அரபு நாடுகளின் சட்டத்தை பயன்படுத்த இந்திய சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்


குழந்தைகளை கடத்துபவர்கள், கொலை செய்பவர்களை தண்டிக்க, அரபு நாடுகளின் சட்டத்தை பயன்படுத்த இந்திய சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்,'' என பெண் வக்கீல்கள் சங்க செயலாளர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை பெண் வக்கீல்கள் நலச்சங்க செயலாளர் வெண்ணிலா விடுத்துள்ள அறிக்கை: கோவையில் பள்ளி  சிறுவன், சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் சமூக அமைதிக்கு பங்கம் விளைவித்துள்ளது. ஏதுமறியாத இளந்தளிர்களை கிள்ளி எறிந்த மனித மிருகங்களின் செயலால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மனதால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமுதாயத்தையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொடியவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும். "ராகிங்' குற்றத்துக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வரப்பட்டது போல், குழந்தைகளை பாதுகாக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். இதுபோன்ற குற்ற வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து, ஒரு ஆண்டுக்குள் விசாரணையை முடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அளிக்கப்படும் தண்டனையால், கொடூரர்கள் மனதில் தண்டனை பற்றிய பயம் ஏற்படும். குற்றங்கள் குறையும்.  குறிப்பாக, குழந்தைகளை கடத்துபவர்கள், கொலை செய்பவர்களை அரபு நாடுகளில் வழங்கப்படும் தண்டனைகள் போல் இருக்க வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.


பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் கால்டாக்ஸி, வேன்களின் கண்ணாடி ஒட்டப்பட்டுள்ள கருப்பு நிறத்தை அகற்ற அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்பப் பள்ளியில் இருந்தே குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சி வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். குழந்தைகளை பெற்றோரே அழைத்துச் செல்லும் வகையில் அவர்களின் கருத்து கேட்கப்பட வேண்டும். இதற்கேற்ப பள்ளி அலுவல் நேரத்தில் திருத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளை அழைத்துச் செல்லும் வாகனங்களின் வழித்தடத்தை காவல்துறை அலுவலகங்களுடன் தொழில் நுட்ப ரீதியில் இணைக்கப்பட வேண்டும். வழக்கமாக குழந்தைகளை அழைத்துச்செல்லும் ஆட்டோ, வேன் மற்றும் கால்டாக்ஸிகளில் கேமரா பொறுத்த வேண்டும்.  இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி -தினமலர்