டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்,
துணைத் தலைவர், இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்ததைக் குறித்து, பலரும் பல கருத்துகளைச் சொல்லி வருகின்றனர். "உண்ணாவிரதம் இருந்தால் ஊழல் ஒழிந்துவிடுமா... சட்டங்களால் ஊழலை ஒழித்துவிட முடியுமா...'
என்றெல்லாம் விவாதங்கள் நடக்கின்றன. அவரைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்களும் இருக்கின்றன. "அவர் வகுப்புவாத முகமூடி அணிந்து வருபவர்; இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்; ராம்லீலா மைதானத்தில் நடத்திய உண்ணாவிரதத்திற்கு ஆன செலவு, 85 லட்சம் ரூபாய். அதை யார் கொடுத்தது?' என்றெல்லாம் கேட்கின்றனர். இருந்தாலும், அவர் மக்களின் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். அதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு முன், யார் இந்த ஊழலைப் பற்றி பேசினர்?
துணைத் தலைவர், இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்ததைக் குறித்து, பலரும் பல கருத்துகளைச் சொல்லி வருகின்றனர். "உண்ணாவிரதம் இருந்தால் ஊழல் ஒழிந்துவிடுமா... சட்டங்களால் ஊழலை ஒழித்துவிட முடியுமா...'
என்றெல்லாம் விவாதங்கள் நடக்கின்றன. அவரைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்களும் இருக்கின்றன. "அவர் வகுப்புவாத முகமூடி அணிந்து வருபவர்; இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்; ராம்லீலா மைதானத்தில் நடத்திய உண்ணாவிரதத்திற்கு ஆன செலவு, 85 லட்சம் ரூபாய். அதை யார் கொடுத்தது?' என்றெல்லாம் கேட்கின்றனர். இருந்தாலும், அவர் மக்களின் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். அதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு முன், யார் இந்த ஊழலைப் பற்றி பேசினர்?
ஒரு பட்டா வாங்குவதற்கு, 20 ஆயிரம் ரூபாய் கேட்கின்றனர். மின் இணைப்பு வழங்க, 10 ஆயிரம் கேட்கின்றனர். இத்தனை கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இதைப் பற்றியெல்லாம் எந்தத் தலைவர் பேசினார்; ஹசாரே பேசினார். மக்கள், அவருக்குப் பின்னால் அணி திரண்டனர். ஆகவே, அவரைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும், ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததற்காக, அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
இப்போது கேள்வி, சட்டங்களால் ஊழல் ஒழிந்துவிடுமா? இதற்குத் தீர்வாக ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்... "எல்லாரும் மாறவேண்டும்; எல்லாமும் மாற வேண்டும்...' எல்லாரும் என்றால், பொதுமக்கள் மாறவேண்டும்; அரசியல்வாதி மாறவேண்டும்; அதிகாரிகள் மாறவேண்டும்; ஆன்மிகவாதிகள் மாறவேண்டும்; ஊடகங்கள் மாறவேண்டும். இப்படி, எல்லாரும் மாறினால், ஊழல் ஒழிவதற்கு வாய்ப்பிருக்கிறது. இன்று பெரிய ஊழல்வாதி பொதுமக்கள் தான். ஊழலை எதிர்க்கிற பொதுமக்கள், நேர்மையாக நடந்துகொள்கின்றனரா? புறம்போக்கு நிலத்தையெல்லாம் வளைத்துப்போடுவது யார்? கோவில் நிலத்தை, வக்ப் சொத்தை எல்லாம் வளைத்துப்போட்டு வாழ்வது யார்? குளங்களையெல்லாம் ஆக்கிரமித்து, மனைகளாக ஆக்கியவர்கள் யார்? வெள்ளம் வீட்டுக்கு வராமலேயே, வெள்ள நிவாரண நிதி வாங்குபவர்கள் யார்? மக்கள் எந்த வகையில் நேர்மையானவர்களாக இருக்கின்றனர்? இரட்டை நிலையை மக்கள் கடைபிடிக்கின்றனர்.
