அரசு பள்ளி நன்மைகள் தனியார் பள்ளி தீமைகள்!

இந்த நொறுக்குத் தீனிகளின் பெயர்கள் கூடத் தெரியாமல், சத்துணவிற்காகவே குழந்தைகள் கோடிக்கணக்கில் அரசுப் பள்ளிகளுக்கு வருவதும் இந்நாட்டில்தான். இன்று அரசுப் பள்ளிகள் முற்றிலும் ஏழைகளுக்கு மட்டுமானவையாக மாறி விட்டன. நகரங்களைப் பொறுத்தவரை, சென்ற தலைமுறைப் பெற்றோர்களில் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளிஅரசுக் கல்லூரிகளில் படித்து வந்தவர்கள்தான். அப்போது தனியார் பள்ளிகள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே இருந்தன.
ஏழையும், பணக்காரனும், குறிப்பிட்ட அளவில் சாதிய வேறுபாடுகள் இல்லாமலும், சமூகத்தின் எல்லாப் பிரிவினரும் அரசுப் பள்ளிகளில் சங்கமித்தனர். கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்களின் வழியாக கிராம வாழ்க்கையைப் பற்றியும், விவசாயத்தின் நிலை குறித்தும் தெரிந்து வைத்திருந்தனர். தனது வர்க்கம் தவிர, ஏனைய வர்க்கங்கள் எப்படி வாழ்கின்றன என்பதை அறியக்கூடிய வாய்ப்பை அன்றைய அரசுப் பள்ளிகள் வழங்கின. அதனால்தான் இன்றைய மாணவர்களை விட, சென்றதலைமுறை மாணவர்கள் பொது அறிவிலும், வாழ்க்கை குறித்த யதார்த்தமான கண்ணோட்டத்திலும் மேம்பட்டு விளங்குகின்றனர்.  திராவிட இயக்கமும், இடதுசாரி இயக்கமும் இந்தப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்தான் தமது அடிப்படையைக் கட்டியமைத்தன.
இன்று வர்க்க முரண்பாடு துல்லியமாகப் பிரிந்து விட்டது. காசு உள்ளவனுக்கு தனியார் பள்ளி மற்றும் சுயநிதிக் கல்லூரி; இல்லாதவனுக்கு அரசுப்பள்ளி. தனியார் மயம் நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வேட்டைக்காடாக மாற்றிவருகிறது என்ற அநீதிக்கு, குறைவில்லாத பங்கை தனியார் பள்ளிகளும் செய்து வருகின்றன. மேற்கண்ட துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பலரும், இத்தகைய தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள்தான். அரசுப் பள்ளிகள் என்னென்ன நன்மைகளைச் செய்கிறதோ, அவற்றின் நேரெதிர் தீமைகளைத் தனியார் பள்ளிகளும் சுயநிதிக் கல்லூரிகளும் செய்து வருகின்றன. இங்கு மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்தோரே படிக்க வருகின்றனர். உழைக்கும் வர்க்கங்களைச் சேர்ந்தவர்களும் கடன் வாங்கியாவது இப்பள்ளிகளுக்கு வந்தாலும், இவர்கள் இங்கே சிறுபான்மையினர்தான். ஆகவே இப்பள்ளிகள் சமூகத்தைப் பிரதிபலிப்பதில்லை. வண்ணமயமான வாழ்க்கையின் வகைகள் இங்கே பரிமாறப்படுவதில்லை. நடுத்தர வர்க்கத்தின் காரியவாத வாழ்க்கை மட்டுமே இங்கு பேசுபொருளாக இருக்கிறது.
சமீபத்தில் சந்தைக்கு வந்த செல்பேசிகள், வாகனங்கள், டி.வி.க்கள், கணினிகள் எவை என்பதுதான் இங்கே மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் கல்வி! எதிர்காலத்தில் டாக்டர், இன்ஜினியர், எம்.பி.ஏ, அமெரிக்கா முதலான இலட்சியங்களை அடையவேண்டும் என்பதை இப்பள்ளிகள் ஊட்டி வளர்க்கின்றன. அவ்வகையில் சுயநலமும், பிழைப்பு வாதமும் மாணவர்களின் நற்பண்புகளாக ஏற்றப் படுகின்றன.
