இடிந்தகரையும் இஸ்லாமிய சமூகமும்!

- ஆளூர் ஷாநவாஸ் 



இந்துத்துவ சக்திகளும், ஆளும் காங்கிரசு அடிபொடிகளும், தா.பாண்டியன் சரத்குமார் போன்ற அ .தி.மு.க எடுபிடிகளும் கூடங்குளம் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தொடர்ந்து கருத்துச் சொல்லி வருகின்றனர்.

தோழர் உதயகுமார் தலைமையில் மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்து நிற்கும் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை கிறிஸ்தவர்களின் போராட்டம் எனச் சொல்லி சிறுமைப்படுத்தி வருகின்றனர். கூடங்குளம் போராட்டத்தை பாதிரியார்கள் முன்னின்று நடத்துவதாகவும், கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் அதன் பின்னால் இருப்பதாகவும் கதை கட்டி விடுகின்றனர். அத்தகைய மலிவான பரப்புரைகளை தவிடுபொடியாக்கும் வகையில், இடிந்தகரையில் தொடர்ந்து தமது இருப்பை உறுதி செய்து வருகிறது இஸ்லாமிய சமூகம்.



தமிழக முஸ்லிம்களின் மாபெரும் அரசியல் இயக்கங்களான மனிதநேய மக்கள் கட்சியும், எஸ்.டி.பி.ஐ கட்சியும் தொடக்கம் முதலே கூடங்குளம் போராட்டத்தை ஆதரித்து தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. கே.எம்.சரீப் தலைமையிலான தமிழக மக்கள் ஜனநாயக கட்சியும் அணு உலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

சென்னையில் நடைபெற்ற சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களில் பேராசிரியர்.ஜவாஹிருல்லாஹ்வும், ஆம்பூர் அஸ்லம் பாஷாவும் மட்டும்தான் சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்பது வரலாற்றுப் பதிவாகி விட்டது.

இப்போது தமிழகத்தின் எல்லையைத் தாண்டி கேரளாவிலிருந்து எஸ்.ஐ.ஒ எனப்படும் இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினர் இடிந்தகரைக்கு வருகைதந்து தோழர் உதயகுமாரை ஆரத்தழுவி தமது ஆதரவை வெளிப்படுத்திச் சென்றுள்ளனர்.

சாதி, மத, இன, மொழி எல்லைகளைக் கடந்து விரிந்து கொண்டிருக்கிறது அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்!