ரிஸானா நனைந்தாள் உலகம் அழுதது. ஏன்?


‘ரிஸானா நபீக்’ உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பெயர்… நீதி சரிந்ததா? நிமிர்ந்ததா? என்று நீதியே இல்லாத உலகம் பேசிய பேசுபொருளின் கரு… இந்தச் சிறிய வயதில் முழு உலகையும் தன் பக்கம் ஈர்த்த சாதனையின் சொந்தம். ஏன் ரிஸானா இவ்வளவு பிரபல்யமானாள்? இலங்கையின் ஒரு மூலையில் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த அந்த சின்னவளை உலகம் ஏன் இவ்வளவு தூரம் தலைநிமிர்ந்து நோக்கியது. அந்த அதிசயம் நிகழ்ந்ததற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. ஆம் ரிஸானாவின் விடயத்தில் ஷரீஆ நீதி சம்பந்தப்பட்டிருக்கிறது அவ்வளவுதான்.
இவளைப் போன்ற எத்தனையோ ரிஸானாக்களை அமெரிக்க இஸ்ரேல் நீதிகள் ஆப்கானிலும் ஈராக்கிலும் பலஸ்தீனிலும் கொன்று குவித்திருக்கின்றன. செச்னியா விடயத்தில் ரஷ்யாவின் நீதி காஷ்மீர் விடயத்தில் இந்தியாவின் நீதி முஸ்லிம்கள் விடயத்தில் மியன்மாரின் நீதி சிரியா விடயத்தில் ஈரானின் நீதி என்பன யாவும் அமெரிக்க இஸ்ரேல் நீதிகளை விடக் குறைந்ததல்ல.
உலகம் இந்த நீதிகளை அலட்டிக் கொள்ளவில்லை. பேசுபொருளாக அவற்றை எடுத்துக் கொள்ளவுமில்லை. எனினும் ஷரீஆ நீதியை பேசுபொருளாக மாற்றி அதற்கு எல்லையில்லாத முக்கியத்துவத்தை உலகம் கொடுத்திருக்கிறது கொடுக்கத்தான் வேண்டும்.
ஷரீஆ நீதியை உலகின் பேசுபொருளாக ஆக்கிய ரிஸானாவுக்கு எமது பிரார்த்தனைகள். ரிஸானாவின் உயிர் மீண்டும் உலகத்துக்குத் திரும்பி வராது. ஆனால் பல ஆயிரம் ரிஸானாக்களுக்கு உயிர் கொடுக்க ஷரீஆ நீதி உலகை நோக்கி மீண்டு வரும். அப்போது உயிர் கொடுத்த ரிஸானா வாழ்ந்துக் கொண்டிருப்பாள்.
ரிஸானாவின் உயிருக்காக நல்லெண்ணத்தோடு அழுத முஸ்லிம் முஸ்லிமல்லாத அனைத்து உள்ளங்களையும் வாழ்த்திவிட்டு ரிஸானா நபீக்கின் விடயத்துக்கு வருகிறேன். ரிஸானாவின் மரண தண்டனை குறித்து இதுவரை ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தையும் தொகுத்து வகுத்தால் ரிஸானா நபீக் விடயத்தில் இரண்டு விதமான அலசல்கள் நடைபெற்றுள்ளன. அந்த அலசல்கள் இரண்டில் எதை உலகம் சரி கண்டாலும் ஷரீஆ நீதியை எவரும் குறை கூற முடியாது. ஷரீஆ நீதி அந்த இரண்டு அலசல்களின்போதும் முன்வைக்கப்பட்ட கீழ்த்தரமான விமர்சனங்கள் கண்டனங்கள் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றது.
அலசல் 01: இந்த அலசலில் நீதி விசாரணை குறித்து பல வகையான விமர்சனங்கள் ஊடகங்களில் உலா வருகின்றன. ரிஸானா குற்றவாளியல்ல. ஒரு சதிமோசக் கொலையை அவள் செய்யவில்லை. செய்ய வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. ரிஸானாவின் கையிலிருந்த குழந்தை இறந்ததற்கான காரணங்கள் விஞ்ஞானபூர்வமாகக் கண்டறியப்படவில்லை. அது இயற்கை மரணமாகவும் இருக்கலாம். அல்லது பால்புரையேறி மூச்சுத் திணறி குழந்தை இறந்திருக்கலாம். குழந்தை இப்படித்தான் இறந்தது என்பதைக் கண்ட சாட்சிகளும் இல்லை.
