கோயிலைத் திறக்க உத்தரவிட்ட பாகிஸ்தான் நீதி மன்றம் :

நமது அண்டை நாடான பாகிஸ்தான், 'இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆஃப் பாகிஸ்தான் 'என்று அழைக்கப்படுவதால், அந்த நாட்டின் பெயரில் இஸ்லாம் என்ற வார்த்தை ஒட்டிக்கொண்டிருப்பதால் பாகிஸ்தான் ஏதோ இஸ்லாமிய நாடு போன்றும், அங்கே இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது என்பது போன்றும் கற்பனை செய்துகொண்டு அந்த நாட்டை இஸ்லாமியத் தீவிரவாத நாடாகக் காட்டுவதில் 
இந்துத்துவாக்கள் கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்தினார்கள். அவர்கள் மட்டுமன்றி ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு, அந்த நாட்டில் நடக்கும் கொலையை இந்து வியாபாரி வெட்டிக்கொலை'  'இந்து மருத்துவர் கொலை' என்றும், இந்து வியாபாரியிடம் வழிப்பறி என்றும், எழுதி அங்கே கொலையோ கொள்ளையோ அதனால் பாதிக்கப்படுவது இந்துக்கள் மட்டுமே என்ற தோற்றத்தை விதைத்தது. ஆனால் உண்மை என்னவோ நேர் மாற்றமானது. அங்கு நடக்கும் கொலையும்- கொள்ளைகளும் இனம்பார்த்து நடப்பதில்லை என்பதற்கு நாளும் வெடிகுண்டுகளால் சாகும் இஸ்லாமியர்களின் சடலங்கள் சான்றாக உள்ளன. அடுத்தவர்களுக்குத் தீங்கிழைக்கும் அயோக்கியர்களுக்குத் தன் மதம், தன் இனம், அடுத்த மதம், அடுத்த இனம் இப்படி எதுவுமே கிடையாது. அவர்கள் தம்மைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள். இவ்வாறான சிந்தனை கொண்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் மட்டுமல்ல ;  இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் இருப்பார்கள். இத்தகையோர் எண்ணிக்கையில் குறைவானவர்களே! ஆனால் மதம் கடந்து மனிதமும், நியாயமும் பேணும் மக்கள் உலகில் பெரும்பான்மையாக உள்ளனர். அத்தகைய நல்லோர் பாகிஸ்தானிலும் உண்டு என்பதற்கு சமீபத்திய ஒரு செய்தியை மேற்கோள் காட்டலாம்.

பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் கோர் கத்ரி என்ற இடத்தில் உள்ள 160 ஆண்டுப் பழமையான இந்துக் கோவில் ஒன்று உள்ளது. கோரக்நாத் கோயில் என்ற இந்தக் கோயில் 6 0 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. இந்த கோயின் பூசாரி பூல் வாட்டியின் மகள் கமலா ராணி, பெஷாவர் ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில் இந்தக் கோயில் தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமானது என்றும், ஆனால் போலீசார் இதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து மூடி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய கோர்ட்டு, வழிபாட்டுத்தலத்தில் வழிபாடு நடத்தாமல் பூட்டி வைப்பது அனைத்துச் சட்டத்துக்கும் எதிரானது. எனவே கோயிலைப் பக்தர்கள் வழிபாடு நடத்தத் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.  கோயில் தங்கள் குடும்பத்துக்குத்தான் சொந்தமானது  என்பதை நிரூபிக்கப் போதுமான சான்றாவணங்களைத் தாக்கல் செய்ய பூல் வாட்டி தவறி விட்டதாகவும் கோர்ட்டு குறிப்பிட்டது. இதைத் தொடர்ந்து கோயில் திறக்கப்பட்டது''.

மேற்கண்ட செய்தியை நாம் கவனிக்கும் போது பல உண்மைகள் வெளிப்படுவதைக் காணலாம். பாகிஸ்தானில் மிக மிகச் சிறுபான்மையாக வாழும் இந்துக்களின் வழிபாட்டுத்தலம். முஸ்லிம்கள் ஆட்சியாளர்களாக இருந்தும்கூட நீதி மறுக்கப்படவில்லை.  அந்தக்கோயில் இடிக்கப்படவில்லை. அங்கே உடனடி மசூதி எழுப்பப்படவில்லை.  அறுபது ஆண்டு காலம் பூட்டியிருந்தும் அக்கோயிலுக்குச் சிறு சேதாரமும் இழைக்கப்படவில்லை. மீண்டும் அந்தக் கோயில் சம்மந்தப்பட்ட சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டு வழிபாடு  நடைபெறுகிறது. இது எதைக் காட்டுகிறது என்றால், ஒரு சாரார் சிறுபான்மையினர்- பலவீனர் என்பதற்காக இந்த நாட்டின் நீதி மன்றம் அநீதி இழைக்காது என்பதைத்தான்.


தகவல்-  இனிய திசைகள்