‘மீடியா ஒன்’ தொலைக்காட்சி :


http://www.mediaonetv.in/
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேரள மாநிலக் கிளையின் அடுத்த முயற்சியாக தொலைக்காட்சி அலைவரிசை தொடங்கப்பட உள்ளது.
‘மீடியா ஒன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா 28.11.2011 அன்று கோழிக்கோட்டில் நடைபெற்றது. சாதாரண மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் சமூகத்தின் முன் உயர்த்திக்காட்ட ஊடகங்கள் முன்வர வேண்டும்; அது காலத்தின் கட்டாயம்; அதுவே ஊடக நெறி என்றார் கேரள முதல்வர் உம்மன்சாண்டி. மாத்யமம் புரோட்காஸ்டிங் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் தொடங்கப்படவுள்ள ‘மீடியா ஒன்’ தொலைக்காட்சியின் தலைமையகக் கட்டிட அடிக்கல்நாட்டு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
  “ஜனநாயக நாட்டில் திருத்தும் சக்தியாக நிலைகொள்வதோடு ஊடகங்கள் சமூகத்தின் நன்மைக்கும் நாட்டின் வளமான எதிர்காலத்திற்கும் பணியாற்ற வேண்டும். இந்தப் பொறுப்பை செம்மையான முறையில் நிறைவேற்ற இயலும் என்பதை ‘மாத்யமம்’ நாளிதழ் திறம்பட நிரூபித்துள்ளது. ‘மாத்யமம்’ தொடங்கும் ‘மீடியா ஒன்’ தொலைக்காட்சியும் இந்தக் கடமையைச் சிறப்பாக நிறைவேற்றும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார் உம்மன்சாண்டி.

‘மீடியா ஒன்’ தொலைக்காட்சி வழியாக கேரள மக்களுக்கு அகப்பார்வையையும் விழிப்பு உணர்வையும் ஊட்டி ஒழுக்கத்திலும் பண்பாட்டிலும் சிறந்தோங்கச் செய்வதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய ‘மாத்யமம்’ குடும்பத்தின் தலைவர் டி.ஆரிஃப் அலீ குறிப்பிட்டார். ‘மாத்யமம்’ நாளிதழ் பின்பற்றிய கொள்கைகள் - விழுமங்களின் வழியில் ‘மீடியா ஒன்’ தொலைக்காட்சியும் முன்னேறிச் செல்லும் என்றார் அவர்.
http://www.mediaonetv.in/