ஓர் மாற்றத்தின் ஆரம்பம்.......உமரின் பாதையை தொடர வேண்டும்



2012 ஜூன் 24
எங்கும் ஒளி வெள்ளம் சூழ, ஓர் மாற்றத்தின் ஆரம்பம்.......
இமாம் ஹஸனுல் பன்னா ஷஹீதின் "இஃக்வானுல் முஸ்லிமீன்" இன்று எகிப்தின் ஆட்சியாளர்கள்.!!



எகிப்திய மக்கள் "இஃக்வானுல் முஸ்லிமீன்" இயக்க வெற்றியின் அறிவிப்பினை தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் வண்ணம் கெய்ரோ நகரின் தஹ்ரீர் சதுக்கத்தில் பல மில்லியன் மக்கள் சஜ்தாவில் விழுந்து அல்லாஹுவுக்கு நன்றி செலுத்தும் அருமையான ஓர் நிகழ்வு.
இது உலக வாழ்க்கையில் முக்கிய நிகழ்வாகும் .ஸுஜூது செய்யக்கூடிய சமூகத்தை அல்லாஹ் ஒரு போதும் தோல்வியடைய செய்ய மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வாக்கை நிறைவேற்றியே உள்ளான்.

டாக்டர் முஹம்மது முர்ஸி எகிப்தின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1977 ஆம் ஆண்டு இக்வான் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட முர்ஸி பலதரபட்ட திறமைகளையும், இயக்க உறவுகளையும் வளர்த்துக்கொண்டார் .சியோனிச எதிர்ப்பியக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவரான முஹம்மத் முர்ஸி பல சர்வதேச மற்றும் உள்நாட்டு அமைப்புகளிலும் அங்கம் வகிக்கின்றார்.


2000 ஆம் ஆண்டு முதல் முறையாக பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார், இஹ்வான்களின் அரசியல் பிரிவில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புக்களைச் செய்துள்ள இவர் 2011 இல் இஹ்வான்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியான நீதிக்கும் சுதந்திரத்திற்குமான கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார் 2005,2010 ஆம் ஆண்டுகளில் சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பலர் போட்டியிட்டதில் டாக்டர் முஹம்மது முர்ஸி எகிப்தின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


டாக்டர் முர்ஸி தஹ்ரீர் சதுக்கத்தில் நிகழ்த்திய உரை எகிப்தியர்களின் உள்ளங்களை மட்டுமல்ல, இஸ்லாமிய உலகின் உள்ளங்களைத் தொட்டுள்ளது, அரபுலகத்தையே திடுக்கிடச் செய்துள்ளது. அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் சிறையடைக்கப் பட்டுள்ள அஷ் ஷேய்க் "உமர் அப்துர் ரஹ்மான்" சலபியை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அழுத்தமாக சொல்லியுள்ளார்.

"நான் குண்டு நுழையாமல் இருக்க எந்தக் கவசமும் அணிவதில்லை. மக்கள்தான் அதிகாரமுள்ளவர்கள், மக்களின் அதிகாரத்துக்கு அப்பால் எந்த அதிகாரமும் இல்லை, நான் அல்லாஹ்வுக்கு மட்டும்தான் அஞ்சுகிறவன் என்று துணிவாகச் சொல்லியுள்ளார்"

நாட்டின் சின்னமாக நாடே முன்னிலைப்படுத்தப்படவேண்டும், ஜனாதிபதியல்ல. ஏனென்றால் மக்கள் அழியக்கூடியவர்கள் நாடு நிலைத்திருக்கக்கூடியது ஜனாதிபதி பதவி ஏற்ற பின் அரசு, தனியார் நிறுவனங்களில் ஜனாதிபதியின் படங்களை தொங்கவிடுவது சட்டபூர்வமாக தடை செய்யப்படும் என்றும் அதனை மீறுவது தண்டனைக்குறிய குற்றமாக கருதப்படும் என்றும் கூறினார். மேலும் ஜனாதிபதியை வாழ்த்துவதற்காக செலவுசெய்யப்படும் பணத்தை மக்களின் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் செலவிடுமாறும் குறிப்பிட்டார்.

அவசரகால சட்டத்தை எந்த இடத்திலும் அமுல்படுத்த கூடாது, தனது சம்பளத்தை எகிப்து மக்களுக்காக வழங்கிடுவேன்
ஜனாதிபதியின் வாகன தொடரணி மூலம் பொது மக்களின் போக்குவரத்துக்கு தடையாக அமைய அனுமதிக்க மாட்டேன்,
அரசமாளிகையில் தொடர்ந்து இருக்க மாட்டேன் தனது வீட்டிலேயே இருப்பேன் .




அல்ஹம்துலில்லாஹ்... மாற்றங்கள் ஜனாதிபதி மாளிகையிலிருந்து உருவாகிறது, டாக்டர் முஹம்மது முர்ஸியின் இருக்கைக்கு பின்னால் இதற்கு முன் ஹுஸ்னி முபாரக் புகைப்படம் தான் இருக்கும் ஆனால் தற்போது அதே இடத்தில் அல்லாஹ்வின் திருநாமம் உள்ள புகைப்படம் வைக்கப் பட்டுள்ளது.