இந்த நிலையில் ரிஸானா குற்றவாளி என்பதை உறுதி செய்வதற்கான விசாரணை முழுமையாக நடைபெறவில்லை. தீர்ப்பு அவசரமாக வழங்கப்பட்டிருக்கிறது. இது நீதியல்ல. தனது பக்க நியாயங்களை முன்வைத்து வாதிடுமளவு அறிவுத் திறமைகள் இல்லாத ஒரு சின்னப் பெண் மொழி தெரியாத புதியதொரு சூழலில் நீதி விசாரணையொன்றுக்கு முகம் கொடுக்கும்போது அச்சத்துக்குட்படுவது இயல்பு. அவளது நியாயங்களை முன்வைத்து வாதிடுவதற்கு சட்டத்தின் உதவியை அவள் பெற்றாளா? அல்லது பெற வேண்டும் என்ற அறிவு அவளுக்கு இருக்கவில்லையா?
இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் அவள் குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளாள். இது நீதியின் நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டது. அதனால்தான் ரிஸானா நபீக் வீணாக உயிரிழக்க வேண்டியேற்பட்டுள்ளது. இவ்வாறு ஊடகங்கள் ரிஸானா நபீக்கிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை பல்வேறு கோணங்களில் விமர்சிக்கின்றன.
இந்த விமர்சனங்கள் உண்மையானால் (இந்த விமர்சனங்களின் உண்மைத் தன்மைகள் ஆராயப்பட வேண்டும்) குற்றம் யாரைச் சாரும்? ஷரீஆ நீதியையா? அல்லது நீதி விசாரணை செய்து ரிஸானாவைக் குற்றவாளியெனத் தீர்ப்பு வழங்கியவர்களையா? இந்த விமர்சனங்கள் உண்மையானால் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரிஸானாவை விசாரணை செய்து குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியவர்களுக்கே உரியன.
ஷரீஆ நீதி எந்த வகையிலும் ரிஸானா விடயத்தில் அநீதியிழைத்ததாகக் கூற முடியாது. இலங்கையில் பிரதம நீதியரசரை விசாரித்த முறை பிழையானது என ஊடகங்கள் விமர்சிக்கின்றன. ஏன் ஊடகங்கள் நீதி பிழையானது என விமர்சிக்காமல் விசாரித்த முறை பிழையானது என விமர்சிக்க வேண்டும்? இலங்கையின் நீதி விடயத்தில் ஊடகங்களின் முகம் வேறு ஷரீஆ நீதி விடயத்தில் ஊடகங்களுக்கு மற்றொரு முகமா?
நீதியை விமர்சிப்பவர்களிடமே நீதியில்லாததை இங்கு பார்க்கிறோம். இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இன்று இப்படியான இரட்டை வேடம்தான் தாண்டவம் ஆடுகின்றது. அமெரிக்கா இஸ்ரேல் போன்ற வல்லரசுகளின் வேடத்தை எல்லோரும் தரித்திருக்கிறார்கள். தங்களது சுயத்தை இழந்து வேடம் பூண்டவர்களால் நீதியை எப்படி நிலை நாட்ட முடியும்.
அலசல் 02: இது ஊடகங்களில் தனியாக அலசப்பட்ட விடயமல்ல. முன்னையதோடு இரண்டறக் கலந்து வந்த அலசல்தான் இது. எனினும் அலசியவர்களுக்கு விளங்காத ஒன்றை விளக்குவதற்காக அவர்களது அலசல்களை நான் இரண்டாகப் பிரித்துக் காட்டுகிறேன். அலச முன்பு இதனை அவர்கள் பிரித்துப்பார்த்திருக்க வேண்டும். எனினும் பிரித்துப் பார்க்குமளவு நிதானம் அவர்களிடமில்லை. ஷரீஆ என்றவுடனேயே நிதானத்தை இழந்து விடுகிறார்கள் ஒரு பூதத்தைக் கண்டது போல்.
இரண்டாவது அலசல்: விசாரணை சட்டபூர்வமாக நடந்தேறியுள்ளது. கொலை என்பதற்கான ஆதாரங்கள் விஞ்ஞான பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகங்களுக்கிடமின்றி ரிஸானா கொலையாளிதான் என்பது நிரூபணமாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிரூபணம் உறுதியானதன் பின்பு தண்டனை வழங்கப்படுகிறது. தண்டனை ஷரீஆ நீதியின்படிதானே வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஷரீஆ நீதி காட்டுமிராண்டித்தனமானதே என கூக்குரலிட்டன ஊடகங்கள். இதுதான் ஊடகங்களில் அலசலுக்குட்பட்ட இரண்டாவது விடயம்.
