நபி விமர்சனத்துக்குப் பதில் சொல்லும் குறும்படம்!

போராட்டத்தின் புதிய முகம்

முகமது நபியை இழிவுபடுத்தி வெளியான 'இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, உலகெங்கும் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களும் போராட்டங்களை நடத்தினார்கள். இந்தப் போராட்ட வழிமுறைக்கு மாற்றாக... ஜமாதியே இஸ்லாமி ஹிந்த் அமைப்பானது, முகமது நபியின் வாழ்வியல் குறித்து ஓர் பிரசார இயக்கத்தை நடத்தி வருகிறது.

இந்த பிரசாரத்தில் திருமாவளவன், தமிழருவி மணியன், பழ.கருப்பையா, பீட்டர் அல்போன்ஸ், அ.மார்க்ஸ் உள்ளிட்டோர் நபிகளின் வாழ்க்கை நெறிகளைப் பதிவுசெய்து உள்ளார்கள். இதன் ஒரு பகுதியாக வி.எஸ்.முஹம்மது அமீன் என்பவரின் இயக்கத்தில், 'ஒரு துளிக் கடல்’ என்ற குறும் படம் எடுக்கப்பட்டு உள்ளது. 12 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தக் குறும்பட வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசினார் இயக்குனர் அமீர். ''என்னுடைய முதல் படமான 'மௌனம் பேசியதே’ வெளியான சமயத்தில், ஐ.எஃப்.டி.க்கு வந்து இஸ்லாம் சம்பந்தப்பட்ட பதிவுகள் எல்லாமே புத்தகங்களாகத்தான் இருக்கிறது. அது திரைப்படங்களாகவும், குறும்படங்களாகவும் வரவேண்டும் என்று சொன்னேன். அதற்கான பதில் 10 ஆண்டுகள் கழித்து இன்று கிடைத்து உள்ளது.

இன்றைக்கு உலக அளவில் ஈரானியத் திரைப்படங்களுக்கு இருக்கும் மரியாதை, வேறு எந்தப் படங்களுக்கும் இல்லை. இஸ்லாமிய வாழ்க்கையை, அந்த மண்ணின் வாழ்க்கையை அவர்கள் சிறப்பாகப் பதிவுசெய்கிறார்கள். அதுதான் சர்வதேச அரங்குகளில் மிகப் பெரிய மரியாதையை பெற்றுத் தருகிறது. இந்திய சினிமாவுக்கு 100 ஆண்டுகளும் தமிழ் சினிமாவுக்கு 75 ஆண்டுகளும் ஆகிவிட்டன. 
இன்னமும் தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்கள் என்றால் கறிக்கடைக்காரராகவும், சாம்பிராணி போடுபவராகவும்தான் பதிவு செய்யப்படுகிறது. அப்படி இல்லேன்னா, அரேபிய ஷேக்காகக் காட்டுவார்கள். அதுவும் நல்லவிதமாக இல்லாமல், 'நிம்மள் பொண்ணு தர்றான்; நான் தங்கம் தர்றான்’ என்ற வகையில்தான் சித்திரிக்கப்படுகிறது. மற்ற இஸ்லாமியர்கள் இந்த சமூகத்தில் வாழ்கிறார்களா என்பதே மறைக்கப்பட்ட விஷயமாகத்தான் இருக்கிறது.

தமிழ் சினிமாவில் நான் ஒருவன்தான் இஸ்லாமியன் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு முன்னால் நிறைய பேர் வந்திருக்கிறார்கள். ஆனால், பெயர்களை மாற்றி இந்தத் துறையில் ஒளிந்து இருக்கிறார்கள். 'மௌனம் பேசியதே’ திரைப்படத்துக்குப் பின் என்னை சந்தித்த ஒரு மூத்த பத்திரிகையாளர், 'பெயரை மாற்றிவைத்துக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால், கட்டம் கட்டிவிடுவார்கள்’ என்று ஆலோசனை கூறினார். 'நான் திருட வரவில்லை. படம் எடுக்கத்தான் வந்திருக்கிறேன். இதே பெயரிலேயே இயங்குவேன்’ என்று சொன்னேன். இன்று அல்லாஹ் என்னை நன்றாகத்தான் வைத்திருக்கிறான்.

என்னை அழைத்து நபி வாழ்க்கை குறும்படத்தை வெளியிடவைத்திருக்கிறீர்கள். இதை அல்லாஹ் எனக்கு கொடுத்த பரிசாக நினைத்துக்கொள்கிறேன்.
நபியைப் பற்றி ஒருவர் தவறாகப் படம் எடுத்துவிட்டார் என்று சொல்லிக்கிட்டே இருக்கிறோம். ஆனால் நபியைப் பற்றி சரியாக நாம் ஏதாவது படம் எடுத்திருக்கிறோமா? ஆவணங்களை உருவாக்கி இருக்கிறோமா? இந்த நாட்டில் வாழ்ந்த வரலாற்றுத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் பற்றி எல்லாம் ஆவணப் படங்கள் இருக்கின்றன. உலக மக்களின் வழிகாட்டியாகத் திகழும் நபியைப் பற்றி எந்தத் திரைப்படமும், ஆவணப் படமும் இல்லாத காரணத்தால்தான் இந்த மாதிரியான சூழல் நிலவுகிறது.

நபிகள் மீதான குற்றச்சாட்டு, அவதூறுகள் எல்லாம் இன்றைக்குக் கிளம்பியது இல்லை. நபிகளின் காலத்திலேயே இதெல்லாம் நடந்துவிட்டது. இஸ்லாம் பற்றியும் நபியின் வாழ்க்கை பற்றியும் அவரது காலத்திலேயே விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு இஸ்லாமே பதில் அளிக்கிறது. நபியை இழிவுபடுத்தியதும் கோபப்படுகிறோம், போராட்டங்கள் செய்கிறோம். ஆனால் உண்மை இதுதான் என்று தெரியப்படுத்தும் வகையில் நம்மிடம் ஆதாரங்கள் எதுவும் கிடையாது. ஆதாரங்களை உருவாக்கத் தவறுவதோடு, உருவாக்கும் மீடியாக்களையும் புறக்கணிப்பதால் இஸ்லாமியர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள்.

அல்லாஹ் கொடுத்த விஞ்ஞான வளர்ச்சியை சரியாகப் பயன்படுத்த வேண்டும். தொலைபேசியையும், வீடியோ கேமராவையும் தவறாகப் பயன்படுத்தினால் அது பயன்படுத்துபவனின் தவறு. அதற்காக தொலைபேசியையும் வீடியோ கேமராவையும் வேண்டாம் என்று ஒதுக்க முடியாது. அதுபோல் மீடியாவையும் ஒதுக்க வேண்டாம். மக்களுக்கு ஒரு விஷயத்தை எப்படிக் கொண்டுசெல்ல வேண்டும், எது கொண்டுபோய் சேர்க்கும் என்று தெரிந்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். மீடியா மூலமாக இஸ்லாத்தை சொல்வதற்கும், நபிகளைச் சொல்வதற்கும் நான் தயாராக இருக்கிறேன்'' என்றார் அமீர்.
நல்லதுதான்!
- மு.செய்யது முகம்மது ஆசாத்
படங்கள்: எம்.உசேன்
நன்றி : ஜூனியர் விகடன் 31.10.2012 (பக்கம் 28-29)