விளம்பர உலகில் வெதும்பும் சிறார்கள்!



சில விநாடிகள் மட்டுமே வரும் விளம்பரங்களின் செய்தி, நாள் முழுக்க சிறுவர்களை இயக்குகின்றது. அவர்களது அறிவுத்திறனின் அடிப்படையே விளம்பரங்கள்தான். வேகமான படத்தொகுப்புக்களில் விரைந்து செல்லும் விளம்பரத்தின் சிறு செய்தி கூட, சிறுவர்களின் மனதில் தைப்பதற்குத் தவறுவதில்லை. விளம்பரங்கள் செதுக்கித்தரும் ‘மகிழ்ச்சியான குடும்பம்’ உண்மையில் ஒரு கற்பனைதான் என்றாலும், அந்த மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகச் சிறுவர்கள் ஏங்குகிறார்கள். இயற்கையின் இயக்கத்தையும், சமூகத்தின் போராட்டத்தையும் அறிய வேண்டிய இளம் பருவம், இத்தகைய செயற்கையான, சுயநலம் மிகுந்த, ஆடம்பரமான கற்பனை உலகத்தில் வெம்பி வாடுகிறது. பஞ்சில் பழுத்த மனம், தான் காணும் தொலைக்காட்சி வாழ்க்கை கிடைக்காத போது வன்முறையின் பக்கம் எளிதாக நகருகிறது.
சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருள் எது, எது வாங்கினால் எது இலவசம், எதற்குத் தள்ளுபடி, எந்தக் கடையில் என்ன கிடைக்கும் முதலான நுகர்வுக் கலாச்சார பொது அறிவில், குழந்தைகள் பெரியவர்களை விஞ்சி நிற்கிறார்கள். அவ்வகையில் முதலாளிகளின் விளம்பரங்களுக்கு பிரச்சார பீரங்கிகளாக சிறுவர்களே விளங்குகிறார்கள். ஒரு குடும்பத்தில் ஒரு புதிய பொருளை வாங்க வேண்டுமென்ற போராட்டம், அநேகமாக சிறியவர்களிடமிருந்துதான் துவங்குகிறது.
வானவேடிக்கை போல விளம்பரங்களை வாரி இறைக்கும் இன்றைய முதலாளித்துவத்தின் அடிப்படைகளில் ஒன்றான நுகர்வுக் கலாச்சாரம், தன்னளவிலேயே ஒரு வன்முறையைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு புதிய செல்பேசி, கார், தொலைக்காட்சி முதலானவை அறிமுகமாகும் போதும் அவற்றின் பழைய மாடல்களை வைத்திருப்பவர்களிடம், ஒரு பதட்டம் பற்றிக் கொண்டு விடுகிறது. புதியதை வாங்கும் வரை, மனம் அமைதியடைவதில்லை. பங்குச் சந்தை குறியீட்டெண் போல, ஒவ்வொரு புதிய விளம்பரமும் இந்த மெல்லிய வன்முறையின் அளவைக் கூட்டுகிறது. இதில் சிக்கியிருக்கும் பெரியவர்களின் கதியே இதுவென்றால், சிறியவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
விளம்பரங்களின் வழியாக மனதில் பதியும் புதிய பொருளை வாங்க வேண்டுமென்று சிறார்கள் அடம் பிடிக்கிறார்கள்; சண்டை போடுகிறார்கள். வகுப்புத் தோழர்களிடம் அற்பவிசயங்களுக்காக எழும் பொறுமையின்மைக்கான அரிச்சுவடி, இதிலிருந்து ஆரம்பிக்கிறது. அவ்வகையில் சகிப்புத் தன்மையற்ற மனநிலையை நுகர்வுக் கலாச்சாரம் கற்றுத் தருகிறது. நச்சரிப்பு தாங்காத பெற்றோர்களும், கேட்டதை வாங்கித் தருகிறார்கள். பிடிவாதம் பிடித்தால் நினைத்ததை வாங்கிக் கொள்ளலாம் என்பதைக் குழந்தைகள் தமது சொந்த அனுபவத்தில் அறிந்து கொள்கிறார்கள். இந்தப் பிடிவாதம்தான் வன்முறையின் துவக்கப்புள்ளி என்பதைப் பெற்றோர்கள் உணர்வதில்லை.
“இந்த உலகத்தில் பெரும்பான்மை மக்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதுதான் நமக்கும்” என்று போதித்து வளர்ப்பதுதான், குழந்தைகளை  ஒரு சமூக மனிதனாக வளர்ப்பதற்குரிய “சரியான அணுகுமுறை. மாறாக “இந்த உலகில் நீ மட்டும்தான் முக்கியம், உன் மகிழ்ச்சிதான் எங்கள் மகிழ்ச்சி”, என்று குழந்தைகளைச் சீராட்டிப் பாராட்டி வளர்க்கிறார்கள் பெற்றோர்கள். இப்படிச் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் சிறுவர்களிடம்தான் பொறுமையின்மையும், கோபமும், பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்கின்றது. இந்த எதிர்மறைப் பண்புகளின் விளைவு குறித்து இவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதால் இவர்கள் யாருக்கும் அடங்குவதில்லை.
ஆனால் இவர்களின் பல தவறுகள் பெற்றோரால் மன்னிக்கப்படுகின்றன. நிகழ்காலத்தில் கண்டிக்கப்படாத தவறுகள், எதிர்காலத் தவறுகளுக்கான ஊக்கசக்தியாக மாறிவிடுகின்றன. துப்பாக்கியால் சக மாணவனைச் சுடுவதென்பது, நிச்சயம் அவர்களது முதல் தவறாக இருந்திருக்க முடியாது. துப்பாக்கி வெடிப்பதற்கு முன்பே வன்முறையின் வெவ்வேறு வடிவங்கள் அவர்களிடம் வெடித்திருக்க வேண்டும். அந்தப் பட்டியலில் இன்னொன்று என்று, அந்த மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டைப் பற்றி அலட்சியமாகக் கருதியிருக்க வேண்டும். அல்லது,  அப்பொதெல்லாம் தங்களைக் காப்பாற்றியிருக்கும் பெற்றோர்கள் இப்போதும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையும் அவர்களை இந்த எல்லைக்கு கொண்டு வந்திருக்கக்கூடும்.

        click: செல்பேசி, இணையத்தில் சீரழியும் மாணவர்கள்!


நன்றி: http://www.vinavu.com/