தம்புள்ள பள்ளிவாயல் மீண்டும் திறக்கப்பட்டது –



லுஹர் தொழுகையுடன் ஆரம்பம்

                          ( video )


தம்புள்ளை ஒரு புனித பூமி என்பதன் காரணமாக அங்கு இருக்கும் பள்ளிவாசலை அகற்றும் படி கூறி நேற்று பிக்குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பள்ளிவாயல் உள்பகுதி சிறு சேதத்திற்கு உள்ளானதுடன் பொலிசாரினால் பள்ளியினுள் பிரவேசிக்க முடியாதவாறு தடை இடப்பட்டிருந்தது.
இன்று காலை பள்ளிவாயளுக்கு விஜயம் செய்த கௌரவ அமைச்சர்களான பௌஷி மற்றும் ரிஷாத் பதியுதீன், பள்ளிவாயல் நிர்வாக சபையுடன் நடந்த விடயம் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் பள்ளிவாயலை உடன் திறப்பதற்கு ஏற்பாடும் செய்தனர்.
அமைச்சர்களின் இந்த விஜயத்தின்போது அப்பிரதேசத்திற்குரிய பிரதேச செயலாளரையும் சந்தித்தனர். பிரதேச செயலாளரின் அறிக்கையை மேற்கோள் காட்டியே அப்பள்ளிவாயல் சட்டபூர்வமற்ற கட்டிடம் என்று பல செய்திகள் வெளியாகியுள்ளதுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டவர்களும் கோஷமிட்டனர்.
இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் பிரதேச செயலாளரை கடுமையாக கடிந்து கொண்டதுடன், பள்ளிவாயல் வக்பு செய்யப்பட்டதற்கான ஆதாரத்தையும் முன்வைத்தனர்.
பள்ளிவாயல் அருகில் உள்ள மாற்று மத சகோதரர்களை அமைச்சர்கள் சந்தித்தபோது அவர்கள், இந்த பள்ளிவாயலால் எங்களுக்கு எந்தவிதமான இடையூறுகளும் இல்லை மாத்திரமின்றி இந்த பள்ளிவாயல் நாங்கள் அறிந்த காலமுதல் இங்கேயே உள்ளது என்றும் தெரிவித்தனர். அத்தோடு இங்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் வெளியிடங்களில் இருந்து வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டவர்கள் என்றும் தெரிவித்தனர்.
இந்தபள்ளிவாயல் விடயம் தொடர்பாக நாம் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுவதாகவும் இதற்கு சுமுகமான தீர்வை பெற்றுத்தருவதாகவும் அமைச்சர்கள் உறுதியளித்தார்கள்.
பள்ளிவாயல் உள்ளக சேதம் தொடர்பாக பிரதேச வாசியுடன் தொடர்பு கொண்டபோது அவர் தெரிவித்தார்,
“பள்ளிவாயலின் மிம்பருக்கு (மேடை) சேதம் ஏற்பட்டுள்ளது, குர்ஆன் வைத்திருந்த அலுமாரியின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தது. மின் விசுரிகளின் அலகுகள் வளைக்கப்பட்டு பிறகு நேர் படுத்தப்பட்டிருந்தன, சேதமான மின்விசிறி உட்பட அனைத்தையும்  எதுவம் நடக்காதது போன்று சரிசெய்து இடத்தையும் துப்பரவு செய்யப்பட்டிருந்தது.” என்று தெரிவித்தார்.
தற்பொழுது பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தம்புள்ள பள்ளிவாயலுக்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் ஜெலீஸ் தெரிவிக்கின்றார்.
- http://kattankudi.info/