உண்மையில் ஷரீஆ நீதி கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு கொலையாளிக்கான தீர்ப்பு கொலை என்றுதான் வரையறை செய்கிறது. இது காட்டுமிராண்டித்தனமா?
இது காட்டுமிராண்டித்தனம் என உலகமே வாதிட்டாலும்﹐ ஒருவர் மாத்திரம் இதனைக் காட்டுமிராண்டித்தனம் எனக் கூற ஒருபோதும் முனைய மாட்டார். அவர்தான் கொலை செய்யப்பட்டவரின் சொந்தங்கள் தாய் தந்தையர்கள் அல்லது பிள்ளைகள் சகோதரர்கள் என்போர். இவர்களது உணர்வைத்தான் ஷரீஆ நீதியின் கர்த்தாவாகிய அல்லாஹ் கருத்தில் எடுத்திருக்கிறான். கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தவர்கள்தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள்.
நீதி அவர்களுக்குத்தான் வேண்டும். காட்டுமிராண்டித்தனம் எனக் கூக்குரலிடுபவர்களுக்கு இங்கு நீதி தேவையில்லை. அவர்கள் கொக்கரித்துக் கொண்டிருக்கட்டும். நீதி தேவையானவர்களுக்கு நான் நீதி வழங்குகிறேன் என மனிதனைப் படைத்தவன் எடுத்த முடிவுதான் ஷரீஆ நீதி.
உலகில் நடைபெறுகின்ற எத்தனையோ குற்றச் செயல்களுக்கெதிராக வீதியிலிரங்கி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் அந்தக் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக ‘மரண தண்டனையை’ அறிமுகம் செய் அமுல்படுத்து என்று கோஷமிடுகின்றனர். அங்கெல்லாம் பாதிக்கப்படட்டவர்களுக்காகக் குரல் கொடுத்து மரண தண்டனைக்கு வந்தனம் கூறுபவர்கள் ஷரீஆ நீதி என்றவுடனேயே மரண தண்டனையைக் காட்டுமிராண்டித்தனம் என எப்படி வர்ணிக்கிறார்கள்.
அவர்கள் கோஷமிடும் அல்லது வாழ்த்துக் கூறும் மரண தண்டனை ஈவிரக்கமற்றது. ஷரீஆ நீதி விதிக்கும் மரண தண்டனை கருணையுடன் கலந்தது. கொலைக்கு கொலை என்று தீர்ப்பு வழங்கும் ‘ஷரீஆ நீதி’ மற்றுமொன்றையும் வலியுறுத்துகிறது என்பதை நிதானமிழந்த விமர்சகர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறி விடுகிறார்கள். அல்லது வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்.
கொலை செய்யப்பட்டவரின் குடும்பம்தான் ஷரீஆ நீதியின்படி தனது இறுதி முடிவை வழங்க வேண்டும். ஷரீஆ நீதிமன்றம் விசாரணைகளின் பின் நடைபெற்றுள்ளது கொலைதான் என்பதை ஆதாரங்களோடு உறுதி செய்த பின்னர் குடும்பமே தீர்ப்பு வழங்க வேண்டும். ஷரீஆ நீதியின் மூலகர்த்தாவான அல்லாஹ் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கையில் நீதி வழங்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இருந்துவிடவில்லை. மாறாக அந்தக் குடும்பத்தினரின் உணர்ச்சிகளைத் தடவிக் கொடுத்து நீங்கள் விரும்பினால் உங்களுக்கு உயிர் நட்டத்தை விளைவித்தது போல் கொலையாளிக்கும் உயிர் நட்டத்தை விளைவிக்கலாம். அல்லது கொலையாளியிடமிருந்து நீங்கள் விரும்பும் ஒரு நட்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது பெருமனதோடு மன்னித்தே விடலாம். என பல தரப்பட்ட தெரிவுகளை அவர்கள் முன் வைக்கிறான் ஷரீஆவின் மூலகர்த்தா.
அது மட்டுமல்ல மன்னிப்பதை ஊக்குவித்து அதற்கு நன்மை தருவதாகவும் கூறுகின்றான். ஷரீஆ நீதி எத்துனை அற்புமானது மனித உணர்வுகளுக்கும் மதிப்பளித்து மனிதனின் மானுசீகத்தையும் உயர்த்துகின்றது. இதுவா காட்டுமிராண்டித்தனம்?
