வில்லங்கத்தை ஏற்படுத்தும் மொபைல் போன்

வீட்டிற்கே வந்து வில்லங்கத்தை ஏற்படுத்தும் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாடுகளால், "டீன் - ஏஜ்' பருவத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மனதளவிலும், உடல் அளவிலும் தங்கள் குழந்தைகள் பாதிப்படையாமல் தடுக்க, பெற்றோர் அவர்களது பக்கம் கவனத்தை திருப்ப வேண்டியது அவசியமாகும்.



உலக நாடுகளுக்கு இணையாக நமது நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியும், நவீனத்துவமும் போட்டி போட்டு வளர்ந்து வருகின்றன. இந்த தொழில் நுட்ப வளர்ச்சியில், அனைத்து தரப்பினரையும் சென்றடையக்கூடியதாக மொபைல் போனும், இன்டர்நெட் வசதியும் மாறியுள்ளன.இந்த தலைமுறையில் இரண்டு வயது முதலே குழந்தைகள் மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டரை இயக்குவதில் முன்னேறியுள்ளனர். இந்த முன்னேற்றம் ஒருபுறம் அவர்களுக்கு ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கோவை மற்றும் சென்னையில் சமீபத்தில் பள்ளி மாணவர்கள் கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து, சென்னையில் போலீஸ் கமிஷனர் தலைமையில் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த விவகாரம் எதிரொலித்தது.அந்த கூட்டத்தில் மாணவர்களை பாதுகாப்பது மற்றும் அவர்களை வழிநடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், கம்ப்யூட்டர் வழியாக பள்ளிக்குழந்தைகளுக்கு வரும் பிரச்னைகள் தொடர்பாக பேசப்பட்டது.கூட்டத்தில் பங்கேற்ற தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பின் நிர்வாகி ஒருவர், பாலியல் கொடுமைகள் குறித்து பல விஷயங்களை எடுத்துக் கூறியதுடன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு, அதன் மூலம் ஏற்படும் பாதகங்களை பட்டியலிட்டார்.பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாடமாக இருந்தாலும், அவர்கள் அந்த வளாகத்தில் இணையதளங்களில் தகவல் தேடுவதில்லை. வீட்டில் இருக்கும் போதும், சில நேரங்களில் இன்டர்நெட் மையங்களுக்கும் சென்று பல்வேறு தகவல்களை தேடுகின்றனர்.


குறிப்பாக தற்போது எட்டு வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்கள், "ஆர்குட், டிவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குள் செல்கின்றனர். அதன் மூலம் புதிய நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். இதில், அவர்களுக்குள் புதிய போட்டியே ஏற்படுகிறது. இணையதளத்திற்குள் நுழைந்து தேடும் போது, பல்வேறு ஆபாச இணைய தளங்களும் பளிச்சிடுகின்றன. ஆர்வமிகுதியால் சிலர் இவற்றை பார்க்கின்றனர். இது அவர்களை தவறான பாதையில் செல்ல தூண்டுகிறது. இந்தியாவில் இருந்து வெளியாகும் ஆபாச இணையதளங்கள் பெரும்பாலும் தடை செய்யப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளில் இருந்து வெளியாகும் இணைய தளங்களை நாம் ஒன்றும் செய்ய முடியாத நிலை உள்ளது.பொதுவாக தற்போது குழந்தைகள் ஆபாசபடத்தை வைத்திருத்தல், பிரசுரித்தல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டு, மீறி செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தைகள் ஆபாசப்படங்கள் இணையதளம் மூலம் பரப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.