இதனால் போட்டி, பொறாமை, இரக்கமின்மை, முதலிய சொத்துக்கள் ஒவ்வொரு மாணவனுக்கும் அவனது இலட்சியத்தை அடைவதற்குத் தேவைப்படுகின்றன. எல்லா மாணவர்களும் இக்காரியவாதப் போட்டியில் வெல்லமுடியாது என்பதால் சோர்வும், விரக்தியும், தனிமைப்படுவதும் நடக்கிறது. சில சமயங்களில் அது சமூகத்தின் மீதான கோபமாகவும் வெடிக்கிறது. தன்னிலும் ஆடம்பர வாழ்வைப் பார்த்து ஏங்குவதும், அதை அடைய குறுக்கு வழிகளை நாடுவதும் இயல்பான விசயங்களாக ஏற்கப்படுகின்றன.
              முன்னர் கண்ட செல்பேசிஇணையக் கலாச்சாரம், திருமணத்திற்கு முந்தைய உறவு, புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், பீர் கலாச்சாரம், வீடியோ விளையாட்டு முதலியவற்றிலும், தனியார் பள்ளி மாணவர்களே முன்னிலை வகிக்கின்றனர். பள்ளி திறக்கும் பருவத்தில் எல்லாத் தனியார் பள்ளிகளும் தங்களது தேர்ச்சி விகிதத்தை விளம்பரமாக வெளியிட்டு பெற்றோர்களை ஈர்க்கின்றன.
            அந்த விளம்பரங்களில் கூறப்படாத செய்தி என்னவென்றால், வன்முறை விகிதத்திலும் இப்பள்ளிகள்தான் முதலிடம் வகிக்கின்றன என்பதுதான். சுருங்கக்கூறின் அரசுப் பள்ளிகள் ஒரு மாணவனை நல்ல குடிமகனாக மாற்றும் போது, தனியார் பள்ளிகளோ ஒரு மாணவனை சமூகத்திற்கு விரோதமான தனிநபராய் வளர்க்கின்றன. கல்வியில் தனியார்மயம் நுழைந்ததற்கு, நாம் பெற்றுள்ள சாபக்கேடு இதுதான்.
நடுத்தர வர்க்கத்தின் தனியார் பள்ளி மோகத்திற்கு இணையான மற்றொரு மோகம், ஆங்கில வழிக் கல்வி. ஆங்கில வழிக் கல்விக்கும் மாணவர் வன்முறைக்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் நினைக்கலாம். முதலில் கண்ட துப்பாக்கி வன்முறை மாணவர்களெல்லாம், ஆங்கில வழிக் கல்வியில் படிப்பவர்கள்தான். இதை வைத்து மட்டுமே, ஆங்கில மோகம் வன்முறையை வளர்க்கிறது என்று சொல்லவில்லை. சிறார்களின் கல்வியறிவுக்காக பயன்படுத்தப்படும் ஆங்கிலம், அவர்களுடைய வாழ்க்கையை ரத்து செய்கிறது. ஐ.டி துறையின் எழுச்சிக்குப் பிறகு வேலைவாய்ப்பிற்காக ஆங்கிலம் மட்டுமே உதவும் என்ற சூழ்நிலையில், தமிழ் வழிக் கல்வியின் மீது பலருக்கு நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். ஒரு மொழி என்ற அளவில் ஆங்கிலத்தை தேர்ச்சியுடன் கற்றுக்கொள்வதும், அதை ஒரு பயிற்று மொழியாகவே பயன்படுத்துவதும் ஒன்றல்ல.
அன்னியப்படுத்தும் ஆங்கில மோகம்1947க்குப் பின்னர் உயர் கல்விக்காகப் படித்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், தமிழ் வழிக் கல்வி கற்றவர்கள் என்பதோடு ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவர்களாக இருப்பதையும் காண்கிறோம். இவர்களது பெற்றோர்கள் எவரும் பள்ளிக்கூடத்தை எட்டிப் பார்த்தவர்கள் அல்லர். இருப்பினும் வறியவாழ்க்கையோடு, பலமைல் தூரம் நடந்துச் சென்று, கல்விக்காகக் கடும் உழைப்பு செலுத்தி, போராடிக் கற்றார்கள். அந்தக் கால ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கல்விப் பணி செய்தார்கள்.