இவர்கள், மற்றவர்களின் நேர்மையைப் பற்றி பேசுகின்றனர்; தங்களின் நேர்மையைப் பற்றி கவலைப்படுவது இல்லை. "ஊழல் ஊழல்' என்பர். தங்கள் வீட்டில் ஒருவர் அதிகாரியாகவோ, அரசியல்வாதியாகவோ இருந்து, முறைகேடாக சம்பாதிக்காமல் இருந்தால், அவரை, "பிழைக்கத் தெரியாதவன்' என்பர். சிலருக்கு, லஞ்சம் வாங்காத அதிகாரிகளைக் கண்டாலே பிடிக்காது. "முன்னாடி இருந்தவர்கிட்டே, காசை கொடுத்தா வேலையை முடிச்சிடலாம். இப்ப ஒருத்தன் வந்திருக்கான். காசே வாங்க மாட்டேன்கிறான். சரியான சாவுகிராக்கி' என்று சொல்லக்கூடியவர்கள் இருக்கின்றனரா, இல்லையா? லஞ்சம் இரண்டு வகை. ஒன்று, தவிர்க்க முடிந்த லஞ்சம். இரண்டு, தவிர்க்க முடியாத லஞ்சம். சில விஷயங்களில், லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டியுள்ளது. இல்லையென்றால், காலமெல்லாம் உங்கள் வீட்டுக்கு மின்சாரமே வராது; தண்ணீர் வராது; இது போராடி முடியாது. பல விஷயங்கள் தவிர்க்க முடிந்தவை. காருக்கு,"பேன்ஸி' எண் வாங்க லஞ்சம் கொடுக்கின்றனர். தாமதத்தைத் தவிர்ப்பதற்காக லஞ்சம் கொடுப்பவர்கள் இருக்கின்றனர். சட்டத்தை வளைத்துப் போடுவதற்காக லஞ்சம் கொடுப்பவர்கள் இருக்கின்றனர். அடுத்தவன் உரிமையைப் பறிக்க லஞ்சம் கொடுப்பவர்கள் இருக்கின்றனர். ஆகவே, மக்கள் மத்தியில் ஊழல் இருக்கிறது. இதை ஒழிக்க வேண்டும். மக்கள் பொறுப்பு என்ன? நல்லவர்களை ஆட்சியில் அமர்த்த வேண்டும். இதைச் செய்யலாம் தானே. நோட்டுக்கு ஓட்டு போட்டால், நல்லவர்கள் எப்படி உருவாவர்? இருப்பவர்களில் நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள்; அவ்வளவுதான். அதற்குமேல் நம்மால் இயலாது. அடுத்தபடியாக, நாம் செய்ய வேண்டிய பணி, வீட்டில் ஒரு நல்ல தலைமுறையை உருவாக்குவது. "ஊழல் செய்வது தவறு; ஏமாற்றுவது குற்றம்; அநியாயமாகச் சம்பாதிப்பது பாவம்' என குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால், அடுத்த தலைமுறையாவது சரியாக இருக்கும். நாம் நடத்தும் கல்விக்கூடங்களிலே இந்த விழும விதைகளை விதைக்கலாம் அல்லவா... அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை.
ஊழலுக்கு எதிராக பெரியளவில் கருத்துருவாக்கம் செய்ய வேண்டிய பொறுப்பு ஊடகத்துறைக்கு உள்ளது. ஊழல்வாதிகளைக் கண்டித்து எழுதுவது மட்டுமல்ல, ஊழல் செய்வது கேவலம்; அவமானம்; சுயமரியாதைக்கு இழுக்கு என்ற எண்ணத்தை, மக்களின் மனங்களில் ஆழமாக ஊடகங்கள் விதைக்க வேண்டும். ஊழல்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும். பொறி வைத்துப் பிடிக்க வேண்டும். அப்போது தான் ஊழல்வாதிகள் பயப்படுவர். அதிகம் தவறு செய்பவர்கள் அரசு ஊழியர்கள். அவர்களின் பணிக்கலாசாரத்தைப் பற்றி எந்தத் தலைவராவது, தொழிற்சங்கமாவது பேசியதுண்டா? "வாங்குற சம்பளத்துக்கு உழைக்கணும்; ஊழல் செய்யக் கூடாது' என பேசிய தலைவர்கள் எவராவது உண்டா? இந்தப் பொறுப்பு, தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு உண்டு. ஆன்மிகவாதிகளுக்கும் பொறுப்பு உள்ளது. ஒழுக்கம் என்பது, ஆன்மிகத்தின் மிக முக்கியமான பகுதி. ஆன்மிகவாதிகள் என்றால் வழிபாட்டுத் தலங்களில் உட்கார்ந்து, ஆசி வழங்குவது தான் வேலையா? பிரார்த்தனைகளையும், ஜெபங்களையும், து ஆக்களையும் ஓதுவது தான் அவர்களுடைய பணியா? மக்களின் உள்ளங்களை நேர்மைப்படுத்தும் பொறுப்பு, அவர்களுக்கு இல்லையா? ஆகவே, அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து, இப்பணியைச் செய்ய வேண்டும்.
