நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படம் எடுத்த அமெரிக்கர் திடீர் கைது


லாஸ் ஏஞ்செலஸ்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படம் எடுத்து அதை யூடியூபில் வெளியிட்ட அமெரிக்கரான நகோலா பேசலி நகோலாவை அமெரிக்க போலீஸார் இத்தனை நாட்கள் விட்டு விட்டு இப்போது திடீரென கைது செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், கொதிப்பையும் ஏற்படுத்தியது நகோலா இயக்கிய இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் என்ற திரைப்படம். இதில் நபிகள் நாயகத்தையும், இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்தும் வகையில் சித்தரித்திருந்தார் நகோலா.
இதனால் இஸ்லாமியர்கள் கடும் கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். லிபியாவில் அமெரிக்க தூதரகத்தைத் தூக்கி அங்கிருந்த அமெரிக்க தூதரைக் கொலை செய்தனர்.
உலக நாடுகள் முழுவதிலும் அமெரிக்காவுக்கு எதிராக பெரும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் வெடித்தன. இதையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா டிவி விளம்பரப் படம் மூ்லம் இஸ்லாமியர்களுக்கு விளக்கம் அளித்து வேண்டுகோள் விடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய நகோலாவை அமெரிக்க போலீஸார் திடீரென கைது செய்துள்ளனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக அவர் கைது செய்யப்படவில்லை. கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்க கோர்ட் ஒன்று அவருக்கு ஒரு வழக்கில் 21 மாத சிறைத் தண்டனைக்கு விதித்திருந்தது. இருப்பினும் பின்னர் அது புரேபஷனாக அது மாற்றப்பட்டது – அதாவது காத்திருப்புக் காலம். இந்த காத்திருப்புக் காலத்தின்போது அவர் இணையதளத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக தற்போது அவரைக் கைது செய்துள்ளனராம்.
காத்திருப்புக் காலத்தின்போது அவர் ஐந்து ஆண்டுகளுக்கு நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், கம்ப்யூட்டர், இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. அதை மீறியதற்காகத்தான் தற்போது கைது செய்துள்ளனர். மற்றபடி இஸ்லாமை இழிவுபடுத்திய குற்றத்திற்காக அவரைக் கைது செய்யவில்லை அமெரிக்க காவல்துறை.
நகோலாவை கைது செய்த போலீஸார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.
இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீ்ம்ஸ் என்ற பெயரில் நகோலா இயக்கிய படத்தின் 14 நிமிட டிரெய்லர்தான் யூடியூபில் வெளியிடப்பட்டது. இதுதான் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி விட்டது. அதில் நபிகள் நாயகத்தை பெண் பித்தர் போலவும், மத மோசடியாளர் என்பதாகும், குழந்தைகளை பாலியல் ரீதியாக சீரழித்தார் என்றும் கூறியுள்ளார் நகோலா.
கடந்த ஜூலை மாதம் இந்த டிரெய்லர் யூடியூபில் வெளியிடரபப்பட்டது. ஆனால் செப்டம்பர் 11ம் தேதிக்குப் பிறகுதான் பிரச்சினை பெரிதானது.
நகோலா ஒரு கிறிஸ்தவர் ஆவார், இந்த படத்தை தயாரிக்க உதவியதும் ஒரு கிறிஸ்தவ அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.