நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது முன்னோர் வாக்கு. கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும். எனவேதான் நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். நடைபயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும் கூறுகின்றனர்.
தினமும் தவறாமல் நடை பயிற்சி மேற்கொண்டால் எடை குறையும், தசை வலுவடையும், இதயநோய்கள் எட்டிப்பார்க்காது, நீரிழிவு நோய் கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும், முதுகுவலி ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள்.கைகளை வீசி நடங்கள்
காலை 6 மணிக்கு முன் நடப்பது மிகவும் நல்லது. முடியாதவர்கள் மாலையில் நடக்கலாம். நடக்கும் போது கைகளை வீசி நடக்கவேண்டும். குறைந்த பட்சம் இரண்டு கிலோமீட்டராவது நடந்த பின்னர் 5 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு கைகளை பத்துமுறை நீட்டி மடக்க வேண்டும். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு காலை வேலைகளை பார்க்கலாம்.
உடல் எடை குறையும்
உடல் எடை அதிகரிப்பு என்பது இன்றைய கால கட்டத்தில் சாதரண ஒன்றாகிவிட்டது. சரியான உடல் உழைப்பு இல்லாதது. இன்றைய இளைய தலைமுறையினர் அமர்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பதால் உண்ணும் உணவு ஆங்காங்கே தங்கிவிடுகிறது. இதனால் உடல் எடை கூடுகிறது. இவர்கள் தினமும் அரைமணி நேரம் நடை பயிற்சி மேற்கொண்டால் உடல் எடை கட்டுக்குள் வரும். எனெனில் உடல் எடைதான் எண்ணற்ற நோய்களின் பிறப்பிடமாக உள்ளது.
புத்துணர்ச்சி அடையும்
எடை அதிகரிப்பினால் ஆங்காங்கே தசைகள் லூசாகி உடல் அமைப்பு சரியான வடிவமின்றி காணப்படும். இவர்கள் நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் உள்ள லூசான தசைகள் வலுவடையும்.காலையில் மேற்கொள்ளும் நடை பயிற்சியினால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி அடைகிறது.
நீரிழிவு கட்டுப்படும்
தினசரி காலை, மாலை இருவேளை 45 நிமிடம் நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே நீரிழிவு நேயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக நடை பயிற்சி மேற்கொள்ளவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
கொழுப்பு குறையும்
நடைபயிற்சியின் மூலம் உடலில் தேவையற்ற இடங்களில் சேர்ந்துள்ள கொழுப்பு குறைகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு குறைவதால் ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் இதயநோய் பாதிப்பு குறைகிறது. ரத்த அழுத்த நோய் கட்டுப்படும்.
முதுகு வலி எட்டிப்பார்க்காது
ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டே வேலை பார்ப்பதால் ஒரு சிலர் முதுகு வலி கழுத்துவலியினால் பாதிக்கப்படுவர். அவர்களுக்கு நடைபயிற்சி சிறந்த தீர்வாகும். காலை நேரத்தில் மேற்கொள்ளும் நடைபயிற்சி முதுகுவலியை தூர விரட்டும்.
குழந்தை பேறு கிடைக்கும்
நடை பயிற்சியினால் தீராத சிக்கல்களுக்கும் கூட தீர்வு கிடைத்திருக்கிறது. குழந்தையில்லாத தம்பதியர் கூட சீரான நடைபயிற்சி மேற்கொண்டதன் மூலம் குழந்தை பேறு பெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.