யார் தேச துரோகி? எது தேச துரோகம்! மௌலானா ஆரிப் அலி அவர்களின் எழுச்சி உரை :

கேரளா ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர் மௌலானா ஆரிப் அலி அவர்கள் 24-11-2012 அன்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழுவினருக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றுகையில்  எனக்குத் தமிழ் தெரியாது, எனவே தமிழின் சகோதரி மொழியான மலையாளத்தில் பேசுகிறேன்! இன்று நாங்கள் நோன்பு வைத்திருக்கின்றோம். ஆஷுரா நோன்பு! கதிரவன் உதிப்பதர்க்குமுன் உணவு உண்ட நாங்கள் இதோ கதிரவன் மறையும் நேரத்தில் உணவு உண்டு நோன்பு துறக்கும் அருமையான நேரத்தில் நாங்கள் உங்களோடு இருக்கின்றோம்!

நபிமார்கள் வரிசையில் ஏசுநாதருக்கு முந்திய நபியான மோசெஸ் அவர்கள் மக்கள் புரட்சிக்குத் தலைமை ஏற்று கொடுங்கோலன் எகிப்திய மன்னன் பாரோவை கடலில் மூழ்கடித்து வெற்றி கொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளில் கேரளத்திலிருந்து வந்த நாங்கள் இன்று உங்கள் முன் நிற்கின்றோம். பாரோ மன்னன் தனது நாட்டின் ஆண் மக்களைக் கொன்று பெண்களுக்கு எதிராக சொல்லொண்ணா வன்முறைகளை ஏவி அராஜக ஆட்சி செய்தான். அந்த அரசு பயங்கரவாதத்தை நபி மோசெஸ் அவர்கள் வெற்றி கண்டது போல் நீங்களும் சகோதர சகோதரிகளே, இந்த அரசு பயங்கரவாதத்தை வெற்றி கொள்வீர்கள்!

நான் கோழிகோட்டுக்கு அருகிலுள்ள மாவூர் என்ற பகுதியைச் சார்ந்தவன். எங்கள் பகுதியில் சுற்றுப்புறச் சூழலுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய “குவாலியர் ரயோன்” கம்பனிக்கு எதிராக ஒரு வீரம் செறிந்த போராட்டத்தை அந்தப் பகுதியில் நாங்கள் நடத்தினோம். மக்கள் போராட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாத குவாலியர் ரயோன் தனது கம்பனியை இழுத்து மூடியது மட்டுமல்ல பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்து லட்சம் முதல் இருபது லட்சம் ரூபாய் வரை இழப்பீட்டுத் தொகை வழங்கியது.

அப்போது எங்களுக்கு ஊடக ஆதரவு இல்லை, மாவூரைத் தவிர பிற மக்களின் ஆதரவு இல்லை. அனால் என் இனிய சகோதர சகோதரிகளே இன்று உங்களுக்கு ஊடக அதரவு உள்ளது, உலகெங்கும் வாழுகின்ற பிற மக்களின் அதரவு உள்ளது அனைத்துக்கும் மேலாக உங்களிடம் வாய்மை உள்ளது, நியாயம் உள்ளது. இறை உதவியுடன் உங்கள் போராட்டம் நிச்சயம் வென்று காட்டும்!

சகோதர சகோதரிகளே, இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட கூடங்குளம் போராளிகள் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டுள்ளதாக அறிகிறோம். யார் தேச துரோகி? எது தேச துரோகம்!

தேசம் என்பது பிரதமர் மட்டும் தான் என்றால்,
தேசம் என்பது குடியரசுத் தலைவர் மட்டும் தான் என்றால்,
தேசம் என்பது முன்னாள் குடியரசுத் தலைவர் மட்டும் தான் என்றால்,
தேசம் என்பது பாரத தேசத்தைச் சுரண்டும் பன்னாட்டுக் கம்பனிகள் மட்டும் தான் என்றால்,
தேசம் என்பது இந்த நாட்டின் செல்வத்தை சூரையாடுகின்ற தனியார் நிறுவனங்கள் மட்டும் தான் என்றால்,
நாங்கள் இந்த தேச துரோகத்தை என்றும் செய்வோம்,

மாறாக,
தேசம் என்பது இந்த மண்ணாக இருந்தால்,
தேசம் என்பது இந்த காற்றாக இருந்தால்,
தேசம் என்பது இந்த நீராக இருந்தால்,
தேசம் என்பது இங்கு வாழும் மக்களாக இருந்தால்,
தேசம் என்பது இங்குள்ள பல்லுயிர்ப் பரவலாக இருந்தால்
நாங்கள் எப்போதும் இந்த தேசத்துக்கு துரோகம் செய்யமாட்டோம்!

சகோதர சகோதரிகளே, கூடங்குளம் அணுஉலையில் ஏதாவது பாதகம் ஏற்பாட்டால் எழுநூறு கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள தமிழகத்தின் தலைநகருக்கு எந்த பாதிப்பும் இருக்கப் போவதில்லை ஆனால் கேரளாவின் தலைநகரம் வெறும் எழுபது கிலோமீட்டர் தூரம் தான்! எனவே நாங்கள் என்றும் உங்களோடு இருப்போம் இறையருளால் நீங்கள் ஜெயிப்பீர்கள்! நன்றி!

- மௌலானா ஆரிப் அலி அவர்களின் உரையை, ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் உதயகுமார் தமிழில் மொழிபெயர்த்தார்.
தகவல்- சேயன் ஹமீது, கடையநல்லூர்