அருகும் விளையாட்டு அரிக்கும் வீடியோ விளையாட்டு!


உடலுழைப்புக்கு அடுத்த படியாக குழந்தைகளுக்குத் தேவைப்படுவது, வியர்க்க விறுவிறுக்க விளையாடப்படும் விளையாட்டு. மனம் விரும்பிச் செய்யப்படும் இவ்வுழைப்பில்தான் அவர்கள் வளருவதற்கேற்ற வலிமை உடலுக்கும், உள்ளத்திற்கும் கிடைக்கிறது. குழுரீதியான உணர்வு பெறுவதற்கும், சண்டையுடன் கூடிய நட்பு அரும்புவதற்கும், வெற்றி தோல்விகளையெல்லாம் சகஜமாக எடுத்துக் கொள்வதற்கும், பாடங்கள் கற்பதற்கேற்ற உற்சாகத்தைப் பெறுவதற்கும், விளையாட்டு அவசியமாகிறது. அடுக்குமாடிக் கட்டிடங்கள் துருத்தி நிற்கும் நகரங்களில், மைதானங்கள் காணக் கிடைப்பதில்லை. பல்லாயிரம் ரூபாய்களைக் கட்டணங்களாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளிலும், விளையாட்டுத் திடல்கள் போதுமானதாக இல்லை. மாணவர்களும் இந்திய அணி ஆடும் சமயங்களில் மட்டும் கிரிக்கெட் ஆடுவதைத் தவிர, விளையாட்டில் விருப்பத்துடன் ஈடுபடுவதில்லை.
இந்த இடத்தை மாணவர்களால் பரவலாக விளையாடப்படும் வீடியோ விளையாட்டு எடுத்துக் கொள்கிறது. இணையத் தள மையங்களில் பாலுறவு விசயங்களுக்கு அடுத்தபடியாக மாணவர்கள் விரும்புவது இந்த எந்திர விளையாட்டைத்தான். வியர்வைத் துளிகளுக்கு வேலை கொடுக்காமல், மூளையை அரிக்கும் இந்த விளையாட்டைத் தொடர்ந்து விளையாடும்போது மாணவர்கள் அதற்கு அடிமையாகிறார்கள்.




இந்தப் போதையிலிருந்து மீள்வது சிரமம் என்பதோடு, இது ஏற்படுத்தும் உளவியல் கோளாறுகள் அதிகம். கற்பனையான உலகில் கற்பனையான வெற்றிக்காக மணிக்கணக்கில் ஆடும் மாணவர்கள், அதீத உணர்ச்சிக்கு ஆட்படுகிறார்கள். இந்த உணர்ச்சிச் சமநிலைச் சீர்குலைவு வன்முறைக்குப் பொருத்தமான சமன்பாட்டைக் கொண்டிருக்கிறது.
விளையாடி முடித்ததும் ஏற்படும் சோர்வு நிஜ உலகோடு கொண்டுள்ள உறவைச் சோர்வுக்குள்ளாக்குகிறது. இந்தச் சோர்விலிருந்து வாழ்வின் பிற அம்சங்கள் மீது அளவு கடந்த சோம்பல் உருப்பெறும். கணிப்பொறி விளையாட்டின் மீது ஒன்றி பரவசம் அதிகரிப்பதற்கேற்ப மனித உறவுகளின் மீது நெருடல் அதிகரிக்கிறது. பிரச்சினை வரும்போது அமைதியுடன் எதிர்கொள்ள வேண்டிய மூளையின் தன்மை, நேரெதிராக மாற்றப்படுகிறது. வீடியோ விளையாட்டின் வேகம் விரிவடைதற்கேற்ப, நிஜவாழ்வின் பிரச்சினைகளை பரிசீலிக்கும் பொறுமை சுருங்குகிறது. 
விதவிதமான உணவு வகை எல்லைமீறும் உணர்ச்சிகள்!


இப்படி உடலுழைப்பிலும், விளையாட்டிலும் அன்னியப்பட்டுள்ள மாணவர்கள் விரும்பும் மற்றுமொரு விசயம் நவீன உணவு வகைகள். பீட்ஸா, பர்கர், விதவிதமான சாக்லேட், பிஸ்கட், ஐஸ்கிரீம் வகைகள், பெட்டிக் கடைதொட்டு சரம்சரமாகப் பல வண்ணங்களில் தொங்கும் நொறுக்குத்தீனி பாக்கட்டுகள், உணவகங்களில் கிடைக்கும் பலநாட்டுத் துரித உணவு வகைகள்…. இவையெல்லாம் தொலைக்காட்சி விளம்பரங்கள் போல, குழந்தைகள் மனதில் ஆழப்பதிந்து விட்டன.
குடும்பத்துடன் வெளியில் செல்லும்போது சிறார்கள் அடம்பிடித்துச் சண்டையிடுவது இவ்வுணவு வகைகளுக்காகத்தான். வீட்டுச்சமையல் என்பதே இப்படி டப்பா வகை உணவுப் பிரிவுக்கு வேகமாக மாறி வருகிறது. இது பற்றி பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், மருத்துவர்களும் கவலைப்படாமல் இல்லை. ஆனால் அந்தக் கவலை, குழந்தைகள் குண்டாவது குறித்த பிரச்சினையாக மட்டுமே நின்று விடுகிறது.
உண்மையில் இந்த ‘குண்டு’ பிரச்சினை இரண்டாம் பட்சமானதுதான். நவீன உணவு வகைகளில் சர்க்கரையும், உப்பும், கொழுப்பும் மிக அதிகம். ஒரு சிறுவனது உடலில் இம்மூன்றும் திடீரென்று அதிகரிக்கும் போது அது மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இப்படி தொடர்ந்து தின்று தீர்க்கும் சிறுவர்கள், அவற்றைச் செலவழிக்கும் உடலுழைப்பு ஏதும் இல்லாததால் எளிதில் உணர்ச்சி வசப்படுவர்களாக மாறுகிறார்கள். எல்லா வகை உணர்ச்சிகளும் எல்லை மீறும்போது, அதன் இறுதி நிலை வன்முறையில் தான் முடியும். இதுபோக உடல் பருமனாவதால் சோம்பேறிகளாகவும், மந்தகதிக் குழந்தைகளாகவும் நாட்களைத் தள்ளுகிறார்கள். ஏற்öகனவே அவர்களது வாழ்க்கைச் சூழல் இப்படித்தான் உள்ளது எனும்போது, டப்பா வகை உணவுகள் அந்தச் சூழலை வீரியமாக்குகின்றன. பெற்றோர்களே இந்த நவீன உணவு வகைகளுக்கு அடிமையாகும் போது, குழந்தைகளைக் கடைத்தேற்றுவதற்கு வழியேதுமில்லை.

     CLICK:அரசு பள்ளி நன்மைகள் தனியார் பள்ளி தீமைகள்!



நன்றி: http://www.vinavu.com/