பண்பாடுகளின் எழுச்சியே இஸ்லாத்தின் எழுச்சி

www.sheikhagar.org

மனித இன வரலாற்றில் பல சமூகங்கள் தோன்றி மறைந்துள்ளன, பல நாகரிகங்கள் உருவாகி அழிந்துள்ளன. இவற்றின் எழுச்சிக்கு துணைநின்ற காரணிகளையும் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்த அம்சங்களையும் ஆராயும்போது ஒரு முக்கிய உண்மை புலனாகிறது. ஒரு சமூகம் அதற்கேயுரிய ஒழுக்க விழுமியங்களிலும் பண்பாடுகளிலும் நிலைத்து நின்றபோது அந்த சமூகம் வாழ்வாங்கு வாழ்ந்திருக்கின்றது. வளமுடன் விளங்குகின்றது. உலக நாகரிகத்திற்கு தனது உன்னத பங்களிப்பைச் செலுத்தியிருக்கின்றது. ஆனால் அச்சமூகம் தனது ஒழுக்க மாண்புகளையும் தான் கடைப்பிடித்து வந்த பண்பாடுகளையும் கைவிடுகின்ற போது அது படிப்படியாக வீழ்ச்சியடைந்து அடையாளம் தெரியாமல் மறைந்து விடுகின்றது. இதுவே வரலாறு கூறும் அந்தப் பாரிய உண்மை.


முஸ்லிம் சமூகத்திற்கும் இவ்வரலாற்று நியதி பொருந்தும். முஸ்லிம்களின் வரலாறு இதற்கு சான்று பகர்கின்றது. முஸ்லிம் சமூகம் இஸ்லாத்திலும் அதன் உயரிய பண்பாடுகளிலும் குணவொழுக் கங்களிலும் உறுதியாக நின்ற காலத்தில் அது ஓர் உலகளாவிய சாம்ராஜ்யத்திற்கு பாத்தியதையுடையதாக விளங்கியது. ஆனால் என்று அதன் பண்பாடுகளில் பலவீனம் தோன்ற ஆரம்பித்ததோ அன்று அதன் வீழ்ச்சியும் தொடங்கியது. இன்றுவரை அவ்வீழ்ச்சியை தடுத்துநிறுத்த முடியவில்லை. ஆனால் துரதிஷ்டம் யாதெனில் முஸ்லிம் சமூகம் இன்னும் இந்த அடிப்படை கோளாரை சரியாக இனங்கண்டு கொண்டதாக இல்லை என்பதுதான். இதனால் இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கான முயற்சிகளிலும் இவ்வம்சம் உரிய இடத்தையும் முக்கியத்துவத்தையும் பெறாமல் இருந்து வருகின்றது.

இன்று நாம் உலகளாவிய ஓர் இஸ்லாமிய மறுமலர்ச்சியைக் காண்பது உண்மை. ஆனால் இங்கு அஹ்காம் எனும் சட்டங்களைப் பேணுவதில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சி அக்லாக் எனும் பண்பாடுகளையும் ஒழுக்கங்களையும் கடைப்பிடிப்பதில் உருவாகியுள்ளதாக தெரியவில்லை. தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் முதலான கடமைகளுடன் தொடர்புடைய அஹ்காம்களை அலட்டிக்கொள்ளும் அளவுக்கு அவற்றின் மூலம் பெறப்பட வேண்டிய அக்லாக்களைப் பற்றி நாம் கரிசனை கொள்வதில்லை.

இதனால் எமது தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப உறவுகளிலும், சமூகத் தொடர்புகளிலும் பேணப்பட வேண்டிய பண்புகள் பல புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை அவதானிக்கப்படுகின்றது. குறிப்பாக எமது இளைய தலைமுறையினர் பண்பாட்டுப் பயிற்சிகளைப் பெறாத நிலையில் வளர்ந்து வருகின்றனர். வீடு, பாடசாலை, மஸ்ஜித், வீதி முதலான இடங்களில் எவ்வாறு நடந்துகொள்வது என்பதைக்கூட தெரியாத நிலையில் சமூகத்தில் பலர் இருந்து வருகின்றனர். ஒரு காலத்தில் முழு உலகிற்கும் பண்பாட்டை, நாகரிகத்தை வழங்கிய ஒரு சமூகத்தின் நிலை இன்று இவ்வாறு மாறியுள்ளமை எவ்வளவு கவலைக்குரியது?! நம்பிக்கை, நாணயம், வாய்மை, வாக்கு மாறாமை, நேரந்தவறாமை, ஒழுங்கு, கட்டுப்பாடு, பிறர் நலன் பேணல் போன்ற உயரிய இஸ்லாமிய குணப் பண்புகள் எம்மை விட்டு விடைபெற்று சென்றுவிடுமோ என நினைக்கத் தோன்றுகின்றது. எமது சமூகத்தின் தனி மனிதர்களின் ஒழுங்கற்ற நடத்தைகள் முழு சமூகத்திற்கும் சன்மார்க்கத்திற்கும் அவப் பெயரை ஏற்படுத்தி வருகின்றன.
      எனவே, இன்று எமது சமூகத்தில் ஒரு பண்பாட்டுப் புரட்சியையே செய்ய வேண்டியுள்ளது. இத்துறையில் ஒரு பாரிய பிரசார முயற்சி முடுக்கிவிடப்பட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. எமது தஃவாக் களங்களை, குறித்த இவ்வம்சத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பயன்படுத்த முயல்வது இன்றைய காலத்தின் தேவையும் சன்மார்க்கக் கடமையுமாகும். இல்லாதபோது எம் சமூகத்தின் வீழ்ச்சியை - அல்லாஹ் நாடினால் அன்றி, - எவராலும் தடுத்துநிறுத்த முடியாமல் போய்விடும்.