இடதுசாரிகள் இஸ்லாமிய இயக்கங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்

உலகில் மாறி வரும் சூழ்நிலைகளிலிருந்து அனுபவங்களையும் படிப்பினைகளையும் பெற்றுக்கொண்ட இஸ்லாமிய இயக்கங்களுடன் ஒத்துழைக்க இடதுசாரிகளும் ஜனநாயக அமைப்புகளும் தயாராக வேண்டும் என ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேரள மாநிலத் தலைவர் டி.ஆரிஃப் அலீ வேண்டுகோள் விடுத்துள்ளார். அரபு நாடுகளில் நிகழ்ந்து வரும் மக்கள் புரட்சியில் இஸ்லாமிய இயக்கங்களுடன் இணைந்து அங்குள்ள இடதுசாரி அமைப்புகள் செயல்பட்டன. இந்த முன்மாதிரி இந்தியாவைப் பொறுத்து முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.  அதற்கு அவர்கள் தயாராக வேண்டும் என ஜமாஅத்தே இஸ்லாமி எதிர்பார்க்கின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இடதுசாரிகளின் மாநாடுகளில் உலக சூழ்நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கவனமாக ஆராய்ந்து அதற்கேற்றவாறு கொள்கை நிலைப்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டுவருவதைக் குறித்து ஆலோசிக்க வேண்டும். இஸ்லாமிய இயக்கங்கள் பயப்பட வேண்டிய இயக்கங்களாகும் எனும் சிந்தனையை ஏகாதிபத்திய சக்திகள் பரப்புகின்றன. அறிவுஜீவிகளும் ஜனநாயக அமைப்புகளும் அதனை ஆதரிக்கும் நிலையைத்தான் பின்பற்றின. இஸ்லாம் ஜனநாயகத்திற்கு எதிரானது எனப் பிரச்சாரம் செய்தனர். ஆனால் ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் ஆட்சி செய்துகொண்டிருந் த அரபு நாடுகளின் ஏகாதிபத்திய அரசுகள் வீழ்ச்சியுற்றதற்குப் பிறகு நடந்த தேர்தல்களில் இஸ்லாமிய இயக்கங்கள் மிக முக்கியமான, தவிர்க்க முடியாத சக்திகளாக மாறியுள்ளன. பாலஸ்தீனத்திலும் துனீஷியாவிலும் இதுதான் நடந்தது.


இஸ்லாமிய இயக்கங்கள் முன்னிலைக்கு வந்துள்ள இடங்களில் எல்லாம் ஜனநாயகமும் சமூக நல்லிணக்கமும் மலர்ந்துள்ளதையே காண முடிகிறது.  எல்லா தரப்பு மக்களுடனும் ஒத்துழைத்தே மாற்றங்களுக்காக முயற்சிக்க வேண்டும். அப்போது தான் அந்த மாற்றத்தைக் கொண்டு வரவும் முடியும் என்கிற செய்தியை ‘அரேபிய வசந்தம்’ உணர்த்துகிறது. அரபு வசந்தத்தின் புதிய காலடித் தடங்களை அறிமுகப்படுத்தவும் அதன் செய்தியை மக்கள் மயமாக்கவும் பரப்புரை இயக்கங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் அறிவித்தார்


நன்றி- சமரசம்