உயர் வகுப்புகளில் 3,000 ஊதியத்திலே பணியாற்றுகிறார்கள்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மானியம் கொடுப்பது குறித்து நான் சொல்ல வந்தேன் என்றால், பள்ளிக்கூடங்களிலேயே வந்து ஒரு பாரபட்சம்,
சுயநிதி வகுப்புகளுக்கு மானியம் இல்லை. அங்கு பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைவு, மானியம் வரக்கூடிய பாடங்களுக்கு சம்பளம் அதிகம். இப்படி ஒரே பள்ளிக்கூட வளாகத்தில் இரண்டு வகையான ஆசிரியர்கள், இரண்டு வகையான மாணவர்கள் இருக்கிறார்கள். இதுசம்பந்தமான பெரிய பட்டியலே இருக்கின்றது; அரசாங்கத்திடம் கொடுக்கின்றேன். அதை அரசு ஏற்றுக்கொண்டால் அதைவிட பெரிய சாதனை இருக்க முடியாது.
கைடுலைன் மதிப்பு குறைக்கப்பட வேண்டும்:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கைட் லைன் மதிப்பைவிட குடியிருப்பு மனைகளுக்கு 170 சதவிகிதம், வர்த்தக மனைகளுக்கு சுமார் 150 சதவிகிதம், விவசாய நிலங்களுக்கு 270 சதவிகிதம் என்று அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது பெரிய சுமையாக இருக்கின்றது. கைட்லைன் மதிப்பைக் குறைப்பதற்கு, குறிப்பாக மாநகராட்சிக்கு மட்டும் இந்த மதிப்பு கூட்டுதலை வைத்துவிட்டு மற்றவர்களுக்கு விதிவிலக்கு கொடுக்க வேண்டுமென்று இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன். அதுபோல சில மாநிலங்களிலே பத்திரம் பதிவு செய்ய கிராமப் பஞ்சாயத்துகளுக்கு 2 சதவிகிதம், நகராட்சிகளுக்கு 4 சதவிகிதம், மாநகராட்சிகளுக்கு 5 சதவிகிதம் என்று இருப்பதுபோல, தமிழகத்திலும் அந்தப் பகுதிக்கேற்ப ஸ்டாம்ப் டூட்டியினுடைய விகிதம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன்.
500 யூனிட்டுகளுக்கு மேலாக பயன்படுத்துவோருக்கு கட்டண சலுகை வேண்டும்:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, [எதிர்க்கட்சிகளினுடைய எண்ணங்களையெல்லாம் புரிந்துகொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று மின் கட்டணத்திலே சில சலுகைகளை அறிவித்திருக்கின்றார்கள். அதேநேரத்திலே 500 யூனிட்டுகளுக்கு மேலே பயன்படுத்துபவர்களுக்கு எந்தவிதமான சலுகையும், மானியமும் வழங்கப்படாத ஒரு நிலை இப்போதும் இருக்கின்றது. இன்றைக்கு நம்முடைய அரசு விலையில்லாமல் ஃபேன், மிக்ஸி, கிரைண்டர்களையெல்லாம் அளிக்கின்றது. இதுதவிர சாதாரணமாக ஒரு நடுத்தர வீட்டில் ஏர் கண்டிஷனர் இருக்கின்றது, வாஷிங் மெஷின் இருக்கின்றது, ரெஃப்ரிஜிரேட்டர் இருக்கின்றது, ஹீட்டர் இருக்கின்றது, இப்படிப் பார்க்கும்போது சராசரியாக ஒரு நடுத்தர குடும்பத்திலேயே இரண்டு மாதங்களுக்கும் சேர்த்து 500 யூனிட்டுகளுக்கு மேலாக மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதுதவிர வாடகைதாரர்களுக்கும், உரிமையாளர் ஒரே மீட்டரைப் பயன்படுத்தும்போது அந்த யூனிட்டுகளினுடைய பயன்பாடு அதிகரித்து,
மேலதிகமாக அரசாங்கம் வசூல் செய்வதைவிட அதிகமாக வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் அதிகமாக வசூலிக்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. சப்&மீட்டர்களை அரசு மீட்டர்களாக மாற்ற அரசு முன்வரவேண்டும் என்றும், 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் அவர்களுக்கும் கருணை காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.] (மணியடிக்கப்பெற்றது) (முதலமைச்சர் குறுக்கிட்டு 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு மானியம் அளிக்கப்படாவிட்டாலும் அவர்களிடமிருந்து மின் உற்பத்திக் கட்டணத்தை விட குறைவாகவே வசூலிக்கப்படுவதாக தெரிவித்தார்)