நாங்கள் மருத்துவம் படிக்க விண்ணப்பம் செய்தபோது, "இன்டர்வியூ' முறை இருந்தது. "இன்டர்வியூ'வில், அதிகாரி விரும்பியபடி மதிப்பெண் போட்டுக்கொள்ளலாம். அதன் பிறகு எம்.ஜி.ஆர்., தான் நுழைவுத் தேர்வு முறையைக் கொண்டு வந்தார். அதோடு, மருத்துவத் துறையில் ஊழல் ஒழிந்தது. ஜாதிச் சான்றிதழைப் பள்ளிக்கூடத்திலேயே வழங்க வேண்டும் என்ற முறை, இப்போது வந்துள்ளது. ஆன்-லைனில் எல்லா சான்றிதழ்களையும் பெற முடியும் எனும் நிலை வந்துள்ளது. இப்படி நடவடிக்கைகள் எடுத்தால், மாற்றங்கள் உருவாக வாய்ப்புள்ளது. நீதிமன்றச் சீர்திருத்தம் தேவை. இன்று ஏன் ஊழல் வழக்குகளோடு நீதிமன்றத்திற்குப் போக முடியவில்லை? தகப்பன் காலத்தில் வழக்குப் போட்டால், தனயன் காலத்தில் தீர்ப்பு வரும்; மிக அதிகமாக செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆகவே இவற்றிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும். காவல் துறையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். அக்கவுன்டபிலிட்டி - பதில் சொல்ல வேண்டும் என்ற நிலையை, எல்லா துறையிலும் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு அரசு நிறுவனமும் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் எனும் நிலை இருக்குமானால், மாற்றங்கள் வரும்.
"தட்டிக் கேட்பதா? தட்டிக் கேட்டால் உயிரையே தட்டிச்சென்றுவிடுவர். மதுரையிலே லீலாவதிக்கு நேர்ந்த கதி உங்களுக்கெல்லாம் தெரியாதா?' என நீங்கள் கேட்பது புரிகிறது; உண்மை தான். ஒரு குழுவாக, அமைப்பாக இருந்து தட்டிக்கேட்க வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்யுங்கள். ஊழல்வாதிகளை விசாரணைக்குக் கொண்டுவர வேண்டும். இடமாற்றம் செய்வது, தீர்வு கிடையாது. ராஜாஜியிடம் ஒரு வழக்கு கொண்டு வரப்பட்டது. "இவர் எங்கள் ஊரில் ஊழல் செய்கிறார். இவரை வேறு இடத்திற்கு மாற்றவும்' என்றனர். "ஊழலை ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு மாற்றச் சொல்கிறீர்களா?' எனக் கேட்டார் ராஜாஜி. இது ஒரு தண்டனையா? "அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், தண்டனை அளிப்போம்' என்றார் அவர். ஒழுக்கமுள்ள மனிதர்களை, நேர்மையாக வாழும் மனிதர்களை உருவாக்காத வரை, ஊழலை ஒழிக்கவே முடியாது. நீங்கள் போடுகிற ஊழல் தடுப்பு ஆணையர், லோக்பாலைக் கண்காணிக்கிற அதிகாரி, சி.ஏ.ஜி., - சி.பி.ஐ., யாராக வைத்துக் கொள்ளுங்கள்... அவர்கள் ஊழல்வாதியாக இருந்தால் என்ன செய்ய முடியும்? "இறைவன் இருக்கிறான்; அவன் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும்' என்ற உணர்வைக் கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும். நாம் அனைவரும், ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுப்போம். எல்லாரையும் மாற்றுவோம்; எல்லாவற்றையும் மாற்றுவோம்.