நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி, தான் போட்டியிட்ட மூன்று இடங்களில் இரண்டில் வெற்றி பெற்று தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளது.
வெற்றிபெற்ற வேட்பாளர்களான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கும் சகோதரர் அஸ்லம் பாட்சா அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். பேராசிரியரின் சீரிய தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியின் வெற்றிப் பயணம் தொடர வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
சேப்பாக்கம்- திருவெல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை தமீம் அன்சாரி இழந்திருக்கிறார். அது கௌரவமான தோல்விதான் என்பதாலும், இந்தத் தோல்வி எதிர்காலத்தில் பல வெற்றிகளுக்குப் படிகட்டாய் அமையும் என்பதாலும் இளவல் தமீமுக்கும் எனது வாழ்த்துக்கள். கவலையை விடுங்கள் தமீம், காலம் இன்னும் இருக்கிறது இன்ஷா அல்லாஹ்!
அதிமுகவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்ற பிறகு புதிய முதல்வரின் பதவி ஏற்பு விழாவை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணித்தது நட்புக்கும் தோழமைக்கும் உகந்த செயலாகவோ பண்பட்ட நடத்தையாகவோ தெரியவில்லை. அதற்கு சொல்லப்பட்ட காரணம் என்ன தெரியுமா? குஜராத் முதல்வர் அந்த விழாவில் கலந்து கொண்டதுதான் காரணமாம். எந்த வகையில் யோசித்தாலும் இது நியாயமாகப்படவில்லை.
அதிமுக கட்சி பற்றியும் அதன் தலைமை பற்றியும் மனிதநேய மக்கள் கட்சி அறியாததல்ல. ம. ம. க. கூட்டணிப்பற்றி அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் ஜெயலலிதாவுக்கு மோடி நண்பர் தான்; தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் செய்தபோது ம் ஜெயலலிதாவுக்கு மோடி நண்பர் தான்; கூட்டணி கட்சித் தலைவர்கள் எல்லாம் ஒரே மேடையில் அமர்ந்து தேர்தல் பிரசாரம் செய்த போதும் ஜெயலலிதாவுக்கு மோடி நண்பர் தான், அப்பொழுதெல்லாம் ஜெயலலிதாவின் மோடியின் நட்பு நினைவுக்கு வரவில்லையா? தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்கும்போது தான் மனித நேய மக்கள் கட்சிக்கு ஜெயலலிதாவின் மோடி நட்பு நினைவுக்கு வந்ததா? அதனால் தான் அந்த விழாவை அது புறக்கணித்ததா?
தேசிய அளவில் பாசிசத்தையும் இந்துத்துவ வெறியாட்டங்களையும் கடுமையாக எதிர்த்துப் போரிடுபவர்கள் இடதுசாரிக் கட்சிகள். கொள்கை அளவில் கடுமையாக வேறுபடும் பரதன் போன்ற இடதுசாரித் தலைவர்கள்கூட மோடியிடம் அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்தும்போது, பகைவர்களுக்கும் கண்ணியம் அளிக்கும் இஸ்லாமியப் பண்பாடு மனித நேய மக்கள் கட்சியிடம் வெளிப்பட்டிருக்கவேண்டாமா?
இன்னும் வெளிப்படையாகச் சொல்லப் போனால் மோடியை வெறுத்து ஒதுக்குவதைவிட அவருக்கும் நமது அழைப்பைச் சமர்ப்பித்தால் என்ன? இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் அவருடைய தவறான எண்ணத்தை மாற்றுவதற்கு நாம் முயன்றால் என்ன? இதுபோன்ற விழாக்களையும் தொடர்புகளையும் அழைப்பியல் கோணத்தில் பயன்படுத்திக் கொள்வதுதானே புத்திசாலித்தனம்? அதுதானே இஸ்லாமிய வரலாறு? உருவிய வாளுடன் நபிகளாரையே கொல்லவந்த உமர்தானே பின்னாளில் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் ஆனார்? 'நீதிக்கொரு உமர்' என்று வரலாறு அவரைப் போற்றவில்லையா?
எல்லோரும் நம் அழைப்புக்குரியவர்களே தவிர யாரும் நமது வெறுப்புக்குரியவர் அல்லர்.
ஆகவே-
பதவி ஏற்பு விழாவை ம. ம. க. புறக்கணித்தது நியாயமாகப்படவில்லை.
மோடி உட்பட யாரையும் நாம் வெறுக்கவோ ஒதுக்கவோ தேவையில்லை:மாறாக அவரைப் போன்றவர்களுக்கும் சத்திய அழைப்பை எடுத்துரைப்பதுதான் நமது கடமை
என்பது என் கருத்து.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
- சிராஜுல்ஹசன்
நன்றி : சமரசம்