அதற்குப் பிந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், வசதியான வாழ்க்கையுடன் பள்ளிக்குச் சென்றாலும், அவர்களுக்கு ஆங்கிலம் மட்டுமல்ல தமிழும் தெரியாமல் இருப்பதைக் காண்கிறோம். இது போக, இன்றைய மாணவர்களின் கவனத்தைச் சிதறடிக்கும் பொழுது போக்குகளும் ஏராளம். மேலும் அன்று உயர்கல்வி முடித்தால் ஏதோ ஒரு அரசுப் பணி கிடைக்கும் என்ற நிலைமையும் இன்று இல்லை. இந்தப் பிரச்சினையை ஆங்கிலவழிக் கல்வி தீர்த்து விடாது என்பதையே இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
மேலும் ஆங்கிலவழிக் கல்வி ஒரு மாணவனை யதார்த்தமான சமூக வாழ்க்கையிலிருந்து அன்னியப்படுத்துவதோடு, அவனது அறிவுத்திறன் வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்து வளரும் சிறார்கள் தாயுடனும், தமிழுடனும் சேர்ந்தே உலகை அறியத் துவங்குகிறார்கள். பெற்றோர், சுற்றம், உற்றம், நட்பு, தெரு, பெட்டிக்கடைக்காரர், மளிகைக் கடைக்காரர், வணிகர்கள், ஆட்டோக்காரர், பேருந்து ஓட்டுநர் என தமிழால் சூழப்பட்ட உலகில்தான், சிறார்களின் வாழ்க்கைக் கல்வி துளிர் விடத் துவங்குகிறது. இந்தச் சூழலை ஆங்கில வழிக் கல்வி செயற்கையாக துண்டிப்பதோடு, அந்த உறவு மேற்கொண்டு வளர விடாமலும் செய்கிறது.
இதனால் ஆங்கில வழிக் கல்வியின் உலகம் பள்ளி வகுப்பறையுடன் சுருங்கி விடுகிறது. அதனால்தான் ஆங்கில வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பொதுவில் தனிமை விரும்பிகளாகவும், சிறுசிறு பிரச்சினைகளைக்கூட தீர்ப்பதற்கு இலாயக்கில்லாதவர்களாகவும், சமகாலப் பொதுஅறிவில் பின்தங்கியவர்களாகவும் இருக்கிறார்கள். பொது வாழ்க்கைக்கு ஆங்கிலம் விதித்திருக்கும் இத்தடைகள்தான், அவர்களை பொறுமையிழந்தவர்களாகவும், வன்முறை சுபாவம் கொண்டவர்களாகவும் மெல்ல மெல்ல மாற்றுகிறது. தமிழை விட ஆங்கிலம்தான் நுகர்வுக் கலாச்சாரத்தின் எல்லா வகைகளுக்கும் பொருத்தமாக இருப்பதால், எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றி தீப்பிடிக்க வைக்கிறது.
தேம்ஸ் நதிக்கரையையும், வாஷிங்டன் அதிபர்களையும், அமெரிக்க மல்யுத்த வீரர்களையும், வால்ட் டிஸ்னியின் முயலையும் அறிந்து வைத்திருக்கும் ஆங்கில மாணவன், தாமிரபரணி நதி பற்றியோ, காவிரியின் கீழத்தஞ்சை விவசாயப் பிரச்சினை பற்றியோ, காஞ்சிபுரத்தின் பட்டுத்தறி பற்றியோ, ஏன் கபடி விளையாட்டைக்கூட தெரியாதவனாக இருக்கிறான். இப்படி தமிழக வாழ்க்கையிலிருந்து தூக்கியெறியப்பட்டு, தனக்குத் தொடர்பற்ற மேற்கத்திய விசயங்களுக்கு அறிமுகமாகும் மாணவன்தான் இந்த மண், மக்கள், வாழ்க்கை குறித்து வெறுப்போடும், நம்பிக்கையில்லாமலும் வாழப் பணிக்கப்படுகிறான்.
விவசாயப் பிண்ணனியிலிருந்து வரும் ஒரு மாணவனுக்கு, நூற்றுக்கணக்கான தாவர வகைகளும், கிராம வாழ்க்கை மூலம் விவசாய அனுபவமும் தமிழ் வழியாகத்தான் தெரிந்திருக்கும். இம்மாணவன் ஆங்கிலத்தின் மூலம் தாவரவியலைக் கற்பதால் என்ன நடக்கும்?  அவன் சேகரித்து வைத்திருந்த அறிவுக்குப் பயனில்லாமல் போவதோடு,  ஆயிரக்கணக்கான ஆண்டு விவசாய அறிவைத் தாங்கி வரும் தமிழக விவசாயிகளுடன் பேசுவதற்குக் கூட வழியில்லாமலும் போகிறது. இந்த அவலம் எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.
