நெஞ்சள்ளித் தந்த தாயே!

- அஞ்சல் செய்யாத கடிதம்

ம்மா...!
என்னுயிர் சுமந்தவளே...‘ம்மா’ என்று சொல்லக்கூட நா தழுதழுக்கிறது!
நெஞ்சள்ளித் தந்த தாயே...-உன்னில்
நெருப்பள்ளிக் கொட்டிவிட்ட பாவியம்மா நான்.

பொங்கிப் பெருகும் என் கண்ணீரால் பாவம் கழுவித்தீராத பாவமம்மா நான்.
காதல் என்ற காமக் காமாலையால் உன்னையே தூக்கி எறிந்துவிட்டு எப்படியம்மா
என்னால் படிதாண்ட முடிந்தது?

உத்தமத் தாயே! உன் கருவில் உதிர்த்த நானா இப்படி...?!

அய்யகோ..!

எனைத் தலை நிமிரச் செய்ய உனையே தத்தமிட்ட தங்கமே..அம்மா
உன்னையா தலை குனிய வைத்துவிட்டேன்?

காவல்நிலையத்தில் ஊர்மக்கள் முன்னால் ‘நீ வேண்டாம் எனக்கு இவன்தான் முக்கியம்’
என்று இந்தக் கயவனுக்காகவா உன்னை உதாசீனப்படுத்தினேன்?
கதறினாய் நீ...! ‘பெத்த வயிறு பத்தி எரிகிறதென்றாயே..!’
அந்தத் தீயில் கருகிச் சாம்பலாகின்றேனம்மா..!

நீ பிரசவத்திற்காய் முக்கித் துடித்த வேதனைக்கு முன்னால் ‘காதல்’என்ற இந்தக்
காமுகனின் அன்பு எம்மாத்திரம்?

அமுதூட்டினாய்; அசிங்கம் அள்ளினாய்; நீயே அணைச்சீலையானாய்;
உன்னைப்பிழிந்து உனையே உணவாய்த் தந்தாய்; அமுதே...அம்மா...!
கேவலம் எச்சில் முத்தத்திற்கா நான் ஏமாந்தேன்?

தலைசீவிக்கெட்டி, பேன் பார்த்து, என் மயிர் உதிர்ந்தாலே உயிர் நடுங்கும்
உன் பாசத்திற்கு முன்னால் இந்த வேட்டை நாயின் வேஷம் எப்படியம்மா ஜெயித்தது?

என் நோய்க்கு நீ அவதியுறுவாயே..! நானே உனக்கு இன்று தீரா நோயாகிப்போனேனம்மா...!
‘ஏளா சாப்டியளா?’என்ற நலம்மாவின் பாசத்தை எத்தனை கோடி பங்குபோட்டால்
இந்தக் கெட்டவனின் பாசத்தை ஈடு செய்ய முடியும் அன்னையே..!

உன்னை, உயிர் தந்தையை, சகோதரனை, சகோதரிகளை, வீட்டை, நட்பை, வட்டாரத்தை...
அய்யோ சொல்லும் நடுங்குதம்மா நம் உயிருக்கும்மேலான மார்க்கத்தையே எப்படியம்மா
தூக்கி எறிந்துவிட்டேன்?

அற்பனின் சுகத்திற்காக அற்புதங்களைத் தொலைத்த அவலம் நான்தானோ?
கனவிலும் கூடாத கெட்ட கற்பனை கண்முன்னே எப்படிக் கைகூடியது என் அன்னையே!

ஆம்!
எனக்குப் பாலூட்டினாய்.. பாசமூட்டினாய்.. மார்க்கம் ஊட்ட மறந்தது யார் குற்றமம்மா?
நான் கேட்டதையெல்லாம் வாங்கித்தந்து செல்லம் கொட்டினாயே!
வழிகாட்டித் தட்டிக்கேட்கத் தயங்கியது ஏனம்மா?

உலக இன்பங்கள் என்னில் சூழ்ந்து நான் மூழ்கும்போதும் மறுமை இன்பத்தை
நீ சொல்லித்தரவே இல்லையே யார் குற்றம்?

என் இனிய தாயே!
சாப்பிட்டாயா? என்று எத்தனை நாள் கேட்டிருப்பாய்!
தொழுதாயா? ஓதினாயா? என்று ஒரு நாளாவது....
கல்லூரிக்கு அனுப்பி வைத்தாய் பாடத்தை உன்னிலேயே வைத்துவிட்டாயே!

பாசமிகு என் நேசத் தாயே!
பெத்தமனம் பித்து!
எனக்காய் இன்னும் கசியும்தானே உன் மனசு..!
நரகத்தின் பிடியில் நான் இன்று நிற்கிறேன்.உன் சுவனப் பாதத்தின் நிழலில்
தஞ்சமடையத் துடிக்கின்றேன்.
மன்னிப்பாயா..?

- மருளுதலுடன்,
 உன் மகள்
நன்றி - சமரசம்