குர்ஆனியத் தோட்டம்

          உலகத்தின் குர்ஆனியத்தோட்டம் 
(Qur'anic Botanical Garden ) வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தரில் (தோஹா) உருவாகிறது.


எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்திகளான மாணவர் சமுதாயத்தை மேம்படுத்தும் வகையில் கத்தரில் எஜுகேசன் சிட்டியில் இத்தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நகரத்தில் இந்த இஸ்லாமியத் தோட்டம் அமைவதின் மூலம் உலக கல்வி மையங்களுக்கும், ஆராய்ச்சி மையங்களுக்கும் இது மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கான அதிகாரப்பூர்வமான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதனை கத்தர் நாட்டு அரசரின் மனைவியான மோஜா நாசர் அல் மிஸ்நாத் துவக்கி வைத்துள்ளார். 
150 க்கும் மேற்பட்ட திருக்குர்ஆன் வசனங்களிலும் ஏராளமான ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ள அனைத்து வகையான தாவரங்களும் இந்தத் தோட்டத்தில் இடம்பெறும். குறிப்பாக சுவர்க்கத்தோட்டம்
 ( ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் ) என்று வர்ணிக்கப்படும் தாவர வகைகள் அனைத்தும்  இத்தோட்டத்தில் முதன்மையாக இடம்பெறும். 

உலகில் ஆங்காங்கே அமைக்கப்படும் சாதாரண Botanical Garden போன்றல்லாமல் இந்தக் குர்ஆனியத் தோட்டம் முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைக்கப்படுகிறது. 
கல்வி, மார்க்க நன்னெறி, அறிவியல் ஆராய்ச்சி, தாவரவியலில் பதப்படுத்துதல், பேணிப் பாதுகாத்தல், பல்வேறு நுண்ணாராய்ச்சி விரிவாக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படுகிறது என்கிறார் கத்தர் ஃபவுண்டேஷன் நிறுவனத்தின் துணைத்தலைவரான டாக்டர் சைஃப் அல் ஹாஜாரி அவர்கள்.

குர்ஆனில் கூறப்பட்டுள்ள தாவரவியல் சாராம்சத்தை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் பயன்கள், மருத்துவ முக்கியத்துவம் மற்றும் நவீன அறிவியல் துறையில் இவற்றிற்கான பங்கு ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்யும் முறைகளில் இந்தத் தோட்டம் அமையும்.

இந்தக் குர்ஆனியத் தோட்டம் மூலம் இஸ்லாம் எவ்வாறு உலக அறிவியலுக்கும் மருத்துவத்துறை முன்னேற்றத்திற்கும் பெரும் பங்கு ஆற்றியது என்ற முழு விவரமும் பன்னாட்டளவில் மக்களுக்குச் சென்றடையும். இதுவரை பிற மதத்தினர் இஸ்லாம் மீது கொண்டுள்ள தவறான பல கருத்துக்களை இந்தக் குர்ஆனியத் தோட்டம் முழுமையாக மாற்றியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் டாக்டர் அல் ஹாஜாரி.

நன்றி; சமரசம்