இதனால்தான் ஆங்கில வழிக் கல்வி அறிவுத் திறனை மட்டுப்படுத்துவதோடு, சமூகத் தொடர்பையும் இல்லாமல் செய்து விடுகிறது என்கிறோம். ஆங்கிலவழிக் கல்வியினால் வேலை கிடைத்துவிடும் என்ற மூடநம்பிக்கையின் விளைவாக, சிறார்களை தனியார் பள்ளிகளில் ஆங்கிலத்தில் படிக்க வைக்கும் பெற்றோர்கள் அனைவரும், உண்மையில் தமது வாரிசுகளை வாழ்க்கையை எதிர்கொள்ளத் திராணியற்றவர்களாக மாற்றுகிறார்கள். இது போக இன்றைய பாடத்திட்டமும் மேலும் மேலும் தொழில்முறைத் தேர்ச்சியை நோக்கி மாற்றப்படுவதால் அதில் பொது அறிவும், சமூகக் கண்ணோட்டமும் அருகி வருகிறது.
இந்த நோய்களோடு வட இந்தியாவில் இருக்கும் மாணவர்களுக்கு சாதிவர்க்கத் திமிரும் சேர்ந்து கொள்கிறது. தமிழகத்தில் இவை இல்லாமலில்லை என்றாலும், இந்தி பேசும் மாநிலங்களில் இவை அதிகம். இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மேல் சாதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை, இங்கு நினைவு படுத்திக் கொள்வோம்.
வட இந்தியாவில் அநேக பிரபலங்கள் துப்பாக்கியோடும் பாதுகாவலர்களோடும்தான் உலா வருகிறார்கள். அப்பனே கிரிமினலாக இருக்கும் போது, மகன் அப்படி இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். ஜெசிகா லாலைக் கொன்ற மனுசர்மாதான் வடக்கின் மேட்டுக்குடி மாணவர்களுக்கு வகை மாதிரி. ஏழைகள் மற்றும் தலித்துகள் மீது வன்மம் கொண்டவர்களாகத்தான், வட இந்திய மாணவர்கள் வளர்க்கப் படுகிறார்கள். கூடவே இந்துமதவெறிப் பாசிசத்தின் செல்வாக்கும் இவர்களிடத்தில் அதிகம்.
இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். பொதுவில் இன்றைய மாணவத் தலைமுறையினர் இளமைக்குரிய துடிப்புடனோ, உற்சாகத்துடனோ, கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடனோ இல்லை. முக்கியமாக, அவர்களது மனவலிமை மேலும் மேலும் குறைந்து வருகிறது. பள்ளி இறுதி ஆண்டு மதிப்பெண்கள் வந்தவுடனேயே, தேர்ச்சி பெறாத மாணவர்களிடத்தில் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருவதையும் பார்க்கிறோம். வீட்டு நிலைமைக்குப் பொறுப்பேற்கும் சென்ற தலைமுறையின் பண்பு கூட, இத்தலைமுறை மாணவர்களிடத்தில் இல்லை. காலச்சூழலில் அடித்துச் செல்லப்படும் இன்றைய நிலையில், நாம் என்ன செய்ய முடியும் என்று சிலர் விரக்தி அடையலாம். அப்படி இல்லை.
இக்கட்டுரை மாணவரைச் சீர்குலைக்கும் விசயங்களைப் பரிசீலிப்பதோடு நின்று விடவில்லை. நேர்மறையில் ஒரு மாணவனை எப்படி வளர்க்க வேண்டும் என்ற தீர்வுகளையும் உங்களுக்கு எடுத்துச் சொல்கிறது. அதைப் புரிந்து கொள்வதோடு, நடைமுறைப்படுத்துவதற்கும் முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அற்பப் பிரச்சினைகளுக்காக ஆத்திரங்கொண்டு வெடிப்பதற்குத் துப்பாக்கிதான் வேண்டுமென்பதில்லை, கிடைக்கும் எதுவும் பயன்படும். அதுவும் கண்காணாத ஒரு வீட்டில்தான் நடக்கவேண்டும் என்பதில்லை, அந்த வீடு உங்களுடையதாகவும் இருக்கலாம்.


    பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு !!



நன்றி: http://www.vinavu.com/