ரஜினிகாந்த் அவர்களுக்கு தமுமுக தலைவர் கடிதம்:

இஸ்லாமியர்களின் நண்பராக விளங்கும் திரு. ரஜினிகாந்த் அவர்கள், தனது ஆருயிர் நண்பர் திரு. கமலஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டிருக்கும் தடையை கவனத்தில் கொண்டு, இஸ்லாமிய சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியிருக்கிறார்.

அன்புச் சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் பண்பட்ட மனிதர், ஆன்மீகவாதி. யாரையும் காயப்படுத்தும்படி பேசாதவர். அவரது திரைப்படங்களில் கூட எந்த ஒரு தனி மனிதரையும் சமூகத்தையும் தாக்கி வசனமோ காட்சிகளோ இடம்பெறாது.

1998ஆம் ஆண்டு கோவை மாநகரில் தொடர் குண்டுகள் வெடித்து தமிழகமே பதற்றமாக இருந்த சமயத்தில், சீனாவில் சுற்றுப்பயணத்தில் இருந்த திரு. ரஜினிகாந்த் அவர்கள் பாதியிலேயே சென்னைக்குத் திரும்பி வந்தார். "எனது அருமை இஸ்லாமிய சகோதரர்கள் இந்தப் பாதக செயலை செய்திருக்க மாட்டார்கள்' என்று கூறி தமிழகத்தை சூழ்ந்திருந்த பதற்றம் தணிய காரணமாக இருந்தார். அன்று அவரது ஆதரவான குரல், முஸ்லிம்களுக்கு, வெந்த புண்ணில் மருந்திடுவதாக அமைந்தது. இன்றும் அதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம்.

நண்பர் திரு. கமலஹாசன் அவர்களும் முஸ்லிம் சமூகத்தின் மீது நட்பும் சகோதர வாஞ்சையும் கொண்டவர் தான் என்பதை நாங்கள் அறிவோம். அவர், முற்போக்கு சிந்தனைக் கொண்டவர். பிறரது உணர்வுகளைப் புரிந்து கொள்பவர். 1992ல் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து நண்பர் திரு. கமலஹாசன் அவர்கள், பிரதமர் நரசிம்மராவை நேரில் சந்தித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் என்பதையும் நாங்கள் மறக்கவில்லை. இப்போதும் நாங்கள் கமலஹாசனை எதிரியாகக் கருதவில்லை. அவர் எடுத்திருக்கும் திரைப்படம் ஏற்படுத்தப் போகும் பாதிப்பைக் கருத்தில் கொண்டுதான் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்.

நாங்கள் விஸ்வரூபம் திரைப்படம் விஷயத்தில் பொறுமைக் காத்தோம். மூன்று மாதங்களுக்கு முன்னரே திரைப்படத்தை காண்பிக்கும்படி கேட்டுக் கொண்டோம். அவர் காலம் தாழ்த்திக் கொண்டே வந்தார். திரையிட வெகு சமீபமாகத்தான் படத்தைப் போட்டுக் காண்பித்தார்.
படத்தில் அவர் சித்தரித்திருக்கும் காட்சிகள் எங்களைக் கவலையுறச் செய்தது. உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் விரும்பத்தகாத செயல்கள் காரணமாக முஸ்லிம்களாகிய நாங்கள் ஏற்கனவே மனவேதனை அடைந்திருக்கிறோம். காயம் பட்டிருக்கும் எங்களை ஒரு நண்பராக இருந்துகொண்டு திரு.கமலஹாசன் அவர்களும் இப்படியானதொரு திரைப்படத்தை எடுத்திருப்பது தான் எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

நமது நாட்டில் சினிமாவின் மூலமாக புகழ்பெறும் ஒருவர் முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆகமுடியும் என்றால், அதே சினிமாவைக் கொண்டு ஒரு சமூகத்தைக் குற்றவாளியாக சித்தரிக்கவும் முடியும். இதை ஏன் திரு. கமலஹாசன் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் எங்கள் வருத்தம். இதனை சகோதரர் ரஜினிகாந்த் அவர்கள் பரிசீலிக்க வேண்டும்.
விஸ்வரூபம் படம் குறித்த திரு. ரஜினிகாந்த் அவர்களின் ஆலோசனைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
(ஜே.எஸ்.ரிபாயீ)
தலைவர், தமுமுக