தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவேயில்லை.
கடந்த திமுக ஆட்சியில் ஒரு சில பிரிவுகளுக்கு மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இப்படி மின் கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருப்பதால் மின்வாரியம் பெரும் நஷ்டத்தை ச்ந்தித்து வருகிறது என்று தமிழக அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் எடுத்துரைத்தது. மேலும் எந்த பிரிவுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தலாம் என்பதையும் அரசு முடிவு செய்து ஆணையத்திடம் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்தது.

இதையடுத்து ஆணையம் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்டது. அதன் பிறகு மின் கட்டணத்தை எவ்வளவு உயர்த்துவது, வீடுகள், தொழிற்சாலைகள், உயர் அழுத்த மின்சார பயன்பாடிற்கான கட்டணத்தை எவ்வளவு அதிகரிப்பது என்பதை ஆணையம் முடிவு செய்தது.

மேலும் சிறு தொழில்கள், குடிசை தொழில்களுக்கான கட்டண உயர்வை அமுல்படுத்துவது குறித்தும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை இன்று மாலை வெளியிட்டது மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.


புதிய மின் கட்டண உயர்வு விவரம்
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில், தற்போது 50 யூனிட் வரை 75 காசுகள் வசூலிக்கப்படுகிறது. இதை 100 யூனிட்களாக உயர்த்தி யூனிட்டுக்கு ரூ. 1.10 என்று நிர்ணயித்துள்ளனர்.

அதேபோல 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு இனி யூனிட் கட்டணம் ரூ. 1.80 ஆக இருக்கும்.

201 முதல் 250 வரை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு ரூ. 3 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

251 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ. 3.50 கட்டணமாகும்.

500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் இனி யூனிட்டுக்கு ரூ. 5.75 கட்ட வேண்டும்.

புதிய கட்டண விகிதத்தில், 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு இனிமேல் மானியம் கிடையாது. முழுக் கட்டணத்தையும் வாடிக்கையாளர்களே கட்ட வேண்டும்.

100 யூனிட்டுக்கும் கீழ் பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 25 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை இருந்து வந்த குறைந்தபட்ச மின் கட்டணமான ரூ. 40 என்பது ரத்து செய்யப்படுகிறது.

விவசாயம்
விவசாயப் பணிகளுக்கான மின் கட்டணமானது ஒரு குதிரை சக்திக்கு ரூ. 1750 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குடிசைகளுக்கு இலவசம் தொடரும்

குடிசைகளுக்கு தற்போது இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அது தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளுக்கு
தொழிற்சாலைகளுக்கான மின்சாரத்தின் கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

விசைத்தறி கூடங்களுக்கு முதல் 500 யூனிட் வரை கட்டணம் கிடையாது. அதற்கு மேல் பயன்படுத்தினால் யூனிட்டுக்கு ரூ. 4 கட்ட வேண்டும்.

வர்த்தக நிறுவனங்களுக்கு முதல் 100 யூனிட்கள் வரை , யூனிட்டுக்கு ரூ. 4.30, 101 யூனிட்களுக்கு மேல் ரூ. 7 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குடிசைத்தொழில், சிறு தொழில்களுக்கு 100 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு, யூனிட் ரூ.3.50, 100 யூனிட்களுக்கு மேல், ரூ. 4 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.50 என்று உயர்த்தப்பட்டுள்ளது.

கோவில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கு 120 யூனிட் வரை ரூ. 2.50, 120 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ. 5 என நிர்ணயித்துள்ளனர்.

கல்வி நிறுவனங்கள்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு மின்கட்டணம், யூனிட்டுக்கு ரூ. 4.50, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ. 5 என உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ. 7874 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்

புதிய மின் கட்டண உயர்வின் மூலம் மின்சார வாரியத்திற்கு ரூ. 7874 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக மின் கட்டணத்தை உயர்த்தியும் இதே ஜெயலலிதா அரசுதான் என்பதும் முக்கியமானது.

ஒரு வருடத்திற்கு
இந்த மின் கட்டண உயர்வு ஒரு ஆண்டுக்கு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வரலாறு காணாத மின் வெட்டு!

இன்வெர்ட்டர்: என்னென்ன கவனிக்க வேண்டும்?