மின் சேமிப்பிற்கு ஆலோசனைகள்:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 14.62 இலட்சம் செலவிலே 14.62 குடிசை வீடுகளுக்கு இலை பல்புகளுக்கு பதிலாக சி.எப்.எல். பல்புகளாக அளிக்கப்படும் என்று இந்த அரசாங்கம் அறிவித்திருப்பதையும் நான் வரவேற்கிறேன். இதனால் 45 மெகாவாட் மின்சாரம் சேமிக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் நான் வரவேற்கிறேன். அதேநேரத்தில், தமிழகத்தில் இருக்கக்கூடிய அத்தனை வீடுகளுக்கும், கேரளாவிலே இதனை செய்திருக்கிறார்கள். குண்டு பல்புகளுக்குப் பதிலாக சி.எப்.எல். பல்புகளைக் கொடுத்ததன் காரணமாக மாலை நேரங்களில் 350 மெகாவாட் மின்சாரப் பயன்பாட்டை அவர்கள் குறைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், இதற்கு கேரள அரசு 95 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. சி.எப்.எல். பல்புகள் பயன்படுத்தப்படும்போது இதன்காரணமாக கார்பன் கிரிடிட் பெறுகிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கு இந்த அரசு பல நல்ல முயற்சிகளை எடுத்து வருகின்றது. நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆட்சியிலே இருந்தபோதுதான் கட்டாயமாக வீட்டிலே மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் கட்டவேண்டுமென்று சொன்னார்கள்.
அதேபோல, இன்று சூரிய சக்தி மின்சாரம், சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பழுதையும் ஏற்படுத்தாத, மின்சாரமாக இருக்கிறது. அந்த சூரிய சக்தி மின்சாரத்தினுடைய உற்பத்திச் செலவும்கூட கனிசமாக குறைந்துள்ளது. கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட அளவு மின்சாரப் பயன்பாட்டிற்கு சூரிய சக்தி மின்சாரம்தான் பயன்படுத்த வேண்டுமென்று இந்த அரசு சட்டத்தை இயற்றினால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நெய்வேலி மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு வேண்டும்:
கூடங்குளம் மின்சாரத்தினுடைய முழு அளவும் தமிழகத்திற்கு தரவேண்டுமென்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அதேநேரத்திலே, மத்திய அமைச்சர் ஒருவர், விதிமுறையின் அடிப்படையிலேதான் மின்சாரம் தருவோம், கூடங்குளத்தினுடைய முழு மின்சாரமும் தமிழகத்திற்குத் தர இயலாது என்று சொல்லியிருக்கக்கூடிய சூழலிலே, நம்முடைய உரிமைகளை நிலைநாட்டுவதற்காக, நெய்வேலியிலே உற்பத்தியாகக்கூடிய முழு மின்சாரமும், சுமார் 2400 மெகாவாட் தமிழகத்திற்குத்தான் தரப்பட வேண்டுமென்ற கோரிக்கையை இங்கே உள்ள அனைத்துக் கட்சிகளும் அழுத்தமாக மத்திய அரசிடம் வைத்து அதைப் பெறவேண்டும். அது தற்போது தமிழகத்தில் இருக்கக்கூடிய மின் பற்றாக்குறையை ஓரளவுக்கு சமாளிக்க உதவும் என்று இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட வேண்டும்:
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டிருக்கக்கூடிய வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டு அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதற்கு வழிவகுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். கூடங்குளம் அணுஉலை தொடர்பாக மத்திய அரசு 2008 இல் ரஷ்யாவுடன் Nuclear Liability ஒப்பந்தம், அதாவது அணு உலை இழப்பீடு ஒப்பந்தம் கையொப்பமிட்டிருக்கின்றது. அதில் ஐந்து வருடத்திற்குத்தான் இழப்பீடு தருவோம் என்று இருப்பதாக சொல்லப்படுகின்றது. உண்மை நிலை என்ன என்பதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அதை மாநில அரசு பெற்று, மக்களுக்குரிய அச்சத்தைப் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். சில நாட்களுக்கு முன்னால் ரஷ்யாவினுடைய தூதர் கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் திறக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். இப்போது நடைமுறையில் இருக்கக்கூடிய கடலோர மேலாண்மை சட்டத்தின் அடிப்படையிலே, Coastal Regulation Zone அடிப்படையிலே கூடங்குளத்தில் எந்தவொரு புது அணு உலையையும் அமைக்கக்கூடாது. எனவே, தமிழக அரசாங்கத்தினுடைய அனுமதி பெறாமல் ரஷ்ய தூதரே இப்படிச் சொல்வது விந்தையாக இருக்கிறது. இதைப் பற்றியும் தமிழக அரசு கவனமாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
தொகுதி கோரிக்கைகள்:
1. இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியில் சேது சமுத்திரத் திட்டம் நடைமுறைப்படுத்துவதற்காக அரசு நிலம் எதுவும் அரசுப் பயன்பாட்டிற்காகவோ தனியார் பயன்பாட்டிற்காகவோ ஒதுக்கப்படக்கூடாது என்று அரசாணை எம்.எஸ்.எண்.812 (வருவாய்த்துறை) 16.3.1964ல் வெளியிடப்பட்டது. இந்த ஆணையின்படி இராமநாதபுரம் வட்டத்தில் 25,002.04 ஏக்கர் நிலமும், இராமேஸ்வரம் வட்டத்தில் 12,690.26 ஏக்கர் நிலமும் யாருக்கும் ஒதுக்குவதற்கும் தடை செய்யப்பட்டது. இராமநாதபுரம் வட்டத்தில் சுமார் 31 கிராமங்களிலும், இராமேஸ்வரம் வட்டத்தின் அனேகமாக அனைத்துப் பகுதிகளும் இந்தத் தடை உத்தரவின் கீழ் வருகின்றன. இந்நிலையில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்திற்காக 812.17.5 ஹெக்டேர் நிலம் தனுஷ்கோடி கிராமத்திலும், மண்டபம் கிராமத்தில் 8 ஹெக்டேர் நிலம் போதுமானது என்று தூத்துக்குடி துறைமுகப் பொறுப்பு கழகம் அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி 1964ல் வருவாய்த்துறை வெளியிட்ட தடை உத்தரவை ரத்து செய்வதற்கு தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகம் தெரிவித்துள்ளது. எனவே, தமிழக அரசு இந்தத் தடை உத்தரவைத் தளர்த்தி பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் பட்டாவிற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மக்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.
2. இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நிரந்தரமாக ஒரு நியூரோ சர்ஜன் மற்றும் நரம்பியல் மருத்துவரை நியமிக்க அரசு ஆவன செய்யவேண்டும்.
3. இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பழுதாகியுள்ள ஸ்கேன் கருவிக்கு பதிலாக புதிய ஸ்கேன் கருவி அளிக்க வேண்டும்.
4. இராமநாதபுரம் நகரத்தில் கீழக்கரைச் செல்லும் சாலையில் உள்ள இரயில்வே கடவு அமைந்துள்ள இடத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அங்கு ஒரு மேம்பாலம் (ROB) கட்டப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

(இந்த உரைக்கு பிறகு குறிக்கிட்டு பேசிய முதலமைச்சர் சிறுபான்மை மக்களுக்கு எந்த புதிய அறிவிப்பும் இல்லை என்று மாண்புமிகு உறுப்பினர் குறிப்பிட்டார். மானியக் கோரிக்கை வரை அவர் பொறுத்திருக்க வேண்டும். நல்ல அறிவிப்புகள் வரும் என்று அறிவித்தார்.
http://www.tmmk.in/