கேரளா மற்றும் மத்திய அரசை கண்டித்து SDPI நடத்திய தர்ணா


பெரியகுளம்:முல்லை பெரியாறு விவகாரத்தில் தேவையற்ற பிரச்சனையை உருவாக்கி அடாவடியில் ஈடுபட்டு வரும் கேரள அரசை கண்டித்தும், மௌனம் காத்து இரு மாநில மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த வலியுறுத்தியும்,
தமிழகத்தின் 5 மாவட்டங்களின் விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி தேனியில் மாபெரும் தர்ணா போராட்டத்தை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI)நடத்தியது.
இன்று (18-12-2011) காலை 10 மணியளவில் பெரிய குளம் ரோட்டில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்திற்கு சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி அவர்கள் தலைமை தாங்கினார்.
தெஹ்லான் பாகவி அவர்கள் தனது உரையில்; “மத்திய அரசு தொடந்து தமிழக நலனை, தமிழர்களின் நலனை புறக்கணித்து வருகிறது. காவிரி ஒரு நாள் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்த கர்நாடகாவை கட்டுப்படுத்தி தமிழகத்திற்கு உரிய நீரை பெற்றுத்தர வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் இக்கடமையிலிருந்து தொடர்ந்து பின் வாங்கியிருக்கிறது.
கச்சத்தீவில் தமிழர்களின் மீன்பிடிக்கும் உரிமையை நிலை நாட்ட வேண்டிய தமிழக அரசு அதில் தவறியதோடு தொடர்ந்து கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும், வரும் தமிழக மீனவர்கள் விஷயத்தில் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது.
இது போன்றே இலங்கையில் அப்பாவி தமிழர்கள், கொல்லப்பட்டும் அகதிகளாக்கப்பட்டும் இலங்கை அரசால் கொலை வெறியாட்டம் நிகழ்த்தப்பட்டது. இதை கண்டித்து ஒட்டு மொத்த தமிழகமும், தமிழர்களுக்கெதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்திட மத்திய அரசை கோரிய போது செவி சாய்க்க மறுத்ததோடு, இலங்கை ராணுவத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கியது. தமிழர் படுகொலையை வேடிக்கை பார்த்தது.
இது போன்றே தான் இப்போது முல்லை பெரியாறு விவகாரத்திலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தி தமிழக நலனை பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு கேரள அரசின் மாநில உறவை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை வேடிக்கை பார்ப்பதோடு இரயில் பிரச்சனையில் இரு மாநில மக்கள் மோதலில் ஈடுபடல், ஈடுபட்ட பிறகும் தொடர்ந்து வேடிக்கை பார்த்து வருகிறது.
எனவே தொடர்ந்து தமிழக நலனுக்கெதிராக செயல்படும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
கேரள அரசு இவ்விவகாரத்தில் நீதிக்கும், தர்மத்திற்கும் எதிராக செயல்படுகிறது. இப்பிரச்சனையை எழுப்பியதில் உள்நோக்கம் இருப்பதாகவே கருதுகிறேன்.
ஒன்று கேரள இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நிர்பந்தம். கேரளாவின் ஆளும் கட்சி,எதிர்கட்சி இரண்டிற்கும் உள்ளது.
கூடங்குளம் அணுஉலையில் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கம்
தமிழகத்தில் மக்கள் போராட்டமாக மாறியுள்ள கூடங்குளம் அணுஉலையில் போராட்டத்தை திசை திருப்ப வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு உள்ளது.
எனவே உள்நோக்கத்துடனேயே இப்பிரச்சனையை கேரள அரசு எழுப்பி வருகிறது. உண்மையில் கேரள மக்களின் பாதுகாப்பு குறித்து கேரள அரசு கவலைப்பட்டிருந்தால் உச்சநீதிமன்றத்தையோ, மத்திய அரசையே, கேரள அரசு அணுகி இருக்க வேண்டும். அதை விடுத்து கேரள மக்களை தேவையற்ற பீதிக்குள்ளாக்கி இன்று பெரும் நெருப்பாக இப்பிரச்சனை உருவாகி இரு மாநிலங்களிலும் எரிந்து கொண்டிருக்கின்றது. மக்கள் தாக்கப்பட்டு அலுவலகங்கள், நிறுவனங்கள், கடைகள் தாக்கப்படுகின்றன. அப்பாவி மக்கள் அகதிகளாக்கப்படுகின்றனர். எனவே மக்களை தூண்டிவிட்டு இரு மாநில உதவிகளை கேள்விக்குறியாக்கி  இந்தியாவின் ஒற்றுமைக்கு சவாலை ஏற்படுத்தியுள்ள கேரள அரசை 556 பிரிவை பயன்படுத்தி மத்திய அரசு பதவிநீக்கம் செய்ய வேண்டும்” என வலியுறுத்துகிறேன் என்று பேசினார்.
“மத்திய அரசு துரித நடவடிக்கை எடுத்து கேரள அரசை கட்டுப்படுத்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்து தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.” என எஸ்.டி.பி.ஐ ன் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தனது உரையில் குறிப்பிட்டார்.
தேனி மாவட்ட தலைவர் மௌலவி. அபூபக்கர், திண்டுக்கல் மாவட்ட தலைவர் அப்துர்ரஹ்மான், மதுரை மாவட்ட தலைவர் எம்.ஜாபர் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் எஸ்.எம். ரபீக் அகமது, மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், தமிழ் பத்திரிகையாளர் சங்க மாநில துணைத்தலைவர் போ.சி.தமிழ் துரை, மாநில பேச்சாளர் கே.செய்யது இப்ராஹிம், தேனி மாவட்ட பொதுச்செயலாளர் கலீலுர் ரஹ்மான், திண்டுக்கல் மாவட்ட பொதுச்செயலாளர் சதக்கத்துல்லாஹ் ஆகியோர் உரை நிகழ்த்தினர். தேனி மாவட்ட துணைத்தலைவர் நன்றியுரை வழங்கினார்.
- http://www.thoothuonline.com/