ரிஸானா நபீக் விடயத்திலும் இந்த நடைமுறையே கைக்கொள்ளப்பட்டது. ஷரீஆ நீதிமன்றம் கொலை எனத் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் நாம் முன்னர் பார்த்ததுபோல் அவர்கள் தவறு செய்திருந்தால் அது அவர்களின் குற்றமே ஷரீஆ நீதியின் குற்றம் அல்ல. பின்னர் தண்டனைத் தீர்ப்பு குடும்பத்திற்கே விடப்பட்டது. மன்னர் குடும்பம் முதல் அனைவரும் ரிஸானாவை மன்னிக்குமாறு இறந்த அல்லது கொலை செய்யப்பட்ட குழந்தையின் குடும்பத்தை வேண்டினர். குற்றம் நடைபெற்று ஏழு ஆண்டுகள் ஆகியும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரிஸானாவை மன்னிக்கும் மனநிலையில் இருக்கவில்லை. இறுதி நேரத்திலும் அவர்களது விருப்பம் கேட்கப்பட்டபோது அவர்கள் மன்னிக்கத் தயாராக இருக்கவில்லை.
அவ்வளவு கள்நெஞ்சமா அவர்களுக்கு? என்று யாராவது இந்த இடத்தில் வினவலாம். எனினும் முஸ்லிம்களாகிய நாம் அப்படிக் கேட்க மாட்டோம் ‘மன்னித்திருக்கலாம்’ அல்லது ‘மன்னித்திருந்தால் நன்றாக இருக்குமே’ அல்லது ‘மன்னித்திருக்க வேண்டுமே’ என்றுதான் நாம் கூறுவோம். காரணம் ஷரீஆ நீதி மன்னிப்பை ஊக்குவித்தாலும் தண்டிக்கும் உரிமையைப் பறிக்கவில்லை. அதனால் அந்த உரிமையை முஸ்லிம்களாகிய நாமும் பறிக்க முடியாது. முஸ்லிமல்லாதவர்கள் மன்னிக்காத அந்தத் தாய் தந்தையைக் குறை காண்பது அவர்களைப் பொறுத்தது. எனினும் ஷரீஆ நீதியை அவர்கள் குறை காண்பது எந்த வகையிலும் நீதியானது அல்ல. குறை காணும் ஒவ்வொருவரும் பிறறொருவரால் தனது குழந்தை கொலை செய்யப்பட்டால் எந்த மனநிலையில் இருப்பார் என்பதை ஒரு முறை பரிசீலனை செய்து கொள்ளட்டும்.
இதனை எழுதும் நான் ரிஸானா சம்பவத்தை விமர்சிப்பவர்கள் எப்படியான நோக்கில் தங்களது விமர்சனத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டலையே வழங்கியுள்ளேன். ரிஸானா சம்பவத்தின் பின்னணிகள் எவை? உண்மைகள் என்ன? என்பதை விமர்சனங்கள் செய்யும் ஊடகங்கள் வாயிலாகவன்றி நேரடியாக ஆராய்ந்து அறிந்தவனல்ல.
எனினும் ஒரு மனிதன் என்ற வகையில் எனதுள்ளம் ரிஸானாவுக்காக அழுகிறது. ஒரு முஸ்லிம் என்ற வகையில் எனதுள்ளம் பின்வரும் விடயத்தில் ஆறுதலடைகிறது.
அல்லாஹ் ஒரு ரிஸானாவை வைத்து உலகத்தை ஒரு முறை உசுப்பியுள்ளான். அந்த உசுப்பலில் இஸ்லாம் எல்லையற்ற நன்மைகளைப் பெற்றுள்ளது பெற்றுக் கொண்டிருக்கிறது. எனினும் அந்த உசுப்பலில் பலியானவள் ரிஸானா அல்லவா? அதனால் ஷரீஆ நீதியை விமர்சித்தவர்கள் கூட நாளை மறுமையில் நான் அந்த ரிஸானாவாக இருந்திருக்கக் கூடாதா என்று நினைக்குமளவு ரிஸானாவைத் தனது அருளால் அல்லாஹ் பரவசப்படுத்துவான் போலும் என எனது மனம் கூறுகின்றது.
யா அல்லாஹ்! ரிஸானாவின் பாவங்களை மன்னித்து உனது அருள் சுவனத்தில் அவளை சேர்த்தருள்வாயாக!
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
(2013-01-16 “எங்கள்தேசம்”பத்திரிகையில் வெளியான சிறப்புக்கட்டுரை)
-http://lankamuslim.org