எகிப்தின் ஜனாதிபதி அல் ஹாஃபிழ் முஹம்மது முர்ஸி, திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர் ஏற்கனவே வாக்களித்திருந்ததன் அடிப்படையில் இஹ்வான் இயக்கத்திலிருந்தும் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டார். எகிப்து புரட்ச்சியின் போது ஷஹீதானவர்களின் குடும்பங்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து கௌரவப் படுத்தியுள்ளார்.


கைரோ நகரம் மிகவும் நெரிசல் மிக்கது.10 நிமிடங்கள் பாதை மூடப்பட்டாள் பொது மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும். ஆனால் ஹுஸ்னி முபாரக் ஜனாதிபதியாக இருக்கும் போது
அவர் ஒரு பிரயாணம் செய்வதாயின் பாதைகள் மூடப்பட்டு பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவார். சில சமயங்களில் ராணுவ விமானங்கள் கூட மேலால் பறக்கும். ஜனாதிபதி முஹம்மது முர்ஸி யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் பாதைகள் மூடப் படாமல் சாதாரண முறையில் தனது பிரயாணங்களை அமைத்துக் கொண்டுள்ளார் .


வெள்ளியன்று ஜும்மாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது :
அல் அஸ்கர் பல்கலைக் கழகத்தின் பங்களிப்பை சொல்லும்போது, ஒரு நூற்றாண்டு காலமாக எகிப்தை ஆட்சி செய்தவர்கள் அஸ்கர் பல்கலைக் கழகத்தையும் அதன் உலமாக்களையும் தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பயன்படுத்தினார்களே தவிர இஸ்லாமிய எழுச்சிக்காக, நீதியை நிலைநாட்டுவதற்காக பயன்படுத்தவில்லை.
அஸ்கர் உலமாக்கள் சுதந்திரமாக இயங்க முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகளையும், வரையறைகளையும் ஏற்படுத்தி அஸ்கர் பல்கலைக் கழகத்தை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இன்ஷா அல்லாஹ் எதிர்வருகின்ற காலங்களில் அஸ்கர் பல்கலைக் கழகமும் அதன் உலமாக்களும் தனித்துவமாக இயங்க ஆவன செய்யப்படும் என்று கண்ணீர் மல்க டாக்டர் முஹம்மது முர்ஸி அறிவித்துள்ளார்.

இஸ்லாத்தின் 2-வது கலீஃபா உமர் பின் கத்தாப்(ரலி) அவர்களின் பாதையை எகிப்தின் புதிய அதிபர் முஹம்மது முர்ஸி பின்பற்ற வேண்டும் என்று அவ்காஃப் (மார்க்க விவகாரம்) அமைச்சரும், அல் அஸ்ஹர் கத்தீபுமான(இமாம்) முஹம்மது அப்துல் ஃபதீல் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரையில் இதனை அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியது: “அல்லாஹ்வின் தீர்ப்பின் அடிப்படையில் முடிவு எடுப்பதில் யாருக்கும் உமர் அஞ்சியதில்லை. நீதிதான் அவரது அளவுகோல். தனது கவர்னர், தனது மகனுக்கு ஆதரவான முடிவை எடுத்தபொழுது கவர்னரான அம்ருப்னு ஆஸை தண்டிக்கவும் தைரியம் காட்டினார்.

இதர மதத்தினருடன் உமர்(ரலி) அவர்களின் அணுகுமுறை முன்மாதிரியானது. பைதுல் முக்கதிஸிற்கு சென்றபொழுது அங்குள்ள கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களது அச்சத்தைப் போக்கினார்கள். தவறான புரிந்துணர்வு ஏற்பட்டுவிடும் என்பதற்காக தொழுகை நேரம் வந்தவுடன் தொழுவதற்கு கிறிஸ்தவர்கள் கோரிய பிறகு அதனை உமர்(ரலி) மறுத்துவிட்டார்கள்.

நமது நாட்டில் பல்வேறு மதத்தவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களிடம் நீதியின் அடிப்படையிலான அணுகுமுறையை கையாள நமது புதிய ஆட்சியாளருக்கு சாதிக்க வேண்டும்.” இவ்வாறு அல் அஸ்ஹர் இமாம் தனது உரையில் குறிப்பிட்டார்.
தகவல் : P ..அப்துல் சலாம்


(நபியே!) நீர் கூறுவீராக: ''அல்லாஹ்வே! ஆட்சி அதிகாரம் அனைத்திற்க்கும் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்;. மேலும் நீ விரும்புவோரிடமிருந்து ஆட்சியை அகற்றியும் விடுகிறாய்;. நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்;. நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்;. நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன. நிச்சயமாக நீ ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவன்."" ஆல இம்ரான்