காதலர் தினம் சீரழிவு ;


காதலர் தினம் போன்ற தினங்களை கொண்டாட பன்னாட்டு நிறுவனங்களால் ஊக்கப்படுத்தப்படுவதன் நோக்கத்தை புரிந்து கொள்வோம். அன்பும், ஒழுக்க விழுமங்களும் பன்னாட்டு நிறுவனங்களால் வணிகமயமாக்கப்பட்டு, அதன் மூலம் இளைய சமூகம் சீரழிவுப் பாதையில் அழைத்து செல்லப் படுவதை 

எதிர்ப்போம் என இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு ( எஸ்.ஐ.ஓ) அழைப்பு விடுத்துள்ளது.


இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் ( எஸ்.ஐ.ஓ) மாநில தலைவர் நூருல் ஹசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது..


ஆண்டு தோறும் பெப்ரவரி 14 ஆம் தினத்தை காதலர் தினமாக கடைப் பிடிக்க பன்னாட்டு நிறுவனங்களால் உலகமெங்கும் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. இது முற்றிலும் வணிக நோக்கத்திற்காக அல்லாமல் வேறு இல்லை.. மாணவ மற்றும் இளைய சமூகத்தை இலட்சியம் இல்லாத குறுகிய வட்டத்தில் சுழலச் செய்து, அவர்களிடையே முறையற்ற பாலுறவையும், வீண் செலவுகளையும், பண்பாட்டு சீரழிவுகளையும் பரவச் செய்து, அதன் மூலம் இலாபம் சம்பாதிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சதி வலைகளில் ஒன்றுதான் காதலர் தினம்.

இது நம் சமூக கட்டமைப்பில் பெரும் சீரழிவை உருவாக்குகிறது. இளைய சமூகத்தின் வாழ்க்கையில் காதல் மட்டுமே முக்கிய இலட்சியமாக பிரச்சாரம் செய்யப் படுகிறது. அவர்களது திறமைகளும் ஆற்றல்களும் குறுகிய வட்டத்தில் வீணடிக்கப் படுகிறது. வாலிப வயதினரிடையே மட்டும் அன்றி, பள்ளி மாணவர்களிடையிலும் இது வேகமாக பரவி வருகிறது.


கோடிக்கணக்கான பணம் காதலர் தினம் என்ற பெயரில் பரிசுப் பொருட்களுக்காகவும், வாழ்த்து அட்டைகளுக்காகவும் செலவழிக்கப்படுகிறது. காதலர் தின பரிசு என்கிற பெயரில் இளம் பெண்கள் தங்கள் கற்பை இழக்கின்றனர்.


நம் நாட்டில் தினம் தினம் சுமார் 10 நபர்கள் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அன்பை வணிக மயமாக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் இந்த வியாபார வழிமுறை நம் நாட்டில் குடும்ப அமைப்பையும், பண்பாட்டையும் வெகுவாக சீரழித்து வருகிறது.


இதை இளைய சமூகத்தினர் புரிந்து கொண்டு , இதற்காக செலவு செய்யும் பொருளாதாரம் மற்றும் நேரத்தை, நம் நாட்டை, நாட்டு மக்களை முன்னேற்றும் நல்ல நோக்கங்களுக்காக பயன்படுத்த முன் வருமாறு எஸ்.ஐ.ஓ. அழைப்பு விடுக்கிறது.


காதல் (அன்பு) என்பது போற்றப்பட வேண்டியது.  ஆனால் அது ஒரு இளம் பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையில் மட்டும் நிகழும் செயல் அல்ல.. குடும்பத்தை நேசிப்பது, பெற்றோரை, குடும்ப உறுப்பினர்களை, நண்பர்களை,உறவினர்களை,அனாதைகளை, வறியவர்களை நேசிப்பதும் காதல்தான். இன்னும் இந்த சமூகத்தை, நாட்டை நேசிப்பதும் காதல்தான். இப்படிப் பட்ட அன்பு ஆக்கப்பூர்வமான மற்றும் அறிவுப்பூர்வமான வகையில் வெளிப்பட வேண்டும்.


இதற்கு மாற்றமாக அன்பு எனும் காதலை தங்களது சுய இலாபத்திற்காக வணிக மயமாக்கி,அதன் மூலம் சமூக சீரழிவை உருவாக்கி ,நாட்டின் இளம் தலைமுறையினரை அவரது இலட்சிய பாதையில் இருந்து திசை திருப்புவதை நாங்கள் கண்டிக்கிறோம். இப்படிப்பட்ட சீரழிவுகளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை, மாணவ மற்றும் இளைய சமூகத்தினரிடையே நாடு முழுவதும் எஸ்.ஐ.ஒ. அமைதியான மற்றும் ஆக்கப் பூர்வமான வழிமுறைகளில் நடத்தி வருகிறது. இதற்காக தனி நபர் சந்திப்புகள், துண்டு பிரசுரங்கள் வினியோகித்தல், அரங்க கூட்டம், விழிப்புணர்வு ஆர்ப்பாட்டங்கள் முதலிய நிகழ்வுகளை நடத்தி வருகிறது.


இளைய சமூகத்தை இலட்சியம் இல்லாத குறுகிய வட்டத்தில் சுழலச்செய்து,
அவர்களிடையே முறையற்ற பாலுறவையும், வீண் செலவுகளையும், பண்பாட்டு சீரழிவுகளையும் பரவச் செய்து அதன் மூலம் இலாபம் சம்பாதிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சதி வலைகளில் ஒன்றான காதலர் தினம் போன்ற தினங்களை கொண்டாட பன்னாட்டு நிறுவனங்களால் ஊக்கப்படுத்தப்படுவதன் நோக்கத்தை நம் நாட்டின் மாணவ மற்றும் இளைய சமூகத்தினர் புரிந்து கொண்டு,தம் பணம் மற்றும் நேரத்தை இப்படிப் பட்ட வியாபர யுக்திகளில் மயங்கி,வீணாக செலவழிப்பதை விடுத்து, அந்த நேரத்தையும், பொருளாதாரத்தையும் நாட்டில் வாழ்கின்ற கோடிக்கணக்கான ஏழைகள், ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் அனாதைகளின் முன்னேற்றத்திற்காக செலவழிக்க முன் வருமாறு எஸ்.ஐ.ஒ. அழைப்பு விடுக்கிறது.


இந்த நாட்டில் நீதியும்,அமைதியும் எல்லா மக்களுக்கும் பாராபட்சமில்லாமல் கிடைப்பதற்கு உண்டான முயற்சிகளை செய்வதன் மூலம், ஆண்டின் ஒவ்வொரு நாளையும்,மனித நேயத்துடன் அன்பை பரஸ்பரம் வெளிப்படுத்துகிற சகோதரத்துவ தினமாக நம்மால் கடைபிடிக்க முடியும்.


visit;  http://www.brotherhoodday.blogspot.com/