பத்திரிக்கைகளுக்கு மனசாட்சியே கிடையாதா?

பத்தாம் நாள் போராட்டம், பதினொன்றாம் நாள் போராட்டம், பனிரெண்டாம் நாள் போராட்டம் என ஒவ்வொரு நாளும் முழுப்பக்க படங்களோடும், ஒவ்வொரு பக்கத்திலும் எதாவது தாக்குதல் செய்திகளுமாய் தினகரன் பத்திரிகை வெறிபிடித்து வருகிறது. டயர் எரித்தாலும் செய்தி. உம்மன் சாண்டியை எரித்தாலும் செய்தி. கேரள எல்லையில் கூட்டம் சென்றாலும் செய்தி. தனியாய்  நின்றாலும் செய்தி. கேரள மக்களுக்குச் சொந்தமான கடைகளை அடித்து நொறுக்கினாலும் செய்தி.
தமிழக மக்கள் கேரளாவிலிருந்து விரட்டப்பட்டாலும் செய்தி. தினகரனுக்குத்  தாங்களும் சளைத்துப் போய்விடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் தினமலரும், தினகரனும் வரிந்து கட்டிக்கொண்டு செய்திகளை வெளியிடுகின்றன.  பிறகு முல்லைப் பெரியாறில் தண்ணீர் வரவேண்டும் என்பதா அவர்களின் நோக்கமாக இருக்கப் போகிறது?


போதாக்குறைக்கு இருக்கவே இருக்கின்றன தொலைக் காட்சிகள். தமிழக மக்களிடையே பெரும் கோபத்தையும், வெறியையும் திட்டமிட்டு இந்த பிரபல ஊடகங்கள் அனைத்தும் ஒன்றுபோல் ஊட்டிக்கொண்டு இருக்கின்றன. இதனைப் பார்க்கிற கேரள மக்களுக்கும் இதேபோல் கோபமும் வெறியும் ஏற்படும். அங்கு இருக்கிற பத்திரிகைகளும் இதே காரியத்தைத்தான் அங்கு செய்கின்றன. இரண்டு மாநிலத்து மக்களும் ஒருவருக்கொருவர் மோதி  அடித்துக் கொள்வதில்தான் இந்த ஊடகங்களுக்கு எவ்வளவு சந்தோஷம்? தங்கள் தந்திரங்கள் சரியாக கிளிக் ஆகி, பத்திரிகை விற்பனையும் அமோகமாக நடக்கிறதல்லவா?


கேரளாவில் இதுபோல்  ஊட்டப்படும் வெறிக்கு ஆளாகும் அங்குள்ள மக்களை, ‘மலையாளிகளின் அட்டகாசம்’ , ‘மலையாளத் திமிர்’ என்றெல்லாம்  இந்த பத்திரிகைகள்  அடைமொழிகள் இடுகின்றன. தமிழகத்தில் உள்ளவர்கள் கேரளாக்காரர்களின் கடையை அடித்து நொறுக்கினால் ‘தமிழர்களின் எழுச்சி’ என்றும், வீரம் போலவும் சித்தரிக்கின்றன. இந்த வார்த்தைகள் இனவெறியையும், இனப்பகைமையையும் விதைக்கின்றனவா இல்லையா? இதில் என்ன பெருமைப்படவும்,  போற்றிக்கொளவும் இருக்கிறது. மக்கள் ஒருவருக்கொருவர் தங்களை அடித்துக் கொள்வதில் என்ன எழுச்சி வேண்டிக் கிடக்கிறது? இப்படித்தானே மன்னர்களின் வரலாற்றில் படைகள் என்ற பெயரில் மக்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு வீழ்ந்து கிடந்தார்கள்?


இருதரப்பு எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் தமிழகத்திலிருந்து காய்கறி, பால், முட்டை போன்ற உணவுப்பொருட்கள் கேரளம் செல்வது தடைப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படுவது கேரள மக்கள் மட்டுமல்ல. தமிழக விவசாயிகளும்தான் என்பதை மறந்துவிடலாகாது. கேரளம் செல்லும் அனைத்துப் பாதையையும் அடைப்போம் என்றெல்லாம் இங்குள்ள சிலர் கோஷம் எழுப்புவதும் மக்களை உசுப்பிவிடுவதும் எந்த வகையிலும் பிரச்சனை தீர உதவாது என்பதோடு, தமிழக மக்களுக்கும் நலன் பயக்காது என்பது உறுதி. 


மக்களை முன்வைத்துத்தான் அணை பாதுகாப்பற்றது எனப் பிரச்சினையை ஒருபக்கம் ஆரம்பித்தார்கள். மக்களை முன்வைத்துத்தான் அணை பாதுகாப்பானது, தண்ணீர் வேண்டும் என்பதில்  இன்னொரு பக்கம் உறுதியாய் இருந்தார்கள். மக்களை முன்வைத்துத்தான்   இருபக்கமும் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்தன. மக்களை முன்வைத்துத்தான் அரசியல் கணக்குகளும், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளும் தீர்மானிக்கப்பட்டன.   ஆனால் இந்த மொத்த விவகாரத்திலும் இரு மாநிலத்து மக்களுக்கும்  என்ன பங்கு இருக்கிறது, தத்தம் தலைவர்கள் சொன்னதைக் கேட்டதைத் தவிர.  ஆனால் அந்த மக்கள்தாம் ஒருவருக்கொருவர் இன்று அடித்துக்கொண்டு சாகின்றனர். இது என்ன கொடூரம்? 


இரண்டு பக்கமும் அமைதி வேண்டி, மக்களின் நல்லிணக்கம் வேண்டி குரல்கள் எழுகின்றன. அவைகள்  இந்தப் பத்திரிகைகளால் கண்டுகொள்ளப்படுவதில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும், அதுவரை இருபக்கமும் பொறுமையாய் இருக்க வேண்டும் என சுமூகத் தீர்வுக்கு பேசும் சக்திகள் இந்த பத்திரிக்கைகளால் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.


மக்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வதை நாட்கணக்கில் படங்களாய் போட்டு ‘சேவை’ செய்யும் இந்தப் பத்திரிகைகள், மக்கள் அரசுக்கெதிராய் நடத்தும் போராட்டங்களை இதே போல் வெளியிடுவார்களா? எத்தனையோ கிராமங்களில் இன்னும் தீண்டாமைக் கொடுமை அடர்ந்து இருக்கின்றன, அதற்கெதிரான தலித் மக்களின் போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவற்றையெல்லாம் இப்படிப் படங்களாய்ப் பிடித்துப் போடுவார்களா? அரசின் மோசமானக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு வீடிழந்து, மண்ணிழந்து, வாழ்க்கையிழந்து நடுத்தெருவில் வீசியெறியப்பட்ட  மக்கள் தேசமெங்கும்  நிறைந்து கிடக்கின்றனர். அவர்களிடம்  உருக்கமானப் பேட்டிகளை வாங்கி வெளியிடுவார்களா? தங்கள் ஆதிக்கத்துக்கும்  அதிகார வர்க்கத்துக்கும் எதிரான சிறு கல்லையும் எடுத்துப் போடாத இந்த பத்திரிகைகள் மக்களின் மீது பாறாங்கல்லைத் தூக்கிப் போட கொஞ்சமும் யோசிப்பதில்லை.  தங்களுக்கு கல்லா கட்டினால் சரி.


தினகரன், தினத்தந்தி, தினமலர்களே உங்களுக்குக் கொஞ்சமும் மனசாட்சியே கிடையாதா?
http://www.maattru.com/